கோபத்திலும் 'காரியக்கார' கோபம் ஒன்று உண்டு. எவரால் தனக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாதோ, அவருக்கு எதிராகச் சேர்த்துவைத்திருக்கும் ஆத்திரம் அனைத்தும் அனலாகக் கொப்பளிக்கிற உத்தி அது.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். எதாவது கோபத்தில் இருந்தால், போனை எடுத்து எடுத்துப் பார்ப்பார். ஏன் இப்படிச் செய்கிறார் என்று ஒருநாள் விசாரித்தேன். 'அது ஒண்ணுமில்லை... நான் கோபமாக இருக்கிற நேரத்தில் கிரெடிட் கார்டு வேணுமா, லோன் வேணுமா என்று முகம் தெரியாத ஆட்கள் போன் செய்தால், அவர்களைத் திட்டுத் திட்டு என்று திட்டித் தீர்ப்பேன். எனக்கு மனசுல இருக்கற பாரம் எல்லாம் குறைந்துபோகும். அதான்' என்றார்.
எதிர்ப்பதற்கு வலு இல்லாத, முகம் தெரியாத மனிதர்களிடம் கோபத்தைக் காட்டுவது அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கான வடிகால் என்று அதை ஓர் உத்தியாகக் கையாளுகிற புத்திசாலி கோபக்காரர்கள் நிறைய உண்டு. கஸ்டமர் சர்வீஸில் இருந்து போன் செய்தவர், போனை வைத்தபிறகு அநேகமாக ஆபீஸ் பையனை அழைத்து காட்டுக் கத்தல் கத்தியிருப்பார்.
ஒரு தனி மனிதரின் கோபம் அவரோடு நின்றுவிடுவது இல்லை. அது ஒரு சங்கிலித் தொடர்போல நிறையப் பேருக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. நிறைய மனங்களைக் காயப்படுத்துகிறது. தன் கோபத்தை வெளிப்படுத்த வலு இல்லாத ஒரு எதிராளியைத் தேடுகிற காரியக்கார கோபவாதிகளாகத்தான் நிறையப் பேர் இருக்கிறோம்.
மேலதிகாரி தன்னிடம் காட்டிய கோபத்தை அப்பா, அம்மா மீது காட்டுகிறார். அம்மா, பிள்ளை மீது காட்டுகிறார். அந்தப் பிள்ளை, தன் தம்பி மீதோ, தங்கை மீதோ காட்டுகிறார். அவர் அந்தக் கோபத்தைத் தன் நண்பரிடம் வெளிப்படுத்துகிறார். அவர் தன் ஆத்திரத்தை இன்னொருவரிடம் கொட்டுகிறார். அந்த இன்னொருவர் தன் கோபத்தை வெளிப்படுத்த, அடுத்த ஆளைத் தேடுகிறார்.
உங்கள் ஒருவரின் கோபம் உங்களைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல; உங்களோடு தொடர்பில் இல்லாத பலரையும் சங்கடத்துக்கு ஆளாக்குகிறது. கோபம்பற்றி இவ்வளவு ஆராய வேண்டாம்... கோபம் வந்தால் யாரையாவது பிடிச்சுத் திட்ட வேண்டியதுதான். அப்புறம் மன்னிப்பு கேட்டுக்கலாம் என்ற மனோபாவமும் உண்டு. மன்னிப்புக் கேட்பதால், உங்கள் மனசு சாந்தம் அடையலாம். ஆனால், சம்பந்தப்பட்டவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?
