ஆனால், இதிலும் ஒரு பிரச்னை. குழந்தை என்றால் எந்தக் குழந்தை? பெண் குழந்தை என்றால், அது இன்னொருவர் வீட்டுக்குப் போய்விடும். காலம் முழுக்க அந்தக் குழந்தையைவைத்துக் காய் நகர்த்த முடியாது. ஆனால், ஆண் குழந்தை? அப்பாவுக்குப் பிறகு அவன்தான் குடும்பப் பெயர், வருமானம், ஆஸ்தி, அந்தஸ்து என்று எல்லாவற்றையும் கட்டிக்காக்கப் போகிறவன். பெற்றோருடனே இருந்து, அவர்கள் மறைவுக்குப் பிறகும் பித்ரு கடன்களைச் செய்யக் கடமைப்பட்டவன். அதனால், ஆண் குழந்தையைப் பெற்றால், பெண்களுக்குக் கையில் ஒரு ரெடிமேட் ஆயுதம் கிடைத்த திருப்தி. இதிலும் ஒரு பிரச்னை. ஒருவேளை, அவள் கணவனுக்குப் பல தாரங்கள் இருந்து எல்லோருமே ஆண் குழந்தைகளாகப் பெற்றிருந்தால், அப்புறம் எல்லா மனைவியருக்குமே சமமான பவர் என்றாகிவிடுமே. இப்படி இருந்தால் ஒருத்தி மட்டும் தன் பிழைப்பு விகிதத்தை எப்படி அதிகரித்துக்கொள்ள முடியும்?
5: கொண்டவனை நம்பினால்தானே இப்படிக் கண்டவளோடு போட்டியிடும் நிலைமை. தானே பெற்றெடுத்த தன் மகனைத் தனக்குச் சாதகமாக வளர்த்து, கடைசி வரை அவனையே தனக்குத் துணையாக வைத்துக்கொண்டால், எப்படியும் ஒரு காலத்தில் தந்தையின் எல்லா பவரும் அவனுக்குத்தானே வந்து சேரும். அட, தந்தையின் பவர் இல்லாவிட்டாலும், தனக்கென்று உள்ள ஆற்றலினால் மகன் சாதித்துவிட்டால் அது தாய்க்குச் சாதகமான அம்சம்தானே? அவனுக்கு ஆயிரம் மனைவியர் கிடைக்கலாம். ஆனால், தாய் என்றால் இவள் ஒருத்தி மட்டும்தானே?
ஆக ஆண், பெண்ணை அடிமைப்படுத்தி, அவளை வெறும் ஒரு பிரசவ இயந்திரமாகப் பயன்படுத்தினான். ஆனால், பெண்ணோ, தன் பிரசவ சக்தியையே ஓர் எதிர் உத்தியாகப் பயன்படுத்தி, ஆண் குழந்தையைத் தனக்கு அடிமையாக்கிக்கொண்டாள். அது எப்படி, பெண்ணுக்காவது கல்வி அறிவு இல்லை. ஆனால், ஆண் அறிவில் சிறந்தவன், உலகம் அறிந்தவன், பெண்ணைக் காட்டிலும் பல விதங்களில் வலிமையானவன். இப்பேர்ப்பட்ட ஆண் எப்படிப் பெண்ணுக்கு அடிமையாகிப்போனான், எப்படி இதை அனுமதித்தான்? என்றெல்லாம் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா? இவ்வளவு வலிமையான இந்த ஆணை அடக்கும் பல அங்குசங்கள் பெண்ணின் கையில் இருந்ததுதான் காரணம். அதுவும் தான் பெற்றெடுத்து வளர்த்த பிள்ளையை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது அவளுக்குத் தெரியாதா? யாரோ ஒருத்தி பெற்ற ஆணான தன் கணவனையே தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் அவளால், தான் பெற்ற தன் மகனைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொள்வது பெரிய காரியமா என்ன?
|