அமெரிக்கா வந்த பிறகு, நைமா என்ற தன் அரேபிய அடையாளத்தை விட்டுவிட்டு, கோலா பூஃப் என்ற ஆப்பிரிக்கப் பெயராக மாற்றிக்கொள்கிறார். அவரை ஆறு மாத காலம் செக்ஸ் அடிமையாக வைத்திருந்த நபர் யார் தெரியுமா? பின்னாளில் உலகமே அஞ்சி நடுங்கிய ஒசாமா பின்லேடன். நைமா அவரிடம் இருந்தது 1996-ம் ஆண்டு. அப்போது ஒசாமா... இந்த அளவுக்குப் பிரபலம் இல்லை.
கோலா பூஃப் எழுதியிருப்பது எல்லாம் கப்ஸா என்று அமெரிக்காவில் சிலர் சொல்கிறார்கள். உண்மையாக இருந்தால் ஆதாரம் எங்கே என்பது அவர்கள் வாதம். "நானும் ஒசாமாவும் எத்தனையோ புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்; இப்போது என்னிடம் ஒன்றுகூட இல்லை; அந்த ஆள் இவ்வளவு பெரிய டெரரிஸ்ட்டாக மாறுவார் என்று எனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட் கிறார் கோலா பூஃப்.
அமெரிக்காவுக்கு, அரேபியர்களைக் கண்டால் பிடிக்காது. கோலா பூஃப் தன் புத்தகத்தில் அவருக்கு நேர்ந்த அனுபவங்களை மட்டுமேவைத்து ஒட்டுமொத்த அரேபியக் கலாசாரத்தையே தாக்குகிறார். அதனால், இது எல்லாமே அமெரிக்காவின் தூண்டுதலாக இருக்குமோ என்று சந்தேகிக்கவும் இடம் இருக்கிறது. ஏனென்றால், இதுவரை அமெரிக்காவை எதிர்த்த அனைவரின் மீதும் (லெனின் முதல் சே குவேரா வரை) இதுபோன்ற செக்ஸ் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. மேலும், ஒசாமாவை வைத்துக் காசு பண்ணுவதற்காகவும் கோலா பூஃப் இப்படி எழுதியிருக்கலாம் என்கிறார்கள். ஆனால், இன்றைய தினம் ஒசாமா பற்றி இவ்வளவு மட்டமாக எழுதிவிட்டு உயிர் பிழைக்க முடியுமா? மேலும், கோலா பூஃப் சூடானின் விடுதலை இயக்கத்திலும் முக்கியமான பொறுப்பை ஏற்றிருக்கிறார். இதுவரை பலமுறை கோலா பூஃபின் உயிருக்குக் குறி வைக்கப்பட்டு இருக்கிறது. அவருடைய புத்தகத்தை வெளியிடும் பதிப்பகத்தின் மீது குண்டு வீசப்பட்டது. இப்போதும் கோலா பூஃப் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்போடுதான் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
கோலா பூஃப், கவிதை, சிறுகதை, நாவல் என்று பலவிதமாக எழுதுகிறார். இதில் என்னுடைய ஆச்சர்யம் என்னவென்றால், அவருடைய எல்லாப் புத்தகங்களின் பின் அட்டைகளில் உள்ள புகைப்படங் களிலும் கோலா பூஃப் மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாகவே காட்சி தருகிறார். என்ன காரணம் என்று புரியவில்லை. சூடானின் தேசிய உடையே இதுதானா? அல்லது, 'இந்த உடலால்தானே இவ்வளவு பிரச்னைகளும்? இப்போது இதையே காட்சிப் பொருள் ஆக்குகிறேன்' என்ற விரக்தியா? அல்லது, வியாபாரத் தந்திரமா? தெரியவில்லை!
என் வளர்ப்புச் செல்லம் பப்பு லாப்ரடார் இன நாயாக இருந்தாலும் பார்ப்பதற்கு சிங்கம்போலவே இருக்கும். அதை அழைத்துக்கொண்டு வாக்கிங் செல்லும் வழியில், என் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி திடீர் என்று குறுக்கிட்ட ஒரு பெண் "நீங்கதானே சாரு நிவேதிதா?" என்று கேட்டார். பக்கத்தில் நின்றிருந்த சிங்கக் குட்டிக்குக்கூட அவர் பயந்ததாகத் தெரியவில்லை. "இப்போதுதான் விகடனில் பார்த்தேன். இந்தத் தெருவில்தான் இருக்கிறீர்களா, நான் பார்த்ததே இல்லையே?" என்று ஆச்சர்யப்பட்டார். "ஆமாம்... ஆனால், நான் உங்களை அடிக்கடி பார்த்திருக்கிறேன்" என்றேன். நட்புடன் கை குலுக்கினார்.
|