மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 04

மனம் கொத்திப் பறவை
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை

மனம் கொத்திப் பறவை! - 04

மனம் கொத்திப் பறவை! - 04
மனம் கொத்திப் பறவை! - 04
மனம் கொத்திப் பறவை! - 04
மனம் கொத்திப் பறவை! - 04

நீ உண்மையிலேயே கால்ஃப் ஆடுகிறாயா, அல்லது ரீலா? என்று கேட்டான்

கிருஷ்ணா. 'சந்தேகம் இருந்தால் வந்து பார்' என்றேன். அப்புறம்தான் தெரிந்தது அவன் கேட்ட காரணம். கால்ஃப் ஆடுபவர்கள் கால்ஃபை கோல்ஃப் என்று சொல்ல மாட்டார்கள். கால்ஃப் என்றுதான் சொல்வார்கள். 'அடப்பாவி, இதுகூடவா எனக்குத் தெரியாது? மனிதர்களுக்காகத்தான் மொழியே தவிர, மொழிக்காக மனிதர்கள் இல்லை' என்று ஆரம்பித்து, உச்சரிப்புபற்றி ஒரு பெரிய லெக்சர் கொடுத்தேன். ஆங்கிலேயர்கள் காந்தியை கேண்டி என்று அவர்கள் பாணியில்தானே சொன்னார்கள்; என்ன செய்வது?

இது மிகவும் சிக்கலான விஷயம். மயிலாப்பூரில் உள்ள லஸ் என்ற இடத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் தெரியுமா? சொன்னால் என்னை லூஸ் என்பீர்கள். வாஸ்கோ ட காமா ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியா செல்லும் கடல் வழியைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, கி.பி. 1500-ல் எட்டு போர்ச்சுக்கீசிய பாதிரியார்கள் இந்தியாவை நோக்கிக் கப்பலில் கிளம்பி, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கோழிக்கோடு வந்து சேர்ந்தார்கள். கரை இறங்கியதும் அவர்களில் மூன்று பேர் கொல்லப்படவே, பதறிய மீதி ஐந்து பேரும் கடல் வழியாகப் புறப்படுகிறார்கள். பயணத்தின்போது புயலில் மாட்டி வழி தெரியாமல் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டபோது, மேரி மாதாவைப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

மனம் கொத்திப் பறவை! - 04

அப்போது ஓர் இடத்தில் வெளிச்சம் தெரியவே, அதை நோக்கிக் கப்பலைச் செலுத்துகிறார்கள். அந்த இடம் ஒரு கடற்கரை. அந்தக் கரையில் இருந்து பார்த்தபோதும் வெளிச்சம் சிறிது தூரத்தில் தெரியவே, அதைத் தொடர்ந்து வருகிறார்கள். ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியில் வெளிச்சம் மறைகிறது. அந்த இடத்தில் அந்த பாதிரிகள் மேரி மாதாவுக்கு ஒரு கோயிலைக் கட்டுகிறார்கள். அவர்கள் இறங்கிய இடம், மெரினா கடற்கரை. மாதாவுக்குக் கோயில் கட்டிய இடம் இன்றைய லஸ்.

மனம் கொத்திப் பறவை! - 04

1516-ல் கட்டி முடித்த அந்த ஆலயத்தை 'நோஸா செஞோரா தெ லூஸ்' என்று போர்ச்சுக்கீசிய மொழியில் அழைத்தார்கள். லூஸ் என்றால் வெளிச்சம். 'எங்களுக்கு வெளிச்சத்தை அளித்த மாதா' என்று பொருள். இன்றும் இந்த ஆலயத்தை மக்கள் காட்டுக்கோயில் என்றும் பிரகாச மாதா ஆலயம் என்றும் அழைக்கிறார்கள்.

மனம் கொத்திப் பறவை! - 04

மயிலாப்பூர்வாசிகளுக்கு இந்த ஆலயத்தின் மகிமை தெரியுமா என்று தெரியவில்லை. இந்தியாவில் கட்டப்பட்ட பழமையான தேவாலயங்களில் ஒன்று. கட்டடக் கலையில் பரோக் (baroque) என்று சொல்லப்படும் பாணியில் கட்டப்பட்ட ஆலயம். பரோக் என்பது பிரமாண்டத்தையும் அலங்காரத்தையும் குறிக்கும் வார்த்தை.

இந்தத் தொடர்பற்றி கிருஷ்ணா கூறிய இன்னொரு கருத்து, இது பகட்டாகவும், படாடோபமாகவும் இருக்கிறது. எல்லாம் இந்த கோல்ஃப் காரணமாக ஏற்பட்ட வயிற்றெரிச்சல். 'நீ என்ன பெரிய அம்பானி என்று நினைப்பா?' என்றான். 'இல்லை, அம்பாசமுத்திரம் அம்பானி' என்றேன்.

