புழு, பூச்சியில் தொடங்கி சிங்கம், புலி, கரடி, மனிதன் வரை எல்லா ஜீவராசிகளிலும் தாய் என்பது குட்டிகளுக்காக மெனக்கெடத்தான் செய்கிறது. எந்தக் குட்டியும் 'என்னைப் பெற்றுக்கொள், எனக்காகச் சிரமப்படு' என்று தாயிடம் வேண்டிக்கொண்டு பிறப்பது இல்லை. தாயிடம் இருந்து இயல்பாகவே இந்த ப்ராசஸ் நடக்கிறது. தன் உடலை வருத்தி தாய் ஏன் வம்சவிருத்தி செய்ய வேண்டும்? காரணம், அவள் மரபணுக்களைப் பரப்பிக்கொள்ள இருக்கும் ஒரே வழி அது மட்டும்தான். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மனித இனம் தொடர்ந்து நிலைத்து இருப்பதற்கான சுயநல ஏற்பாடுதான் இனவிருத்தி. அது மனித சித்தத்துக்கு அப்பாற்பட்டு தன்னியல்பாகவே நடக்கிறது.
இந்த இனவிருத்தியை மனிதத் தாய் மட்டும் செய்யவில்லை. உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் செய்யும் அனிச்சைச் செயல் இது. மனுஷிக்காவது பிரசவிக்க, டாக்டர், பயிற்றுவிக்க வாத்தியார், கட்டுப்படுத்த சட்டம் என எத்தனையோ ஊன்றுகோல்கள் உள்ளன. ஆனால், பிற ஜீவராசிகள் எல்லா வேலைகளையும் தானே செய்துகொள்ள வேண்டும். ஆக, தாய்மைச் சுமை என்று பார்த்தால், மனிதத் தாயைவிட பிற ஜீவராசிகளுக்குத்தான் அதிக பளு. ஆனால், பிற ஜீவராசிகள் தங்களின் கஷ்டத்தைச் சொல்லிக்காட்டி, அதற்குப் பிரதி உபகாரம் எதிர்பார்ப்பது இல்லை. பிற ஜீவராசி குட்டீஸ§ம் இதை ஓவர் சென்டிமென்ட்டலாக அணுகுவது இல்லை. பிறந்தோமா, வளர்ந்தோமா, இனப்பெருக்கம் செய்தோமா, அடுத்த தலைமுறை எனும் தொடர் சங்கிலியை உரு வாக்கினோமா என்று மிக கேஷ§வலாக வாழ்கின்றன. காரணம், இயற்கையைப் பொறுத்தவரை குட்டி வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்து, தன் முந்தைய தலைமுறையிடம் பெற்ற மரபணுக்களைச் சேதாரம் இன்றி,அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதே தாய்க்கு ஆற்றும் உதவியும் நன்றியும் ஆகும். இதை மீறி குழந்தை, தாய்க்குச் செய்ய வேண்டிய வேறு கடமைகள் இல்லை. கூட்டமாக வாழும் யானை, டால்ஃபின், குரங்கு மாதிரியான ஜீவராசிகளில் முதுமையில் குட்டிகள், பெருசுகளைப் பராமரிக்கும். ஆனால், அதில் பாசம் இருக்குமே தவிர, கண்மூடித்தனமான அம்மா சென்டிமென்ட் இருக்காது.
|