அந்த அமெரிக்க எழுத்தாளரின் வயது 73. ஏழு நாவல்கள் மட்டுமே எழுதி
இருக்கிறார். ஆனால், மைக்கேல் ஜாக்சன் அளவுக்கு உலகம் பூராவும் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவ்வளவுக்கும் அவருடைய நாவல்களை முழுமையாகப் புரிந்துகொண்டவர்கள் வெகு அரிது. அந்த நாவல்களை விளக்கியே நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வந்துள்ளன. அவர் ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர் என்பதால், நானும் அவருடைய ரசிகனே. (எப்படியும் விரைவில் பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்கிவிடுகிறேன்). இவருடைய Gravity's Rainbow என்ற நாவலை இதோடு ஏழு முறை படித்துவிட்டேன். பல இடங்கள் புரியவில்லை. தெர்மோ டைனமிக்ஸின் இரண்டாவது விதி தெரிந்தால்தான் புரியும் என்றார்கள். அந்த விதியைப் படித்தேன். ஏதோ entropy, δq/T என்றெல்லாம் வருகிறது. இதை எல்லாம் புரிந்துகொள்ள நம் தலைவிதிதான் சரியில்லை என்று ஓடி வந்துவிட்டேன். அந்த எழுத்தாளரின் பெயர் தாமஸ் பிஞ்ச்சன் (Thomas Pynchon). இன்று வரை அவர் எப்படி இருப்பார், எங்கே வசிக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ஒரு பேட்டிகூடக் கொடுத்தது இல்லை.
பிஞ்ச்சன் அப்படி இருக்கலாம். ஒரு தமிழ் எழுத்தாளனான நான் அப்படி இருக்க முடியுமா? என் புத்தகங்களின் பின் அட்டையில் உள்ள என் புகைப்படங்களை ஒரு சென்டிமீட்டர் பெரிதாகப் போட்டால் என்ன என்று என் பதிப்பாளரிடம் அவ்வப்போது நான் சண்டை போடுவது உண்டு. 'பக்கத்துக்குப் பக்கம் உங்கள் போட்டோவைப் போட்டுவிடுகிறேன்!' என்று சொல்லிவிட்டு, ஏற்கெனவே வெளியிடும் ஸ்டாம்ப் சைஸ் போட்டோவில் மேலும் ஒரு மில்லிமீட்டர் குறைத்துவிடுவார் பதிப்பாளர்.
என் எழுத்தில் மது விலக்கை அமல்படுத்துவது என்று முடிவு செய்து இருக்கிறேன். காரணம், சமூகவியலும் அரசியலும் சார்ந்தது. நம் நாட்டில் நடப்பது ஜனநாயகமே அல்ல என்பது என் கருத்து. ஜனநாயகத்தில் பொதுஜனமே நாயகர்கள்; ஆட்சியில் இருப்போர் நாயகர்களுக்காகச் சேவை செய்யும் சேவகர்கள். ஆனால், இந்திய நிலைமை அப்படியா இருக்கிறது? ஒருமுறை என் ஐரோப்பியப் பயணத்தின்போது லக்ஸம்பர்க் சென்று இருந்தேன். ஃபிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடு களுக்கு நடுவில் உள்ள மிகச் சிறிய நாடு அது. இந்த உலகின் சொர்க்க பூமி களில் ஒன்று. ஒருநாள் இரவுக் காட்சிக் காக அங்கு இருந்த உட்டோப்பியா என்ற சினிமா தியேட்டருக்குச் சென்று இருந்தேன். வரிசையில் என்னுடன் நின்றுகொண்டு இருந்த நண்பர் காதைக் கடித்தார். எனக்குப் பின்னால் நின்று கொண்டு இருந்தவர் அந்த நாட்டின் பிரதம மந்திரி என்று!
நம் நாட்டில் இப்படி எதிர்பார்க்க முடியுமா? ஜனாதிபதி துவங்கி அதிகாரத்தில் உள்ள யாராக இருந்தாலும் சரி, அவர் போக்குவரத்து விதிகளை மீறினால் ஒரு டிராஃபிக் போலீஸ் அவருக்கு அந்த இடத்திலேயே அபரா தம் விதிக்க வேண்டும். இதுதான் வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள யதார்த்தம். நம் தேசத்தில் இப்படிச் செய்தால், அந்த போலீஸ்காரரின் நிலை என்னவாகும்?
|