Published:Updated:

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்


விகடன் பொக்கிஷம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

பாரதப் பிரதமராக மொரார்ஜி தேசாயும், தமிழகத்தின் முதல மைச்சராக எம்.ஜி.ஆரும் பதவி ஏற்றது இந்த ஆண்டில்தான்.

எதிர்பார்த்த தீர்ப்பு

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தெளிவான தீர்ப்பளித்துவிட்டார்கள். போட்டி யிட்ட நான்கு முக்கிய கட்சிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம் முழு நம்பிக்கை தெரிவித்து, மாநில ஆட்சிப் பொறுப்பை அதனிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

நூற்றுக்குத் தொண்ணூறு பேர் எதிர்பார்த்த முடிவுதான் இது. சிலர் வெளியே வேறு மாதிரி பேசினா லும், 'இம்முறை அ.இ.அ.தி.மு.க. அரசுக் கட்டிலில் அமரப் போவ தைத் தடுக்கமுடியாது' என்றே தமக்குள் முடிவு செய்திருந்தனர். 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்சி, அதற்குப் பின்னர் தமி ழகத்தில் நடைபெற்ற இடைத் தேர் தல்களிலும், மார்ச் மாதம் நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பெற்ற அமோக வெற்றிகளைச் சரியாகப் புரிந்துகொண்டவர்கள் வேறு முடிவுக்கு வந்திருக்க முடியாது.

காலப்பெட்டகம்

அ.இ.அ.தி.மு.க-வின் தலைவர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் பெரும் பாலான மக்களிடம் பெற்றுள்ள அன்பும் செல்வாக்கும் அக்கட்சிக்கு மகத்தான சக்தியை அளித்துள்ளது என்பதை மறுக்கமுடியாது. எம்.ஜி. ஆரின் புகழுக்கும் வெற்றிக்கும் அவரது சினிமா கவர்ச்சி மட்டுமே காரணம் என்ற கணிப்பு தவறான தாகும். 'திரையில் அவரை நல்லவ ராகவும், வல்லவராகவும் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட மக்கள் தங்களது பாமரத்தனத்தால் வாக்கு களை வாரித் தந்துவிட்டார்கள்' என்று எண்ணுவது நம் மக்களைச் சரியாக எடைபோடுவது ஆகாது. 'நிர்வாகத்தில் இருந்த ஊழலையும் லஞ்சத்தையும் எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட இவர், அறிஞர் அண்ணா வழியில் நின்று ஏழைகள் வாழ்வு மலர நேர்மையான ஆட்சி நடத்தக்கூடியவர்' என்ற அரசியல் உள்ளுணர்வோடும் மக்கள் எம்.ஜி. ஆருக்குப் பேராதரவு அளித்திருக் கிறார்கள்.

'சினிமா மோகம் கொண்ட பாமர மக்களும், கிராமப்புறத்துப் படிக்காத பெண்டிரும் அரசியல் விளைவு களை ஆராயும் திறனற்றவர்கள் என்றும், அவர்களது அறியா மையை எம்.ஜி.ஆர். தமக்குச் சாத கமாகப் பயன்படுத்திக்கொண்டு விட்டார்' என்றும் படித்தவர்கள் பரவலாகப் பேசுவதும் எழுதுவதும் ஜனநாயகத்தையும் வயது வந்தோ ருக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்கு ரிமையையும் பழிப்பதாகும்.

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

கல்வியறிவு இல்லாதவர்கள் அறிவிலிகள் என்றால், ஒரு காலத் தில் அவர்கள்தானே காமராஜுக்கும், பின்னர் அறிஞர் அண்ணாவுக்கும் தங்கள் வாக்குகளை வஞ்சனை யின்றி வழங்கினார்கள். அப்போது மட்டும் ஜனநாயகத் தத்துவத்தை உணர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அரசி யல் அறிவோடு ஓட்டளித்தார்களா? தற்போது அறியாமை இருளில் மூழ்கித் தவறு செய்துவிட்டார் களா? வேடிக்கையான வாதம்!

