புதியவனுடன் பேச ஆரம்பித்த பிறகு, அவளுக்குத் தன் கணவனுடைய நெருக்கம் பிடிப்பது இல்லை. தன் கணவனை விட்டுவிட்டு இன்னோர் ஆளோடு இப்படி கொஞ்சிக்கொண்டு இருப்பது தவறு என்று அவளுக்குக் குற்ற உணர்ச்சி குத்தாமல் இல்லை. இருந்தாலும், விட முடியவில்லை. மிக மிக ரகசியமாக அவளின் தொலைபேசிக் காதல் தொடர்ந்துகொண்டே இருந்தது.
அது எப்படி, இந்தத் தமிழ்த் திருநாட்டில் ஒரு பெண் இப்படி நடக்கலாமா? இது பத்தினி தர்மத்துக்குப் புறம்பானது அல்லவா? கட்டின கணவனை விட்டுவிட்டு ஒருத்தி இப்படி எல்லாம் கண்டவனோடு கடலை போட்டுக்கொண்டு இருக்கலாமோ?
என்னதான் வியாக்கியானம் பேசினாலும், இதுபோன்ற நடப்புக்களைத் தடுக்க முடிவது இல்லை. காரணம், மனிதன் நியமித்த விதிகள் எல்லாவற்றையும் கடந்து, எல்லாம் வல்ல இயற்கை ஏற்கெனவே ஏற்படுத்தி உள்ள வேறு சில விதிகளும் இருக்கின்றன. இந்த விதிகள் ரொம்பவே வலிமையானவை என்பதால், இவற்றுக்கு நாம் உட்பட்டுவிடுகிறோம். விரும்பியோ, விரும்பாமலோ!
இதற்கு நேர்மாறாகவும் நடப்பது உண்டு. அவன் அந்தப் பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தான். அவள் வேண்டாம் வேண்டாம் என்று பல தடைகளை முன் நிறுத்தியபோதும், அவளை மசியவைத்தான். வேறு வேறு சாதிகள் என்பதால் வழக்கம்போல பெருசுகள் பெரிதாய் மறுத்தார்கள். குடும்ப மானம், குல கௌரவம், லொட்டு லொசுக்கு என்றெல்லாம் அவர்கள் மொக்கை போட, சத்தம் போடாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டு, பெற்றோருக்கு செக் வைத்தார்கள் காதலர்கள். வேறு வழி இல்லாமல் திருமணத்தை ஏற்றுக்கொண்டார்கள் இருவீட்டாரும்.
ஆனால், பையனின் அம்மா... "இந்தக் கல்யாணத்தை நான் ஏத்துக்கவே மாட்டேன்" என்று ஒரு தற்கொலை நாடகம் நடத்த, அன்றோடு தீர்ந்துபோனது பையனின் ஆண்மை எல்லாம். அதற்குப் பிறகு மனைவியுடன் அவனால் ஆசையாகவே இருக்க முடியவில்லை. காதலர்களாக இருந்தபோது அவன் அவளை ஆசையாகத் தொட்டபோதெல்லாம், 'கல்யாணத்துக்கு அப்புறம்' என்று காக்கவைத்த காலம் போய்; இப்போது அவள், அவன் எப்போதடா கிட்டே வருவான் என்று ஏங்கிக்கிடக்க... அவன் பக்கத்தில் வந்ததும், 'எங்கம்மாவை நீ மதிக்கிறதே இல்லை' என்று ஆரம்பித்தான் என்றால்... ராத்திரி முழுக்க ஒரே ரம்பம்தான்.
அழகான பெண்டாட்டி ஆவலாகப் பக்கத்தில் இருக்கும்போது, அந்த நேரம் பார்த்து, அம்மாவை மதிக்கவில்லை என்று கவலைப்படுபவன் ஒரு ஆம்பளையா?
|