என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

கு.ஞானசம்பந்தன்'யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா?'

தன் சொந்தக் கிராமமான சோழவந்தான் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

 ##~##

''சோழவந்தான்... ஊருக்கு நடுவால வைகை ஆறு பாயுற மதுரைப் பக்கத்துக் கிராமம். அதனால ஊரையே வட கரை, தென் கரைன்னு கரை பிரிச்சுச் சொல்வாய்ங்க. தென் கரையில் நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் பிறந்தார். வட கரையில் நான் பிறந்தேன்.

ஆத்தங்கரைப் பாசனத்தால், ஊரே பச்சைப் பசேல்னு இருக்கும். எங்க அப்பா... ஆன்மிகவாதி. அன்பு மட்டும்தான் அவருக்குத் தெரியும். அதனால், எனக்கு அன்புச்சாமின்னு பேரு வெச்சார். ஆன்மிகமும் சொல்லிக் கொடுத்தார். ஊர்ல அப்பா நடத்திய ஒரு விழாவுக்குத் தலைமை தாங்க ஆறுமுக நாவலர்னு ஒரு மடாதிபதி வந்திருந்தார். வழக்கமா வர வேண்டிய ஓதுவார் அன்னிக்கு வரலை. அவருக்குப் பதிலா என்னைப் பாடச் சொன்னாங்க. திருஞானசம்பந்தரோட 'தோடுடைய செவியன்’ பாட்டைப் பிசிறு இல்லாமப் பாடினேன். 'இனிமே, இவனை 'ஞானசம்பந்தன்’னு கூப்பிடுங்க’ன்னு அந்த மடாதிபதி சொல்ல, அன்புச்சாமி அப்பவே ஞானசம்பந்தன் ஆகிட்டேன். இப்படி ஒரே பாட்டில் பேர் வாங்குன ஆள் நான்!

என் ஊர்!

அப்போ மரத்தடியில்தான் வகுப்புகள் நடக்கும். ஒவ்வொரு மரத்திலும் 1 'ஏ’, 2 'பி’ன்னு போர்டு தொங்கவிட்டு இருப்பாங்க. அப்பவே 'மரம் ரெண்டாப்பு வரைக்கும் படிச்சிருக்குடா’ன்னு கிண்டல் பண்ணுவோம். அப்போ வாத்தியார் கேள்வியை எழுதிப்போட்டு, பதிலையும் ஸ்டேண்டிங் போர்டில் எழுதிப்போடுவார். அதைத் தப்பில்லாமல் எழுதிட்டா... பாஸ் மார்க். அப்போ யாருக்கும் தன்னோட பேரைக்கூடத் தப்பில்லாம தமிழ்ல எழுதத் தெரியாது. அப்படிப் படிச்சு பாஸ் பண்ணினவங்க நாங்க.

அந்தச் சமயம்தான் எங்க ஊர்ல 'பட்டிக்காடா பட்டணமா?’ பட ஷூட்டிங் நடந்தது. ஸ்கூல் கட் அடிச்சு, நேரே ஷூட்டிங் பார்க்கக் கிளம்பிடுவேன். இப்படியே ஒரு மாசம் ஓடிருச்சு. 'என்னடி ராக்கம்மா... உன் பல்லாக்கு நெளிப்பு’ பாட்டு ஷூட் பண்றாங்க. வேடிக்கை பார்க்க முடியலையேன்னு ஒருத்தரை விலக்கி எட்டிப் பார்த்தேன். நான் விலக்குன ஆள்... எங்க வாத்தியார். மார்கழிக் குளிர்ல இழுத்துப் போர்த்திட்டுத் தூங்குறவன் மூஞ்சியில பச்சத் தண்ணியைப் பொளிச்சுனு அடிச்சா, எப்படி இருக்கும்? அப்படி உதற ஆரம்பிச்சது உடம்பு. ஆனா, அவர் என்னைப் பார்த்ததும் மிரண்டு, 'டேய், நா இங்கே வந்தேன்னு ஸ்கூல்ல சொல்லிடாதேடா’ங்குறார். சிரிசிரின்னு சிரிக்க ஆரம்பிச்சவன், கண்ணுல தண்ணி அருவியா கொட்டுற வரை சிரிச்சேன்.

