அழகாக ஆங்கிலம் பேசுகிற சீருடை தரித்த பணியாளர்கள், ஆவி பறக்கப் பரிமாறப்படும் தோப்பூர் பிரியாணி, உணவருந்தும் பல தரப்பட்ட மக்கள், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள், காணும் இடமெல்லாம் சுபிட்சம்... இதெல்லாம் நிஜமா? இல்லை, என் ஆறுதலுக்காக ஸைட்டர் உருவாக்கிய மாயக் காட்சிகளா?
ஆமாம், இது உண்மையிலேயே என் ஹோட்டல்தானா? ஆனால், 'தோப்பூர் பிரியாணி' என்று பேச்சு அடிபடுவதைப் பார்த்தால், வேறு யாரும் ஹோட்டலை நடத்த வாய்ப்பே இல்லை. ஒருவேளை, பிரியாணிக்கான ஃபார்முலாவை யாருக்காவது விற்றுவிட்டேனா? அப்படியானால் ஹோட்டலுக்கு 'ராஜு பிரியாணி ஷாப்' என்று என் பெயர் எப்படி இருக்கும்? இது என்னுடைய கடை என்றால், இந்த நம்ப முடியாத வளர்ச்சியும், பிரமிக்கத்தக்க முன்னேற்றமும், 14 வருடங்களில் எப்படிச் சாத்தியமாயிற்று?
இதற்கான பதில் மாடியில் எனக்காகக் காத்திருந்தது.
கீழே கண்ட அதே காட்சிகள்தான் மாடியிலும். பிரமிப்புடன் ஒவ்வொன்றையும் பார்த்தவாறே நகர்ந்தேன்.
ஓர் ஓரமாக இரண்டு, மூன்று அறைகள் அடுத்தடுத்து இருந்தன. அவற்றைச் சரியாகப் பார்க்குமுன், முதலில் இருந்த அறைக் கதவு திறக்க, வெளியே காத்திருந்த ஒருவர் நுழைந்தார். கூடவே நானும்.
ஆச்சர்யத்தால் இறந்துவிடுவேன்போல் இருந்தது.
எதிரே சுழல் இருக்கையில் என் தம்பி ரவி கம்பீர மாக இருந்தான். கோட், டை அணிந்திருந்தான். பாசமுடன் அவனைப் பார்த்தேன். பெரிய அளவு மாற்றங்கள் இல்லை. வளராத மீசைக்காக இப்போது கவ லைப்படுகிறானா என்பது தெரிய வில்லை.
"சார், நாளைக்கு டெல்லியில இந்தியன் ஃபுட் ஃபெஸ்டிவல் இருக்கு. சனிக்கிழமை நம்மோட கேட்டரிங் இன்ஸ்டிட்யூட்டோட முதலாம் ஆண்டு விழா. இப்ப 'மழை' டி.வி-ல இருந்து உங்களைப் பேட்டி எடுக்கறதுக்காக வந்திருக்காங்க..." என்றார் உள்ளே நுழைந்தவர்.
ரவி அவனது லேப்டாப்பை இயக்கியவாறு, "அதான் பல தடவை சொல்லியாச்சே... திரும்பத் திரும்ப நம்ம கதையைச் சொல்லி... சரி, வரச் சொல்லுங்க" என்றான் சிறிய சலிப்புடன்.
இப்போதுதான் எனக்குச் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. அப்பாடா, என் ஹோட்டலேதான். வெற்றித் திருமகளை என் வீட்டுக்கு வந்து 'சிங்கிள் டீ'யாவது குடித்துச் செல்லக் கெஞ்சினேன். ஆனால், அவளோ என் உழைப்பைப் பார்த்து, என் ரேஷன் கார்டில் தன் பெயரை இணைத்துக்கொண்டாள்போல் இருக்கிறது.
இதற்குள் 'மழை'க் குழு ரவியிடம் பேட்டியைத் துவங்கி இருந்தது.
"எல்லாத்துக்கும் காரணம், என் அண்ணன் ராஜுதான். அவரோட வித்தியாசமான யோசனைதான். எல்லோரையும் மாதிரி வழக்கமா பிரியாணி செய்யாம, அவரே கண்டுபிடிச்ச 'தோப்பூர் பிரியாணி'தான் இந்த வெற்றிக்குக் காரணம். எதிலயும் நம்ம தனித்துவம், வித்தியாசம் தெரியணும்னு அடிக்கடி சொல்வார். ஆரம்பத்துல, கஷ்டங்கள், நஷ்டங்கள் வந்தபோதும்கூட, என் அண்ணன் 'தோப்பூர் பிரியாணி'யை நம்பினார். அது அவரைக் கைவிடலை. இவ்வளவு பெரிய உணவு சாம்ராஜ்யத்தை ஜெயிச்சுக் கொடுத்திருக்கு."
"உங்க அண்ணன் ராஜு ஜப்பான்ல இருந்து வந்துட்டாரா சார்?"
"ஓ, இப்ப ஆஸ்திரேலியாவுல ஒரு காலேஜ்ல லெக்சர் கொடுக்கப் போயிருக்கார். பயங்கர பிஸி. அங்க இருந்து பிரியாணிக்காக ஆடுகளை இறக்குமதி செய்யலாம்னு ஒரு திட்டம் இருக்கு. அதையும் முடிச்சுட்டுத்தான் வருவார்" என்றான் ரவி புன்னகையோடு.
"தோப்பூர் பிரியாணியோட ஃபார்முலா என்ன சார்? சொல்ல மாட்டீங்கன்னு தெரியும். ப்ளீஸ், எனக்கு மட்டும் சொல்லுங்க சார்..." என்று கொஞ்சினாள் மழைக்காரி.
"அது எனக்கும் என் அண்ணனுக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம்" என்று சிரித்தான் ரவி.
"அந்த ஃபார்முலாப்படி மசாலா சேர்த்து பிரியாணி செய்றோம். இதோட சுவை வெளிநாடுகள்ல இருந்தும்கூட நாக்குகளைச் சுண்டி இழுக்குது. கீழ பார்த்திருப்பீங்களே... பல நாட்களுக்கு முன்னாடியே ரிசர்வ் பண்ணிச் சாப்பிட்டுட்டுப் போறாங்க."
"........"
"நம்ம ஜனாதிபதி, பிரதமர் வரைக்கும் இங்கே இருந்துதான் பிரியாணி போகுது. இன்டர்நேஷனல் லெவல்ல, அவார்டு வாங்கியாச்சு. அமெரிக்க டூரிஸம் கைடுல 'தோப்பூர் பிரியாணி' பத்தி எழுதி இருக்காங்க"
நம்ப முடியாமல் தவித்தேன். இந்தத் தம்பி நிகழ்காலத்தில் தூக்கி எறியப்பட்ட பாத்திரங்களுடன் ஓலைக் கூரைக் கடையின் எதிர் காலம்பற்றி கவலையில் இருக்கிறான். உடனே, நிகழ்காலம் அடைந்து, என் தம்பியிடம் நான் எதிர்காலத்தில் பார்த்ததைச் சொல்லி, அவனது கண்ணீரைத் துடைத்து 'நாம ஜெயிச்சுட்டோம்' என்று கத்த வேண்டும்போல் இருந்தது. சொன்னால் நம்புவானா? என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பான்.
|