'ஒரு நடிகர் நாடாளுவதா?' - இப்படியும் ஒரு கேள்வி! ஜன நாயகத்தில் கேட்கக்கூடாத கேள்வி. 'இன்னின்ன தொழில் புரிபவர்கள் மட்டுமே நாடாளவேண்டும்' என்று நமது அரசியல் சாசனத்தில் குறிப்பி டப்படவில்லையாதலால், தேர்த லுக்கு நின்று வெற்றி பெற்று, சட்டமன்றம் அல்லது நாடாளு மன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற எந்த நபரும் முதலமைச்சராகவோ, பிரதம மந்திரியாகவோ ஆகலாம். இதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இருக்க நியாயமில்லை. 25 ஆண்டு களுக்கு மேலாகத் தமிழகத் திரையு லகில் கொடி கட்டிப் பறந்துகொண் டிருக்கும் எம்.ஜி.ஆர்., தேர்ந்த அனுபவமிக்க ஒரு சினிமா கலைஞ ராக லட்சோபலட்ச மக்களின் மனப்போக்கையும் மனித இயல் பையும் பெற்றிருக்கவேண்டும். தற்போது மக்களாட்சித் தலைவராகத் திறம்படச் செயலாற்ற அந்த அரிய வாய்ப்பை அவர் எவ்வாறு பயன் படுத்திக்கொள்ளப்போகிறார் என் பதே கேள்வி.

ஈஸ்டர் சிறப்பிதழ், சுற்றுலாச் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், நகைச்சுவைச் சிறப்பிதழ் எனப் பல சிறப்பிதழ்களை இந்த ஆண்டு வெளியிட்ட ஆனந்த விகடன் மாணவர் ஸ்பெஷல் இதழ் ஒன்றையும் வெளியிட்டது. அதில், எழுத் தாளர் சுஜாதாவின் மாணவப் பருவத்துக் குறிப்பு ஒன்று...

இளம் தலைமுறையினர் விரும் பிப் படிக்கும் எழுத்தாளரான 'சுஜாதா'வின் இயற்பெயர் பி.ரங்கராஜன். பங்களூரில் 'பாரத் எலெக்ட்ரானிக்'ஸில் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் மேனேஜராக இருக்கிறார்.

காலப்பெட்டகம்

ஸ்ரீரங்கத்தில் பள்ளிப் படிப்பு. நினைவில் இருப்பது: பக்கத்துப் பையனை 'ஸேஃப்டி பின்'னால் தொடையில் குத்தியபோது அவன் அலறியது; மானிட்டருடன் ஹெட் மாஸ்டரிடம் 'கேஸ்' போனது; காது சற்று மந்தமான ஹெட்மாஸ்டர், மானிட்டர் கூறியதைத் தவறாகப் புரிந்துகொண்டதால், 'பின்'னால் குத்தப்பட்டவன் செம்மையாக அடி வாங்கியது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பௌதிகம் பி.எஸ்ஸி., பட்டம். கல்லூரியில் இருந்த மலைப்பாம்பும், ஃபாதர் எர்ஹார்ட்டின் மூக்கு நுனியின் ஆப்பிள் சிவப்பும் நன்றாக நினை விருக்கிறது. (பாவம், சமீப வெள்ளத்தில் மூழ்கி அந்த பாம்பு இறந்து விட்டது).

குரோம்பேட்டை எம்.ஐ.டி-யில் எலெக்ட்ரானிக்ஸ் படித்தபோது மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி:

"ராத்திரி 9 மணி சுமாருக்கு நண்பர்கள் சினிமாவுக்கு அழைக்க, அலறி அடித்துக்கொண்டு ஓடி னேன். டிக்கெட் வாங்கிவிட்டதாகக் கூறி, விஸில் முடிந்து புறப்படத் தயாராயிருந்த எலெக்ட்ரிக் ட்ரெயி னில் என்னை ஏற்றிவிட்டு அவர் கள் 'டாடா' சொல்லி, பிளாட் பாரத்திலேயே தங்கிவிட்டார்கள். நான் டி.டி-யிடம் மாட்டிக்கொண்டு, சகல சொத்துக்களையும் இழந்து, பனியனுடன் பல்லாவரத்திலிருந்து ஹாஸ்டலுக்கு நடந்தே வந்தேன். நண்பனின் அறைக் கதவைத் தட்டி எழுப்பிக் கேட்டபோது வந்த பதில், 'ஸாரிடா!"'

ஆனந்த விகடனில் வெளியான அகிலனின் 'சித்திரப்பாவை' நாவலுக்கு ஞானபீட விருது கிடைத்தது.

ஞானபீடத்தில் தமிழ்

'அகிலன் எழுதிய சித்திரப் பாவை நாவலுக்கு ஒரு லட்ச ரூபாய் ஞானபீடப் பரிசு' என்ற செய்தி கிடைத்தபோது, அகிலனுக்கு ஒரு வாசகர் எழுதியிருந்தார்:

'நாலரைக் கோடி தமிழர்களும் பெருமிதம் அடையத்தக்க நிகழ்ச்சிக் குத் தாங்கள் காரணமாக இருப்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது! தமி ழர்களிடமும் ஞானபீடம் அங்கீ காரம் பெற்று, வானபீடமளவுக்கு அல்லவா உயர்ந்துவிட்டது!'