என் ஊர்!

அப்போ 'தாயுமானவர்’னு ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. தியேட்டர் ஓனர் ரசனையான ஆளு. படம் ஆரம்பிக்கப்போறதை அறிவிக்கிறதுக்காக பாட்டு போடுவார். அதுக்கு 'உள் ரெக்கார்டு’னு பேரு. 'எனக்கு இனி பயமேது?’ன்னு பாட்டு போட்டார்னா, தியேட்டர்ல கூட்டம் கும்முதுன்னு அர்த்தம். 'யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா?’ன்னு பாட்டு வந்தா, தியேட்டர் காத்தாடுதுன்னு அர்த்தம்.

ஒரு பாட்டைவெச்சே படத்தோட வெற்றி தோல்வியைச் சொல்லிருவோம். 'விருமாண்டி’யில் நான் நடிச்சப்போ, தாயுமான வரில் உட்கார்ந்து அந்தப் படத் தைப் பார்க்கணும்னு ஆசைப்பட் டேன். ஆனா, படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ளே தியேட்டரை இடிச்சுப்புட்டாங்க. இன்னிக்கும் நான் நினைச்சு வருத்தப்படுற விஷயம், தாயுமானவர் தியேட்டர்!

ஸ்கூல் படிப்பு முடிச்சுட்டு, மேல் படிப்புக்கு மதுரைக்கு பாசஞ்சர் ரயிலில் போய் வர ஆரம்பிச்சேன். படிப்பு முடிஞ்சு மதுரையில் செட்டில் ஆகுற வரை 20 வருஷம் எனக்கும் ரயிலுக்குமான உறவு தொடர்ந்து இருந்தது. சோழவந்தான்ல இருந்து மதுரைக்கு டிரெய்ன்ல வரும்போது, ஃபாத்திமா லேடீஸ் காலேஜ் கிராஸ் ஆகும். பல மாசமா ஒரு பையன் மட்டும் சின்சியராப் படியில் நின்னு, காலேஜை கிராஸ் பண்ணும்போது கை காட்டுவான். யாருக்குக் காட்டுறான்னு யாருக்குமே தெரியாது. ஒருநாள் பெரியவர் ஒருவர் 'பதிலுக்கு யாராவது கை காட்டுறாங்களாப்பா?’னு கேட்டார். 'அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லைங்க. 'கடமையைச் செய்... பலனை எதிர்பாராதே’ன்னு கிருஷ்ணர் சொல்லி இருக்கார்’னு பதில் சொன்னான். பெரியவர் டரியல் ஆகிட்டார்.

தியாகராஜர் கல்லூரியில் லெக்சரரா சேர்ந்த பின்னாடி, பஸ் பயணங்கள் எனக்கு நிறைய அனுபவங்கள் கொடுத்துச்சு. ஒருநாள் செம மப்புல ஒருத்தர் பஸ்ல ஏறினார். 'எங்கே போகணும்?’னு கண்டக்டர் கேட்டதும், ஒரு பஸ் ஸ்டாப் பேரைச் சொன்னார். அதைக் கேட்டதுமே கண்டக்டர் காண்டு ஆகிட்டார். 'யோவ், இது எல்.எஸ்.எஸ் பஸ். இடையில நிக்காது’ன்னு கத்திச் சொல்ல, 'இடையில நிக்காமப் போறதுக்கு இது என்ன பாலியஸ்டர் வேஷ்டியா?’ன்னு பதில் பௌன்ஸர் போடுறார் மப்பு. கண்டக்டர் புரியாம நிக்க, எனக்கு சிரிப்பை அடக்க முடியலை. இப்படி ரயிலிலும் பஸ்ஸிலும் எனக்குக் கிடைச்ச அனுபவங்கள் நிறைய. அதை வெச்சுத்தான் இப்ப மேடைக்கு மேடை கைதட்டு வாங்கிட்டு இருக்கேன். என்னை உருவாக்கிய சோழ வந்தானுக்கு எப்போதும் என் நன்றி!''

-எஸ்.கலீல்ராஜா
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி