Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்


.
சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்

நிதி நிறுவன மோசடி

புதிது புதிதாகத் தோன்றும்

நிதி நிறுவனங்களில்
முகவராய் இணையச் சொல்லி
என்னைப்
பின்தொடர்ந்தபடியே
இருக்கிறார்கள் என் நண்பர்கள்.

அவர்களுக்கு முன்
சேர்ந்தவர்கள் எல்லாம்
பணக்காரர்களாகி
பங்களா வாங்கிவிட்டதாக
ஆச்சர்யமூட்டுகிறார்கள்.

வெற்றியாளர்களின் ஆசீர்வாதக் கூட்டத்துக்கு
ஒருமுறையேனும் சென்றால்
உத்வேகம் பெறுவேனென
உற்சாகமூட்டுகிறார்கள் தொடர்ந்து.

அவர்களைப்போலவே
இன்னும் பல
முகவர்களை இணைத்தால்
லாபம் பெருகுமென
நம்பிக்கை தருகிறார்கள் நாளும்.

ஒருவேளை அவர்களைப்
பின்தொடராமல் போனால்
வாய்ப்பைத் தவறவிட்டு
வாழ்வில்
பின்தங்கிவிடுவேனெனப்
பயமுறுத்துகிறார்கள்.

நண்பர்களை இழக்கக் கூடாதென்ற
நினைப்பில்
அவர்களோடு இணைகையில்
இழந்துவிடுகிறேன்
பணத்தோடு சேர்த்து நண்பர்களையும்!

- சூரியகுமார்

யார் கனவு?

யார் கனவென்று
தெரியவில்லை
வீதியில் கிடந்து
துடிக்கிறது.
விட்டுப்போனவன்
தேடக்கூடும்
இக் கனவை
வேறொரு கனவில்!

-ராஜா சந்திரசேகர்

காலவழு

சொல்வனம்

கைக்குழந்தைகளோடு
பிச்சையெடுக்கிறார்கள்
தங்க நாற்கரச் சாலைகளில்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில்
பாடும் குழந்தைகள்
வீடு வீடாய் யாசிக்கிறார்கள்
ஓட்டு கேட்டு.

தற்கொலை செய்துகொள்ளப்போவதாக
நண்பனிடமிருந்து குறுஞ்செய்தி
வந்தது
பதில் அனுப்பலாமென்றால்
பேலன்ஸ் இல்லை.

இரண்டு லட்சம் பேர் குருதியில்
சிவந்த மொழி எங்கள் மொழி
செம்மொழி.

கோயிலுக்குச் சென்றேன்
சாமியைக் காணவில்லை
அவர் சாமியாராகக் கிளம்பிவிட்டாராம்.

செத்துவிடலாம் எனப்
பூச்சி மருந்தைக் குடித்தேன்
போலி மருந்தாம்!

- என்.விநாயக முருகன்

இன்னும்...

எல்லாவற்றையும் இழந்து
உன் முன்
ஏதுமற்றதாய் நிற்கிறது
எங்கள் வரலாறு.
அப்படித்தான்
நம்பிக்கொண்டிருக்கிறாய்
நீயும்.
ஆனால்...
எவரும் அறியாதபடி
எங்கள்
எல்லோரிடமும் இருக்கிறது
கண்ணகியின்
இன்னொரு மார்பு!

- ராசை.கண்மணிராசா

இந்தப் பிஞ்சுகள் விற்பனைக்கல்ல!

நிறுவனத்தின் விளம்பரத்துக்காக
இருபது ரூபாய் பொருளை
பத்து ரூபாய்க்குத் தருவதாக
விற்கிறான்
பேருந்தில் ஒருவன்.

'கை நிறையக் கொட்டி
நெற்றி நிறையத் தேய்க்க
வேண்டாம்' என
வார்த்தை ஜாலம் புரிகிறான்
தைலம் விற்பவன்.

வரைபடமும்
பொது அறிவுப் புத்தகங்களும்
சுமந்து வருபவன்
ஆச்சர்யமூட்டுகிறான்
வினாக்களையும்
விடைகளையும்
வரிசையாகச் சொல்லி.

முகத்துக்கு நேரே நீட்டி
மூன்று கைக்குட்டை பத்து ரூபாய்
என்பவன்
விற்றுவிடுகிறான்
முடிந்த வரை.

கல்லாவைத் தட்டி ஒலியெழுப்பியபடி
பேருந்தைச் சுற்றி வந்து
விற்கிறான் ஒருவன்
வெங்காயம் தூவிய
பட்டாணி சுண்டலும்,
வேர்க்கடலையும்.

ஓடி வந்து ஜன்னலோரம் நின்று
விற்க முடியாத பாட்டி
இருந்த இடத்திலிருந்தே
கண்ணீர் மல்கக்
கதறுகிறாள்
வெள்ளரிப்பிஞ்சும்
அரிசி முறுக்கும் விற்பதாக!

ஆதலையூர் சூரியகுமார்

சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்