கூகுளில் சீதையைத் தேடிய அனுமன்!
##~## |
'தண்ணி கருத்திருச்சு... தவளை சத்தம் கேட்டிருச்சு’ பாடலுக்கு மேடையில் பசங்க குத்தியெடுக்க, அவர்களுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் 10 பெண்கள் கழுத்தில் ஷாலை இறுக்கிக் கட்டிக்கொண்டு, செமத்தியாக ஆட்டம் காட்டினார்கள். 'கண்மணி அன்போடு’ பாடல் ஒலிக்க, ஒரு கும்பலே தலையில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு 'அபிராமி... அபிராமி..’ என்று ஊலலலா ஊர்வலம் அடித்தது.

அடுத்ததாக, 'மாடர்ன் ராமாயணம்’! ராமனும் சீதையும் செல்போனில் பேசிக் காதல் வளர்க்க, காஸ்ட்லி செல்போன் காட்டி சீதையைக் கடத்துகிறார் ராவணன். இப்போது கூகுள் உதவியோடு சீதையைத் தேடி அனுமன் கிளம்ப, டெக்னாலஜி அக்கப்'போர்’ ஆரம்பிக்கிறது. போரின் இடையில், சீதையாக நடித்த மாணவரின் புடவை அவிழ்ந்து, படை வீரனின் வாளில் சுற்றிக்கொள்ள, இருவரும் அதைக் கவனிக்காமல் அங்குமிங்கும் ஓட, ''டே... ராமாயணம்னு சொல்லி மகாபாரதம் நடத்துறாங்கடா!'' என்று டைமிங் கமென்ட் அடித்து அப்ளாஸ் வாங்கினார் ஒரு மாணவர்!

மாற்றுத் திறனாளியான சபரீஸின் நடனத்தில் பார்வையாளர்களை இருக்கை நுனிக்குக் கொண்டுவரும் விறுவிறுப்பு! '7ஜி ரெயின்போ காலணி’ படத்தில் வரும் 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்...’ பாடலை பாடத் துவங்கினார் திவ்யா. சிறிது நேரத்தில் பாடல் சுருதி குறைந்த ஸ்லோமோஷனில் தந்தியடிக்க, அரைத் தூக்கத்தில் சேரில் தூங்கி விழுந்துகொண்டு இருந்த ஒரு மாணவரை அப்படியே அலேக்காக சேரோடு தூக்கிச் சென்று, திவ்யா அருகில் கிடத்தினார்கள். கீழே இருந்து 'திவ்யா... திவ்யா... திவ்யா... திவ்யா!’ என்று 'காதல் கொண்டேன்’ தனுஷ் ஸ்டைலில் கோரஸ் கொடுக்க, திவ்யா முகத்தில் டன்டன்னாக வெட்கம்!

'யாத்தே யாத்தே’ பாடலுக்கு கைலியை முகத்தில் மூடிக்கொண்டு நான்கு மாணவர்கள் ஆட... ரணகள ரெஸ்பான்ஸ். ஆளாளுக்கு ஒன்ஸ் மோர் கேட்க, நான்கு தடவை அரங்கேறியது 'யாத்தே’! ஐந்தாவதாகவும் 'ஒன்ஸ்மோர்’ குரல் ஒலிக்க, கையெடுத்துக் கும்பிட்டபடி மேடையில் இருந்து தப்பித்து ஓடினார்கள் டான்ஸ் பார்ட்டிகள்.
-இ.கார்த்திகேயன்,
வி.ஜெய்கிருஷ்ண கோகிலன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்