அண்மையில், ஞானபீடப் பரிசளிப்பு விழா டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றபோது இந்தியாவின் மிக உயர்ந்ததோர் இலக்கியப் பரிசு தமிழுக்குக் கிடைத் திருக்கிறதே என்ற பெருமிதத்தில் டில்லிவாழ் தமிழர்கள் திரண்டு வந்திருந்தார்கள்.

காலப்பெட்டகம்

பரிசளிப்பு விழாத் துவக்கத்தில் தேர்வுக் குழுத் தலைவர் டாக்டர் வி.கே.கோகக், ஞானபீடம் சிறந்த நூலை எப்படித் தேர்ந்தெடுக்கிறது என்பதை விளக்கினார். "பரிசுக் குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பெறும் ஒரு நூல் 'மிகச் சிறந்தது' என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அதற் காகவே தேர்ந்தெடுத்துவிடாமல், அந்த ஆசிரியரின் மற்ற படைப்புக் களையும் சீர்தூக்கிப்பார்த்து அவரு டைய மொத்த படைப்பாற்றலையும் சிறப்பிக்கும் வகையில் அவரது சிறந்த ஒரு நூலைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குகிறோம்" என்று குறிப்பிட்டார். "பாரதத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் அகிலனும் ஒருவர். 1963-ல் சாகித்ய அகாதமி யின் பரிசு பெற்றவர். 1975-ல் 'எங்கே போகிறோம்' நாவலுக்கென ராஜா சர் அண்ணாமலைச் செட்டி யாரின் பரிசைப் பெற்றவர்" என்றும் குறிப்பிட்டார்.

ஞானபீட அமைப்பை நடத்திக் கொண்டிருக்கும் சாந்தி பிரசாத் ஜெயின், ஞானபீடத்தின் உயரிய நோக்கங்களை விளக்கினார்.

அதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஒரு பேழை யில், பரிசு பெற்றதற்கான அத்தாட்சி இதழ் ஒன்றும், கலைமகள் சிலை ஒன்றும், ஒரு லட்ச ரூபாய்க்கான செக் ஒன்றையும் (இதற்கு வரி கிடையாது) பிரதமர் மொரார்ஜி தேசாய், அகிலனுக்கு வழங்கினார்.

"இந்தப் பரிசு எனக்குக் கிடைத்த பரிசு அல்ல; தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் கிடைத்த பெருமை!" என்று 'ஞானபீடம்' அகிலன் குறிப்பிட்டார்.

அகிலனுக்குத் தாம் பரிசளித்ததை ஒரு பெருமையாகக் கருதுவதாகச் சொல்லிவிட்டு, "தமிழ் மிகவும் வள மான மொழி. இலக்கியச் செல்வம் நிறைந்த மொழி. இந்தியாவிலுள்ள பல மொழிகளைவிடச் சிறந்த மொழி. இந்தி தமிழுக்கு ஈடாகவே முடியாது. ஆனால், இந்தியாவில் 60 சதவிகிதம் பேர் இந்தி பேசு கிறார்கள்" என்று பிரதமர் ரொம்ப வும் நாசூக்காக இந்திப் பிரச்னையை நினைவுபடுத்தினார்.

"சித்திரப்பாவைக்கு இத்தனை பெரிய சிறப்புக் கிடைத்திருப்பதற்கு என்னைவிட அதிகம் மகிழக்கூடிய மனம் ஒன்று உண்டு. ஆனால், அவர் இன்று உயிருடன் இல்லை. அவர்தான் அமரர் வாசன்" என்று விகடனில் சித்திரப்பாவை எழுத நேர்ந்ததற்கான நிகழ்ச்சிகளை டில்லித் தமிழ்ச் சங்கம் அளித்த பாராட்டு விழாவில் பேசும்போது விளக்கினார் அகிலன்.

\ அமுதவன்

பண்பலை ஒலிபரப்பு எனப்படும் எஃப்.எம். நிகழ்ச்சிகள் வானொலி யில் ஒலிபரப்பாகத் தொடங்கியது இந்த ஆண்டிலிருந்துதான். அது பற்றி 'இது உங்கள் பக்கம்' பகுதியில் வாசகர் எழுதிய துணுக்கு.

தேவைதானா?

