ஆச்சர்யமான உண்மை தெரியுமா? உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளிலும் பெண் மிருகம்தான் ஆணை கலவிக்குத் தேர்வு செய்கிறது. ஆண், பிற ஆண்களோடு போட்டியிட்டு, 'தான் பெரிய கொம்பன்' என்பதை நிரூபிக்கும். அந்தப் போட்டியில் ஜெயிக்கும் ஆணை மட்டும் தன்னோடு இணைய பெண் அனுமதிக்கும். இப்படி மிகக் கவனமாக ஜெயிப்பவனையே தேர்வு செய்து பெண் இனம் சேருவதைத்தான் செக்ஷ§வல் செலெக்ஷன் (sexual selection) என்றார் சார்லஸ் டார்வின். இந்த மரபணுப் போட்டியில் ஜெயிக்கவே உலகெங்கும் உள்ள ஆண் விலங்குகள் கொம்பு, பிடரி, கொண்டை, சிறகு, தோகை, தந்தம் என்று பலவிதங்களில் 'என் மரபணு எவ்வளவு உசத்தியானது பார்!' என்று விளம்பரப்படுத்தும் உடல் பாகங்களைக்கொண்டு இருக்கின்றன.
ஆதிகால மனிதர்களும் இந்த இயற்கை வழியில்தான் செயல்பட்டார்கள். ஆண் தன் வீரம், பராக்கிரமம், விளையாட்டு, கலை, பேச்சு, சாகசம், திறமை என்று வெளிப்படுத்துவான். அல்லது மற்ற மிருகங்களின் கவர்ச்சி பாகங்களைக் கடன் வாங்கி அதை அணிந்துகொண்டு பெண்களை அசத்தப் பார்ப்பான். இப்படி எல்லாம் தன் கவர்ச்சியைக் கடை பரப்பிக் காட்டுபவனைப் பெண் லபக் என்று பிடித்துக்கொள்வாள். அவனது மரபணுக்களைக்கொண்டு வலிமையான பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வாள்.
'சேச்சே, இதெல்லாம் அபாண்டம். பெண்கள் இப்படி எல்லாம் செய்யவே மாட்டார்கள்' என்று நம்ப மறுக்கிறீர்களா? ராமாயண சீதை ராமனை எப்படித் தேர்ந்தெடுத்தாள்? 'கௌசல்யா சுப்ரஜா ராமா, இதோ சீதை நான் உனக்குத்தான்' என்று உடனே அவன் மடியில் விழுந்துவிட்டாளா? 'மஹா விஷ்ணுவின் அவதாரமாகவே இருந்தாலும், இந்த வில்லை உடைத்து உன் வலிமையை நிரூபி' என்று சொல்லவில்லையா? ராமன் மட்டும் அன்று வில்லை உடைக்காமல் இருந்திருந்தால், அண்ணலும் நோக்கி அவளும் நோக்கியதெல்லாம் உட்டாலக்கடி ஆகியிருக்குமே!
|