திருமணத்தின் முதல் நிலை: துணைக்கான தேர்வில் இருந்தே ஆரம்பிப்போமே... நரேஷ், மெத்தப் படித்து வெளிநாட்டில் வேலையில் இருப்பவன். '30 வயது நெருங்குகிறதே, கூட இருக்கும் பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே.' என்றெல்லாம் பலவாறாக யோசித்து, 'பொண்ணு பாருங்க' என்று ஜாடைமாடையாக வும், அது பலிக்காதபோது நேரடியாகவும் சொல்லிவிட்டான் வீட்டில். ஜாதகம், நிறம், வசதி, வருமானம், அந்தஸ்து, இத்யாதி, இத்யாதிகளுடன் பெண் தேடினர். இறுதிக்கட்டத் தேர்வில் மூன்று பெண்கள் மிஞ்சினர். அதில் ஒருத்தியைக் காட்டி, 'இந்தப் பொண்ணு' என்று அம்மா சொல்லிவிட, நரேஷ§ம் சுறுசுறுப்பாக அந்தப் பெண்ணைப் போய்ப் பார்த்தான். ஆனால், அந்தப் பெண் அவனுடைய உலகமயமான சிந்தனைக்குச் சரி வரவில்லை. லிஸ்ட்டில் அடுத்த பெண்ணைப் பார்த்தான். அவளை நரேஷ§க்குப் பிடித்துப்போனது. அம்மாவிடம் சொன்னால் முகம் சுளித்தாள். இப்போது பையனுக்குக் குழப்பம். தனக்குப் பிடித்த பெண்ணைத் தேர்ந்தெடுப்பதா, அல்லது அம்மாவுக்குப் பிடித்த பெண்ணைத் தேர்ந்தெடுப்பதா? தனக்குப் பிடித்த பெண் என்றால், அது அம்மாவுக்குச் செய்யும் துரோகம் ஆகாதா? அம்மாவுக்குப் பிடித்த பெண் என்றால், குறைந்தபட்சம் அம்மாவாவது திருப்தி அடைவார்கள். அம்மாவுக்காகத் தியாகம் செய்துவிட்டால் என்ன என்பது பையனின் பெருங்குழப்பம்.
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 'அம்மாவுக்குத் தெரியாததா? அவங்க சொல்கிற பெண்ணை ஏத்துக்கிட்டா, போகப்போக தானா ஆசை வந்திரும்' என்கிற கட்சியா நீங்கள்? அல்லது 'கல்யாணம் யாருக்கு? உனக்குத்தானே. நீதானே வாழப்போற? உனக்குப் பிடிச்ச பெண்ணாப் பாருப்பா' என்கிறீர்களா? உங்கள் கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும். அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
1. 'திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது' என்கிற பேத்தல்களை எல்லாம் மீறி, திருமணம் என்பது ஒரு ஜெனடிக் ஒப்பந்தம். இரண்டு பாலினரின் மரபணுக்கள் கலந்து ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாகிட சமுதாயம் ஏற்படுத்திய ஒரு சடங்கு. அதனால்தான் திருமணம் முடிந்த உடனேயே சாந்தி முகூர்த்தம் என்கிற சடங்கை முதலில் செய்கிறார்கள்.
2. இப்படி ஓர் ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் என்றால் அவர்களுக்குள் செக்ஸ§வல் கெமிஸ்ட்ரி சரியாக ஒருங்கிணைய வேண்டும். இந்தக் கலவியல் கவர்ச்சி என்பது அவரவர் சொந்த விஷயம். இதில் பெற்றவர்கள்கூடக் கருத்து சொல்ல முடியாது.
3. அம்மா, அப்பாவைத் திருப்திப்படுத்த அவர்களைப் பார்த்துக்கொள்ள என்ற காரணங்களுக்காக ஒருவனோ ஒருத்தியோ திருமணம் செய்துகொள்கிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று அர்த்தம். மனித விதிகளின்படி, 'அடடா, என்ன ஒரு அம்மா சென்டிமென்ட்' எனத் தோன்றலாம். ஆனால், இயற்கையின் விதிப்படி மரபணுவை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதுதான் உயிரினத் தோற்றத்தின் அடிப்படையான அம்சம்.
அதற்காக அம்மா - அப்பாவை அம்போஎன விட்டுவிடுவதா? நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களை உதாசீனப்படுத்துவது அநியாயம் இல்லையா? அதுவும் சரிதான். என்ன செய்யலாம். இந்தச் சமன்பாட்டை எப்படிச் சரிசெய்யலாம்?
|