'எஃப். எம்.' ஒலிபரப்பு என்ற புதிய அமைப்பை நமது ஒலிபரப்பு இலாகா அமல்படுத்தியிருக்கிறார் கள். ஏற்கெனவே அமலில் உள்ள பழைய ஒலிபரப்பில், அதன் முழு இனிமையையும் நேயர்கள் அனுப விக்கமுடியாதவாறு இடையூறு களும், தடைகளும் ஏற்பட நிறைய வாய்ப்புக்கள் உள்ளதாம்.

எஃப்.எம். ஒலிபரப்பில் இடை யூறுகள் இல்லாத சங்கீதம் கேட்க வேண்டுமானால், வீட்டிலுள்ள ரேடியோவையும், டிரான்சிஸ்ட ரையும் பரண் மீது தூக்கிப் போட்டு விடவேண்டும். அதற்கென்று செய்யப்பட்டிருக்கும் புதிய செட் ஒன்று வாங்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் பாட்டு கேட்க 800/- ரூபாய் அழ வேண்டும். அதுவும் நம்மைச் சுற்றி 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு தான் கேட்கலாம்!

ஏகப்பட்ட பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பவர்களால்தான் இந்த எஃப்.எம். ரேடியோவை வாங்கமுடியும்.

காலப்பெட்டகம்

இந்த நவீன வசதிக்காக ஆன செலவை விசாரித்தேன். 15 லட்ச ரூபாய் என்றார்கள். தூக்கிவாரிப் போட்டது. நாடு இருக்கும் நிலை யில் இந்த பண விரயம் அவசியம் தானா? ரூபாய்க்கு படி அரிசி - இல்லை, இல்லை; ரூபாய்க்கு அரைப் படி அரிசியாவது கிடைக் குமா என்று பெரும்பாலோர் ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும் போது, இத்தனை செலவில் இந்த புது ஏற்பாடு தேவையா?

- டி.எஸ்.கோபாலன், சென்னை-34

மொரார்ஜி தேசாய் தலை மையிலான அரசு அமைந்ததும், கோகோகோலா பானம் தடை செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக 'டபுள் செவன்' என்னும் பானம் அறிமுகப்படுத்தப்பட்டது.

77 எப்படி இருக்கிறது?

'கோகோகோலா'வுக்கு மாற் றாக வரப்போகும் குளிர்பானம் '77' சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சுவை பார்க்க அளிக்கப்பட்டது. அன்று ஏராளமான சோடாக் கடை சொந்தக் காரர்கள் அங்கு திரண்டிருந்தனர். முதல் புட்டி ஒருவருக்கு வழங்கப் பட்டபோது கீழே விழுந்து உடைந்துவிட்டது. 'இதுவும் ஒரு நல்ல சகுனம்தான்' என்றார்கள் சிலர்.

காலப்பெட்டகம்

குளிர்பானம் '77' சுவையில் எப்படி இருக்கிறது? ஆளுக்கு ஒரு கருத்து சொல்லப்பட்டது. 'கருப் பட்டித் தண்ணி மாதிரி இருக்கு' என்றார் ஒருவர். 'புளி போட்டிருக் கிறார்கள்', 'இஞ்சிமொரப்பா வாசனை இருக்கிறது', 'காஸ் அதிகம்' - இப்படிப் பல கருத்துக்கள் அங்கே சொல்லப்பட்டன. "கோகோகோலா மாதிரி வருமா?" என்று சப்புக் கொட்டியவர்கள் இல்லாமல் இல்லை.

"கோகோகோலா என்ன உசத்தி? அதன் வெற்றிக்கு விளம்பரம் தான் முக்கியக் காரணம்" என்றார் அறிமுகப்படுத்திய மாடர்ன் ரொட்டி கம்பெனி மானேஜிங் டைரக்டர் கமலப்பிரசாத். குளிர்பானம் '77'க் குத் தேவையான ஆதாரக் கலவை ஒரு பாட்டிலுக்கு ஆறு பைசாதான் ஆகிறது. ஆனால் பாட்டில் செலவு, சோடா செலவு, விற்பனைச் செல வுகள், வரிகள் இவை எல்லாம் சேர்த்து ஒரு ரூபாய்க்கு வந்துவிடு மாம். டெல்லியில் இரண்டு மாதத் திற்கு முன்பு 2,000 பாட்டில்கள் வழங்கி அறிமுகப்படுத்தும் 'விழா' நடந்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச் சர்களும் சுவை பார்த்தார்கள். "பிர தமர் மொரார்ஜி சுவைத்துப் பார்த் தாரா?" என்று கேட்டபோது, "இல்லை" என்ற பதில் கிடைத் தது.

எழுத்தாளர் தமிழ்வாணன் மறைந்தது இந்த ஆண்டுதான்!

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்