ஒருமுறை பாங்காக் சென்றுஇருந்தபோது, ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டு இருந்தேன். மென்பொருள் துறையில் பெரிய பதவியில் இருப்பவர்கள் விடுமுறைக்காக அங்கே கூடியிருந்தார்கள். தாய்லாந்தின் உணவுப் பழக்கம் மிகவும் விசித்திரமானது. தவளை, ஆமை, பாம்பு, குரங்குத் தலை என்று எந்த உயிரினத்தையும் விட்டுவிடாமல் சாப்பிடுவார்கள். ஆனால், குரங்குத் தலை மட்டும் கிராமப்புறங்களில்தான் கிடைக்கும். ஈசானியம் என்றால் சம்ஸ்கிருதத்தில் வட கிழக்கு என்று பொருள். தாய்லாந்து மொழியில் சம்ஸ்கிருதம் அதிகம். வட கிழக்கு தாய்லாந்தை அவர்கள் ஈசான் என்கிறார்கள். பாங்காக்கில் நான் சந்தித்த வழிகாட்டிப் பெண் ஒருவர் என்னை ஈசானில் இருக்கும் தன் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். அந்தக் கிராமத்தை ஒட்டி ஓடுகிறது மெக்கோங் நதி. எதிர்க் கரையில் லாவோஸ். திபெத்தில் இருந்து கிளம்பி சீனா, பர்மா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் என்று ஏழு நாடுகளைக் கடக்கும் அந்த அற்புதமான நதிக் கரையில் அமர்ந்து தவளைக் கறி சாப்பிட்ட ஒரு மாலை நேரத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது. நன்கு கொழுகொழுவென்று வளர்க்கப்பட்ட பச்சைத் தவளையின் கால், சிக்கன் லெக் பீஸைவிட அட்டகாசம். (பச்சை என்றது நிறத்தை; மற்றபடி நன்றாக சமைத்துத்தான் கொடுத்தார்கள்). குரங்கு மூளையை எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்பதை நான் விகடனில் எழுதினால், செழியனின் 'மிஸ்டர் மார்க்' சிறுகதையில் எழுதியதுபோல் டேஷ் டேஷ் என்றுதான் போட வேண்டி இருக்கும்; ஆளை விடுங்கள்.மேற்படி பாங்காக் விருந்தில் ஜப்பானியர்கள் பலர் கலந்துகொண்டதால் மேஜையில் ஒரு விசேஷமான ஜப்பானிய உணவும் இருந்தது. (சிறிது மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள். ரொம்ப அதிர்ச்சியாக இருக்கும்). சினையாக இருக்கும் மாட்டின் வயிற்றில் இருக்கும் மூன்று அல்லது நான்கு மாத கன்றுக் குட்டியை மாட்டின் வயிற்றில் இருந்து அறுத்து எடுத்து, அதில் உப்பும் இன்ன பிறவும் (மசாலா அல்ல) கலந்து அப்படியே முழுசாக bar be que ஸ்டைலில் சுட்டோ, அவித்தோ பரிமாறுவார்கள். மிகப் பெரிய வி.ஐ.பி-க்களுக்கு மட்டுமே தரப்படும் சிறப்பு உணவு இது. அப்படி வைக்கப்பட்டு இருந்த கன்றுக் குட்டியின் வயிற்றை அந்த நிறுவனத்தின் தலைவரான இச்சிரோ என்ற ஜப்பானியர் கத்தியால் அறுத்தபோது என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவரை நெருங்கி நின்றேன். அதைப் பார்த்து என் நண்பரும் அருகில் வந்தார். அப்போது திடீரென்று அந்த மாமிசத்தில் இருந்து வெளிப்பட்ட ரத்தத்தைப் பார்த்ததும் என் நண்பர் லேசாக 'ஹ' என்ற சத்தத்தை எழுப்பிவிட்டார். யாருக்கும் கேட்கவில்லை. ஆனாலும், இச்சிரோவுக்குக் கேட்டுவிட்டது என்பதைப் பிறகு அவர் எங்களுடன் பேசியபோது உணர்ந்தோம்.
என் நண்பர் அந்த நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பதால் உலகம் பூராவும் சுற்றி வர வேண்டிய பொறுப்பில் உள்ளவர். அதைத்தான் இச்சிரோ சுட்டிக் காட்டினார். வெவ்வேறு கலாசாரங்களைக்கொண்ட மனிதர்களோடு பழக வேண்டிய நிலையில் உள்ள நீங்கள், இதைக் கண்டு அதிர்ச்சி அடையலாமா? இதைச் சாப்பிடும் நாங்கள் என்ன செத்தா போய்விட்டோம்? எங்களுடைய சராசரி வயது 90 என்று உங்களுக்குத் தெரியுமா? கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார் இச்சிரோ.
"அது மட்டும் அல்ல; இந்தியர் களின் முக்கியமான பிரச்னை ஹிப்பாக்ரஸி. கற்பு, நேர்மை, அது இது என்று வாய் கிழியப் பேசுவார்கள். ஆனால் நடைமுறையில்?" என்று கேட்டுவிட்டு அங்கிருந்த ஓர் இந்தியரைக் காண்பித்தார். சிப்பந்திகள் மதுவையும் மற்ற குளிர்பானங்களையும் ட்ரேயில் வைத்து விநியோகித்துக்கொண்டு இருக்க, அந்த இந்தியர் மட்டும் நான்கைந்து மதுக் கோப் பைகளை எடுத்துத் தன்னருகே வைத்துக்கொண்டார். கடைசியில் நடந்தது அதைவிட அற்பம். விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு சில பரிசுப் பொருட்களை வழங்கப்போவதாக அறிவித்தார் இச்சிரோ. அந்த விஸ்தாரமான ஹாலின் ஒரு மூலையில் கீ செயின், விலை உயர்ந்த பர்ஸ் போன்ற வஸ்துக்கள் வைக்கப்பட்டு இருந் தன. நான் இரண்டுமே பயன்படுத்துவது இல்லை என்பதால், எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. என் நண்பர் ஒரு பர்ஸை எடுத்தார். என்¬னப்போலவே பலரும் அந்தப் பொருட்களை மேய்ந்துவிட்டுச் சென்றுவிட்டனர். தேவைப்பட்டால்தானே ஒரு பொருளை எடுக்கலாம். அப்போது அந்த இந்தியர் வெகுவேகமாக வந்து பொருட்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த எங்களை ஒரு தள்ளு தள்ளிவிட்டு, பர்ஸ்களையும் கீ செயினையும் கை கொள்ளும் அளவுக்கு அள்ளிக்கொண்டு சென்றார். இச்சிரோ என்னைப் பார்த்து மௌனமாகப் புன்னகைத்தார்.
|