போலந்தைவிட க்யூபாவின் நிலைமை மோசம் என்றார் நண்பர். ஏனென்றால், அடுத்த நாள் எழுத்தாளரின் லுங்கியும் திருடுபோனது. பிரச்னை அது அல்ல; டைனிங் டேபிளில் எழுத்தாளரின் லுங்கிதான் மேஜை விரிப்பாக விரிக்கப்பட்டு இருந்ததாம். என் நண்பர் கம்யூனிஸ்ட் அனுதாபி. அதனால், வருத்தத்தோடு சொன்னார். 'நானே ஓர் ஏழைத் தமிழ் எழுத்தாளன். என்னுடைய கிழிந்துபோன லுங்கியைக்கூடத் திருட வேண்டுமானால், பாவம்... அந்த மக்கள் எந்த நிலைமையில் இருப்பார்கள்? காஸ்ட்ரோ மட்டும் அனுமதி கொடுத்துவிட்டால், அந்த நாட்டில் பலர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக ஓடிவிடுவார்கள்' என்றார்.
இப்போது புரிகிறதா, காஸ்ட்ரோ ஏன் கார்ப்பெந்த்தியரை வெளிநாட்டுக்குத் தூதராக அனுப்பிவைத்தார் என்று? ஆனால், இந்தியாவின் ஏழ்மை அவ்வளவு மோசம் இல்லை. அதுவும் தவிர, வெளிநாடுகளுக்குத் தூதராக அனுப்பப்படும் விசேஷ சலுகை இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் புதல்வர்களுக்கும் மட்டுமே உண்டு என்பதால், கோல்ஃபுக்குப் பதிலாக சிலே செல்லலாமா என்று எனக்கு ஒரு சம்சயம் ஏற்பட்டது.
'அதெல்லாம் அப்புறம். இப் போது கோல்ஃப்' என்று உறுதி யாக நின்றார் சுல்தான்.
எழுத்தாளன் என்றாலே தொந்தரவு என்றேன் அல்லவா? அதே ரகம்தான் புத்திஜீவிகளும். புத்திஜீவிகள் என்றால் எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.
இருந்தும், ஒரு புத்திஜீவியை கோல்ஃப் கிளப்புக்குக் கிளம்பும்போது அழைத்துக்கொண்டு சென்றது என் தவறுதான்.
திடீரென்று என்னைப் பார்த்து 'நீ ஒரு megalomaniac' என்றான் புத்திஜீவி. மெகலோமேனியா என்ற மனநிலை பல வரலாற்று நாயகர்களிடம் இருந்திருக்கிறது. உதாரணம்... சே குவேரா. அதே சமயம், மனப் பிறழ்வு நோய் பிடித்தவர்களிடமும் இந்த மெகலோமேனியா இருக்கும் என்கிறார்கள். அதற்கு உதாரணம், ஹிட்லர். அதாவது, நம்மால் முடியவே முடியாத பெரிய விஷயங்களின் மீது ஆசைப்படுவது.
உதாரணமாக, முதலமைச்சர் கனவில் இருக்கும் நடிகர்கள் கார்த்திக், சரத்குமார், விஜய் போன்றவர்களுக்கு இருப்பது மெகலோமேனியா என்று சொல்லலாம். ஆனால், நான் கோல்ஃப் கற்றுக்கொள்ள ஆசைப்படுவதை மெகலோமேனியா என்று சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'இது மெகலோமேனியா இல்லை; ஹெடோனிசம்' என்றேன் புத்திஜீவியிடம். ஹெடோனிசம் என்றால் வாழ்வின் அற்புதங்களைக் கொண்டாடுவது.
சோவின் நண்பர் ஒருவர் என் எழுத்தின் தீவிர விசிறி. நானும் அவரும் சோ பற்றி அடிக்கடி பேசிக்கொண்டு இருப்போம். சோ-வின் அரசியல் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லையெனினும், அவரது நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் அவருடைய கேள்வி - பதிலில் நான் படித்தது. கேள்வி கேட்டவரின் பெயர் ஆலங்குளம் கணேசன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய கேள்வி: மழை ஏன் சோ என்று பெய்கிறது? சோவின் பதில்: பிறகு என்ன ஆலங்குளம் கணேசா என்றா பெய்யும்?
ஒருநாள் சோவிடம் என் நண்பர், 'சாரு நிவேதிதா வைத் தெரியுமா? அவர் எழுத்துக்களைப் படித்திருக்கிறீர்களா?' என்று கேட்டிருக்கிறார். அதற்கு சோ 'படித்ததில்லை; but he is a happening guy' என்றாராம். ஹேப்பனிங் கை என்றால் பரபரப்பானவர் என்று சொல்லலாமா? ஒரு ஹெடோனிஸ்ட் மட்டுமே இந்தப் பெயரை எடுக்க முடியும். வாழ்க்கையைச் சிடு மூஞ்சித்தனமாகப் பார்ப்பவர்களுக்கு இது கடினம். அது மட்டுமல்ல; சமீபத்தில் ஓர் ஆங்கிலப் பத்திரி கையில் சோவின் புகைப்படத்துடன் அடியேனின் படமும் வந்திருந்தது. அதைப் பார்த்துவிட்டு, 'இவருக்கு 40 வயது இருக்குமா' என்று கேட்டாராம் சோ. 'அடடே, இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு?' என்று என் தோழியிடம் டம்பம் அடித்த போது, 'அந்தப் பெருமை உங்களுடைய புகைப் படக்காரரையே சேரும்' என்று சொல்லி என்னைக் கொஞ்சம் அடக்கினார் தோழி.