கோபம்பற்றி பிரபலமான ஒரு கதை உண்டு. நீங்களும் கேள்விப்பட்டு இருக் கலாம். ஒரு பையனுக்கு பயங்கரமான கோபம் வருமாம். ஆத்திரம் வந்தால் அனைவரையும் திட்டித் தீர்ப்பார். அவரது கோபத்தைக் கட்டுப்படுத்த அவன் அப்பா ஓர் உத்தி சொன்னார்... 'உனக்குக் கோபம் வரும்போது எல்லாம் வீட்டின் பின்பக்கத்தில் இருக்கிற மரப்பலகையில் ஒரு ஆணி அடித்து வை' என்றார். மகனும் அப்படியே செய்ய ஆரம்பித்தார். கோபம் வருகிறபோது எல்லாம் சுத்தியலையும் ஆணியையும் எடுத்துக்கொண்டு மரப்பலகையை நோக்கிக் கிளம்பிவிடுவார். ஒரு நிலையில் மரப்பலகை முழுக்க ஆணிகளாக இருந்தன. ஒரு மனிதர் எவ்வளவு நாட்கள்தான் இப்படிச் செய்ய முடியும். ஆணி அடிக்கிற வேலையைச் செய்வதற்கு அலுத்துக்கொண்டு கோபத்தைக் குறைத்துவிட்டார் அந்த பையன்... கொஞ்ச நாளில் அவருக்குக் கோபமே வருவது இல்லை.
அப்பாவிடம் போய் சந்தோஷமாக தகவலைச் சொன்னார் மகன். அப்பா இப்போது இன்னொரு யோசனை சொன்னார். 'இனி, கோபம் வராத சமயங்களில் எல்லாம், அந்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கு' என்றார். சில நாட்களுக்குப் பிறகு அப்பாவிடம் சென்ற மகன், 'அப்பா, என்னோடு வந்து அந்த மரப் பலகையைப் பாருங்கள். இப்போது அதில் ஒரு ஆணிகூட இல்லை' என்றார்.
மரப்பலகையைப் பார்த்துவிட்டு அப்பா சொன்னார், 'மகனே, உனக்கு இப்போது கோபமே வருவது இல்லை. மகிழ்ச்சி. ஆனால், அத்தனை ஆணிகளையும் பிடுங்கிய பின்னரும் ஆணி அடித்த தடம் இருக்கிறதே அதை என்ன செய்ய முடியும்?' என்றார்.
நீங்கள் கோபப்பட்டதற்கும் கொட்டிய வார்த்தைகளுக்கும் மன்னிப்பு கேட்டுவிடலாம். ஆனால், அது ஏற்படுத்திய காயங்கள் மாறாது என்பதைச் சொல்கிறது இந்தக் கதை. இரவு நன்றாகக் குடித்துவிட்டு, கூட இருப்பவர்களிடம் வம்பிழுத்துத் திட்டிவிட்டு, மறுநாள் காலை மன்னிப்புக் கேட்கிற செயலுக்கும், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டு பிறகு, ஸாரி சொல்கிற குணத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
கோபத்தை எங்கே, எப்படி, யாரிடம் எந்த வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆய்ந்து அதன்படி கோபப்படுகிற சக்தி பெரும்பாலானவர்களிடம் இருப்பது இல்லை. கோபப்படாமல் இரு என்று பொத்தாம் பொதுவாக சொல்லித் தருகிற சமூகமும், ஒரு மனிதனால் கோபப்படாமல் இருக்க முடியாது என்பதைத் தெரிந்துகொண்டுதான் அதைச் சொல்கிறது. அப்படி ஒற்றை வரியில் சொல்லிவிடுவது எளிதாகவும் இருக்கிறது.
கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிறைய உத்திகள் சொல்லித்தரப்படுகின்றன. ஆனாலும், எந்தக் குறுக்கு வழியும் கோபத்தைக் கையாள்வதற்கான நிரந்தர வழியைச் சொல்லித்தருவது இல்லை.
கோபம் வந்தால், தண்ணீர் குடியுங்கள், கோபம் வந்தால் 100 வரை எண்ணுங்கள், கோபம் வந்தால், தனி அறைக்குள் போய் அடைந்துகொள்ளுங்கள், கோபம் வந்தால், மெல்லிய இசை கேளுங்கள், கோபம் வந்தால், யோகா செய்யுங்கள், கோபம் வந்தால், டி.வி-யில் காமெடி பாருங்கள், கோபம் வந்தால், இளைத்தவன் யாராவது இருந்தால் அவனை எட்டி உதையுங்கள், கோபம் வந்தால், வெறித்தனமாக விளை யாடுங்கள்... இப்படி நிறைய வழிகள் உண்டு, கோபத்தைக் கட்டுப்படுத்த.
|