இந்த உலகத்தில் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்வது சாத்தியம் இல்லாமல் போகலாம். குறைந்தபட்சம் நாம் இருக்கிற அல்லது நம்மை ஈர்க்கிற விஷயத்தோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் தேடுவதுதான் நம்மை உயரத்துக்குக் கொண்டுபோகிறது.
அந்தத் தேடல்தான் நமக்குப் பல்வேறு தளங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் உங்களைத் தனிச் சிறப்பு பெற்ற மனிதராக அடையாளம் காட்டுகிறது. வாய்ப்புகளை உங்கள் வாசலில் வந்து கொட்டுகிறது. இவை எல்லாவற்றையும் விட, ஆத்ம திருப்தியைக் கொண்டுவந்து சேர்க்கிறது.
நான் பணி செய்யும் ஊடகத் துறையிலும் அப்படியான மனிதர்களைப் பார்த்து நான் வியந்தது உண்டு. எனது நண்பர் ஒருவர், ஒரு படைப்பு தொடர்பான அனைத்தையும் தெரிந்துவைத்திருப்பார். ஒரு நிகழ்ச்சிக்கான களத்தை உருவாக்குவதில் தொடங்கி, தொழில்நுட்பரீதியாக அதைச் செம்மைப்படுத்துவது வரை அத்தனையும் அவருக்கு அத்துப்படி.
அவரைப் பார்க்கிறபோது ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கும். அவர் சொல்கிற விஷயத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். இங்கு கவனிக்கத்தக்க மாற்றங்களைச் செய்தவர்கள் எல்லோரும் ஒவ்வொரு முறையும் தன்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடியவர்கள்தான். அப்படி ஓடுவதற்கான ஆர்வம் நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வதன் மூலமே கிடைக்கிறது. புதுப்பித்தல் என்பது 'தேடல்' மூலமே நடக்கிறது.
இந்தத் தேடல்தான் நம்மை முழுமையான மனிதன் ஆக்குகிறது. முழுமையான மனிதன் பல புதிய படைப்புகளை உலகுக்கு முன்வைக்கிறான். பலருக்கும் முன்னுதாரணமாக நிற்கிறான். நாம் நேசிக்கிற, பழிக்கிற மனிதர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் துறையில் பாண்டித்யம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.
என் வேலை கேஷியர். எனக்குப் பணம் எண்ணத்தான் தெரியும் என்று சொல்லிக்கொண்டு இருந்தால், உங்களைவிட வேகமாக பணம் எண்ணத் தெரிந்தவர் வந்தால் உங்கள் இடம் பறி போகும். நீங்கள் வங்கியில் இருந்தால் வங்கிச் சேவைகள், பணிகள் குறித்த தகவல்கள் உங்கள் விரல் நுனியில் இருக்கட்டும்.
தொடர்புத் தகவல்களைத் தேடுவது நமது பார்வையை விசாலமாக்குகிறது. இதில் புதிதாக என்ன செய்யலாம் என்று தூண்டுகிறது. போதும்... போதும்... என் வேலை எனக்குத் தெரியும் என்ற 'போதும் மனோபாவம்' நமது அறிவின் வேகத்தையும் ஆற்றலையும் முடக்கிப் போடுகிறது.
தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு தொழிலதிபர் எனது நண்பர். போன வாரம் அவரைப் பார்க்கச் சென்றபோது ஒரு தகவல் சொன்னார். "ஒருவர் மிகச் சிறந்த மனிதர் ஆவதைத் தடுப்பது அவருடைய மோசமான செய்கைகள் அல்ல; நான் 'சிறந்தது' என்ற இடத்துக்கு வந்துவிட்டேன், அது போதும் என்ற நினைப்புதான்."
எட்டாவது மாடிக்கு ஏறிப் போகிற எல்லா வாய்ப்பும் இருந்தும், மூன்றாவது மாடியின் பால்கனியில் காற்று வாங்கியே காலம் கழித்துவிடுகிறோம். இதில் எட்டாவது மாடி என்பது ஒரு துறையின் உச்சத்தைத் தொடுவதற்கான தகவல்களைத் தெரிந்துகொள்வது. மூன்றாவது மாடி என்பது இப்போது செய்துகொண்டு இருக்கும் வேலையோடு நேரடித் தொடர்பில் இருக்கும் விஷயத்தை மட்டும் தெரிந்துகொண்டு முடங்கிவிடுவது.
கடவுளோ, இயற்கையோ, நம்மைப் படைத்தது எதுவாக இருந்தாலும், நமக்கென்று ஒரு சிறப்புத் தகுதியோடுதான் படைக்கப்பட்டு இருக்கிறோம். அப்படி நமக்கு வழங்கப்பட்டு இருக்கும் வாய்ப்பை மரியாதை செய்யத் தொடர்ந்து தேட வேண்டியது முக்கியமாகிறது.
விஜய் டி.வி. வழங்கும் விருதுகளில், செவாலியே சிவாஜி கணேசன் விருது இந்த முறை ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்வு நடிகர் திலகத்தின் இல்லத்திலேயே நடந்தது.
|