இதை அந்த புத்திஜீவியிடம் சுருக்கமாகச் சொன்னேன். ஆனால் மெகலோமேனியா, ஹெடோனிசம் என்ற வார்த்தைகளை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த சுல்தான், 'என்ன சாரு இது, உங்களை கோல்ஃப் விளையாடச் சேர்த்துவிடலாம் என்று பார்த்தால் இரண்டு பேரும் சேர்ந்து இப்படி மிரட்டுகிறீர்கள்?' என்று கேட்டதும் விவாதத்தை நிறுத்தினோம்.
ஆனால், புத்திஜீவி வேறு ஒரு பிரச்னையைக் கிளப்பினார். அதாவது, நான் எந்த விஷயத்தைக் கற்றுக்கொள்ளக் கிளம்பினாலும் அதைப் பாதியிலேயே விட்டுவிடுவேன். ஸ்பானிஷ், பிரெஞ்ச், அராபிக், சம்ஸ்கிருதம், மலையாளம் எல்லாம் நான் பலமுறை படையெடுத்துத் தோற்றமொழி கள். அதுவாவது போகட்டும். இந்தப் பாழாய்ப் போன சைக்கிள். அதுகூட எனக்குக் கைகூடவில்லை.
பஞ்சமா பாதகங்களில் ஒன்றாக இருக்கும் சூது எனக் குப் பிடிக்கவே பிடிக்காது. ஆனால், நண்பர்கள் எல்லாம் மணிக்கணக்கில் ஆடுகிறார்களே என்று சீட்டுக்கட்டை எடுத்துப் பலமுறை முயற்சி செய்தேன். விசிறியைப் பிடித்திருப்பதுபோல் அவர்கள் லாகவமாக சீட்டுகளை வைத்திருக்கும் வித்தை எனக்கு வரவே இல்லை. (ஒரு முக்கியமான விஷயம்: மது, மாது என்ற இரண்டில் அழிந்ததைவிட சூதினால் அழிந்த குடும்பங்களே அதிகம். ஏன், மகாபாரதமே அந்தக் கதைதானே?)
சீட்டுக்கட்டைப்போல நான் முயற்சி செய்து தோற்ற விஷயங்கள் அநேகம். கேரம், செஸ், பாக்ஸிங், கிதார், காதல் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. (ஆனால், எந்த முயற்சியும் செய்யாமலே இத்தனை வயது ஆகியும் ஒரே ஒரு விஷயம் மட்டும் நிழலைப்போல் தொடர்ந்துகொண்டே வருகிறது).
இந்தக் கதையெல்லாம் புத்திஜீவிக்கும் தெரியும் என்பதால் சுல்தானை எச்சரித்தான். ஆனால், சுல்தான் எதற்கும் பின்வாங்குவதாக இல்லை. 'இவர் பாதியி லேயே கோல்ஃபை நிறுத்தினாலும் பரவாயில்லை;கற்றுக் கொண்ட வரைக்குமாவது சுவாரஸ்யமாக எழுதுவார். அது போதும்' என்றார். ஆக, எல்லாத் தடைகளும் நீங்கிவிட்டன என்று ஆசுவாசம்கொண்ட நேரத்தில் புத்திஜீவி வேறு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
'பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டவர்கள் கோல்ஃப் ஆட முடியாது என்று நினைக்கிறேன். எதற்கும் டாக்டரிடம் கேட்டுக்கொள்' என்றான். டாக்டரிடம் விசாரித் தேன். 'உலகப் போட்டிக்கா ஆடப் போகிறீர்கள்? சும்மா ஆடுங்கள்' என்று தைரியம் அளித்தார் டாக்டர்.
நான் ஆடும் கிளப்பில்தான் மணிரத்னமும் கோல்ஃப் ஆடுகிறார் என்கிறார் என் கோல்ஃப் பயிற்சியாளர் இளையராஜா. 'ராவணன்' மாதிரி படம் எடுப்பதைவிட, அவர் கோல்ஃபே ஆடலாம்; பார்த்தால் சொல்ல வேண்டும். எப்படி எடுத்துக்கொள்வாரோ?
கோவை செம்மொழி மாநாட்டில் நடந்த பல நகைச்சுவை நிகழ்ச்சிகளைப்பற்றி அறிந்தேன். அதில் பலவற்றை எழுத முடியாது. எழுத முடிந்தவற்றுள் ஆகச் சிறந்த நகைச் சுவையாக நான் நினைப்பது இவை: ஒரு கவியரங்கத்தில் ஒரு பாடலாசிரியர் பாடியது: உலகத்துக்கு ஒரு ஐ.நா; உலகத் தமிழர்க்கு நீ நைனா! (பாட்டுடைத் தலைவன் யார் என்று சொல்லத் தேவை இல்லை!)
இன்னொரு பாடலாசிரியரின் கவிதை: பெண்கள் என்றால் முன்பெல்லாம் என் நினைவுக்கு வந்தது பிராந்தி பாட்டில்; இப்போது நினைவுக்கு வருவது பிரதிபா பாட்டீல்.
கவிஞரே, உமது கவிதையின் அர்த்தம் மட்டும் பிரதிபா பாட்டீலுக்குப் புரிந்திருந்தால், உம்மை பாட்டிலாலேயே ஒரு போடு போட்டிருப்பார். இதையெல்லாம் கேட்க வேண்டி இருப்பது நம் தலைவிதி!
|