இன்னொரு விஷயம்... காலில் செய்தி கட்டிக்கொண்டு போகும் புறாக்களைப் போல் நானும் ஒரு தபால்காரன் மட்டுமே. எனக்குக் கிடைத்ததை உங்களுக்குத் தருகிறேன். இதில், உங்களுக்கு உடன்பாடு என்றால் சந்தோஷம். முரண்பட்டால், இரட்டிப்புச் சந்தோஷம். ஏனென்றால், 'நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம்' என்றே எப்போதும் என் பேச்சை ஆரம்பிப்பேன்!
ஹார்மோனியப் பெட்டியும் புத்தனின் நிழலும்
"மரம் கொத்திப் பறவை தெரியும்; அது என்ன மனம் கொத்திப் பறவை?" என்று கேட்டார் நண்பர்.
"உங்களுக்குக் குளத்தில் குளித்த அனுபவம் இருக்கிறதா? அப்போது மீன்கள் வந்து உங்கள் பாதங்களை லேசாகக் கடிக்கும். குறுகுறுவென்று இருக்கும் அந்த உணர்வு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம். துருக்கி, ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்கென்று தனி 'ஸ்பா' (Spa) உண்டு. இப்போது அந்த மீன் மூலம் பெடிக்யூர் செய்யும் மையங்கள் சென்னையிலும் வந்துவிட்டன. (அரை மணி நேரத்துக்கு 500 ரூபாய்!) இப்படி நம் கால்களைக் கொத்தி மசாஜ் செய்யும் மீன்களை டாக்டர் ஃபிஷ் என்கிறார்கள். இந்தக் கட்டுரைத் தொடரில் உங்கள் மனங்களை அந்த டாக்டர் ஃபிஷ் மாதிரி கொத்தப்போகிறேன். அதுதான் அந்தப் பெயர்!" என்று நண்பரிடம் சொன்னேன்.
இயக்குநர்கள் நடிக்க வரும் காலம் இது. இப்போது ஓர் எழுத்தா ளரும். மிஷ்கின், என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவரை எனக் குப் பிடித்துப்போனதற்குப் பல காரணங்கள் உண்டு. என்னைப் போலவே மனதில் பட்டதைப் பேசு வார். தவிர, இசை, ஓவியம், இலக்கியம் என்று ரசனைக்காரர்.
இரவு 9 மணிக்குத்தான் எனக்கு அழைப்பு வரும். சென்றால், விடிகாலை 5 மணி வரை பேசிக்கொண்டு இருப்போம். ஒருநாள் நான் சென்றபோது அவர் தன் உதவியாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். மார்ட்டின் ஸ்கார்ஸஸி இயக்கிய Kundun என்ற படத்தின் இறுதிக் காட்சியில் 10 நிமிடங்கள் ஓடும் இசை வரும். நான் அந்தப் படத்தை அப்போது பார்த்திருக்கவில்லை. மிஷ்கின் கதையைச் சொன்னார்.
1937 முதல் 1959 வரை திபெத்தில் நடந்த சம்பவங்கள்தான் 'குண்டுன்'. மொழி, மதம், கலாசாரம்போன்ற எல்லா விஷயங்களிலும் சீனாவில் இருந்து வேறுபட்டு, தனித்துவம்கொண்ட நாடாக இருந்த திபெத்தைக் கபளீகரம் செய்து, தங்கள் நாட்டோடு சேர்த்துக்கொண்டது மாவோவின் சீனா. இது சம்பந்தமாக, மாவோவை நேரில் சென்று சந்தித்தார் தலாய் லாமா. மதத்தை நம்பும் மூடர்கள் நீங்கள் என்று சொல்லி அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார் மாவோ. இதைத் தொடர்ந்து சீனாவை எதிர்த்து திபெத்தில் கிளர்ச்சி ஏற்பட்டது. தலாய் லாமாவின் உயிருக்கு கம்யூனிஸ்ட் படைகளால் ஆபத்து ஏற்படவே, திபெத்தில் இருந்து தப்பி இந்தியாவுக்கு வந்தார் தலாய் லாமா. அதோடு படம் முடிகிறது.
தலாய் லாமாவின் அந்தப் பயணத்தில் வரும் பின்னணி இசையைத்தான் மிஷ்கின் அப்போது ஓடவிட்டார். வெறும் இசையை மட்டுமே கேட்டு, தலாய் லாமா எந்தக் கணத்தில் இந்திய எல்லையைத் தொடுகிறார் என்று சொல்ல வேண்டும். அந்த அறையின் மிக மெலிதான வெளிச்சத்தில் இசை மட்டும் ஒலிக்கிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளரான Phillip Glass-ன் இசை. கண்களை மூடிக்கொண்டு அந்தப் பயணத்தில் ஐக்கியமாகிறேன். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் எனக்கு நம்பிக்கையின் ஒளிக் கீற்று தெரிகிறது. கண் களைத் திறந்து மிஷ்கினைப் பார்த்துப் புன்னகைக்க, அவரும் சிரிக்கிறார்.
எங்கள் சந்திப்பில், புத்தகம், இசை, சினிமா என்பதோடு, சமயங்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமும் இடம்பெறும். அப்படி ஒருநாள் அவருடைய 'யுத்தம் செய்' படத்தில் வரும் 'கன்னித் தீவு பெண்ணா, கட்டெறும்புக் கண்ணா' என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டேன். அதைப் பார்த்துவிட்டோ என்னவோ, அந்தப் பாடலில் என்னையும் இடம்பெறச் செய்தார் மிஷ்கின்.
ஆறு நாட்கள் நடந்தது அந்தப் பாடல் படப்பிடிப்பு. மாலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை. இடையில் ஒருநாள் மழை பெய்து கெடுத்தது. கபிலன் எழுதிய இந்தத் துள்ளல் பாடலுக்காக மிஷ்கினும் அவருடைய குழுவும் ஆறு மாதங்கள் உழைத்ததை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அப்படி அணுஅணுவாகச் செதுக்கினார்கள். எல்லோருமே புதியவர்கள். இசையமைப்பாளர் கே என்ற இளைஞர். (ஆமாம், காஃப்காவின் கதாபாத்திரம் 'கே'தான்). பார்க்க பள்ளி மாணவர் மாதிரி இருப்பார். ஒளியமைப்பு சத்யா. பாடியவர் எம்.எல்.ஆர். கார்த்திக். நடன அமைப்பு பாண்டி.
பாட்டுக்கு ஆடியவர்கள் அமீரும் நீத்து சந்த்ராவும். அவர்களோடு அடியேனும். நான்கு நிமிடப் பாடலில் நான் இடம்பெறுவது 40 நொடிகள். அதற்கே கிறுகிறுத்துவிட்டது. முதல் காரணம், என் வேலை நேரம். நான் காலை 4 மணிக்கு எழுந்து, இரவு 10 மணிக்கு உறங்கச் செல்பவன். யோகா, வாக்கிங் எல்லாம் உண்டு என்பதால் 10 மணி ஆனதுமே தலை கிறங்க ஆரம்பித்துவிடும். அமீரும் நீத்துவும் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். நானோ தூக்கக் கலக்கத்தில் சாமி ஆடிக்கொண்டு இருக்கிறேன். மிஷ்கினுக்கு ஒரே ஆச்சர்யம். "முகத்தில் என்ன இப்படித் தூக்கம் வழிகிறது?" என்கிறார்.
|