வாட வெத்தலை என்றால் என்ன தெரியுமா? ஓர் ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்கு ஒரு வெற்றிலைக் கடைக்காரர் தினமும் கும்பகோணம் கொழுந்து வெற்றிலையைக் கொண்டுவந்து கொடுப்பார். இந்தக் கோடீஸ்வரன் என்ன செய்வான் என்றால், கடைக்காரர் கொடுக்கும் புத்தம் புதிய வெற்றிலையை ஈரத் துணியில் கட்டிவைத்துவிட்டு முந்தின நாள் கொடுத்த வெற்றிலையை எடுத்துப் போட்டுக்கொள்வான். இப்படி வாடிய வெற்றிலையையே அவன் சாப்பிட்டு வந்ததால் அவன் பெயரே வாட வெத்தலை என்று ஆயிற்று. பணத்துக்கும் நமக்குமான உறவு இப்படிப்பட்டதுதான். பணத்துக்காக வாழ்க்கையா... வாழ்க்கைக்காகப் பணமா?

என் நண்பர் ஒருவர் பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் வரும்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் விபத்துக்கு ஆளானார். காயம் அதிகம் இல்லை. ஆனாலும், இதே சாலையில் அவருக்கு இது மூன்றாவது விபத்து. நண்பரிடம் நான் இரண்டு கேள்விகள் கேட்டேன். இரண்டுக்கும் அவரிடம் இருந்து ஆமாம் என்று பதில் வந்தது. அப்படியானால் விபத்து நடக்க எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன். அந்த இரண்டு கேள்விகள்: 1. அதிகாலையில் கிளம்பினீர்களா? (அவர் கிளம்பிய நேரம் காலை 4.30. விபத்து நடக்கும்போது மணி 5. அநேகமாக இரவு முழுவதும் லாரி ஓட்டும் டிரைவர்கள் அரைத் தூக்கத்தில் இருக்கும் நேரம்). 2. முன் இருக்கையில் ஸீட் பெல்ட் போடாமல் இருந்தீர்களா?

இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகளே காரணம். எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே குறை சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. ஒருவர் காரில் சென்றுகொண்டு இருக்கிறார். ஒரு மேம்பாலம் வருகிறது. சட்டென்று அதில் செல்கிறார். திடீரென்று கார் 60 அடி உயரத்தில் அந்தரத்தில் பறக்கிறது. யார் காரணம்? கட்டி முடிக்கப்படாத பாலத்தின் ஆரம்பத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாதபடி தடைக்கல் போடாதது யார் தவறு? அந்த இன்ஜினீயர்கள் யார்? எல்லோரும் நம்முடைய சொந்தக்காரர்கள்தானே?

இந்தியா முழுவதும் அடிக்கடி நடக்கும் ஒரு விபத்து,ஆழ் துளைகளில் குழந்தைகள் சிக்கிக்கொள்வது. பிறகு, அந்தக் குழந்தையைக் காப்பாற்ற ராணுவம் சுரங்கப் பாதை அமைத்துப் போராடுவார் கள். சேட்டிலைட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும். இந்தியாவே பிரார்த்திக்கும். இருக்கட்டும், இந்த விபத்துகளுக்கு யார் காரணம்? துளை போடும் தொழிலாளர்கள், அவர்களை மேற்பார்வை செய்பவர்கள் ஆகியோரின் பொறுப்பின்மை. துளையைப் போட்டுவிட்டு, வேலை முடிவுறாமல் மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில் அந்தத் துளையின் மேல் வெறும் பேப்பரைப் போட்டு மூடிவிட்டுப்போவதால் ஏற்படும் விபத்து அது.

இதைப்போன்ற பொறுப்பற்ற தன்மைதான்

மனம் கொத்திப் பறவை! - 04

சாலை விபத்துகளுக்கும் காரணம். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது இல்லை. கேட்டால் தலையில் வேர்க்கிறது என்கிறார்கள். கடவுளே, இவர்களுக்கு உயிர் முக்கியம் இல்லையா? பெருத்த ஆரவாரத்தோடு ஆரம் பிக்கப்பட்ட ஹெல்மெட் சட்டம் மற்ற சட்டங்களைப்போலவே காணாமல் போய்விட்டது. இதில் இன்னொரு பெரிய சிக்கல் என்ன என்றால், வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களின் கதி. உண்மையில் விபத்தின்போது பின்னால் அமர்ந்திருப்பவருக்கே ஆபத்து அதிகம். ஆனால், பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியத் தேவை இல்லை. இது எந்த ஊர் நியாயம்? மேலை நாடு களில் ஏன், நமக்குப் பக்கத்தில் உள்ள மலேசியாவில்கூட ஹெல்மெட் வைப்பதற்கு என்று வாகனங்களின் பின்புறத்தில் ஒரு குடுவை போன்ற அமைப்பு இருக்கும். அந்த வசதி இந்தியாவில் இல்லை.

தமிழ்நாட்டில் இந்த அராஜகம் இன்னும் அதிகம். இந்தியா பூராவும் காரோட்டிகளும் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் ஸீட் பெல்ட் போடாவிட்டால், அபராதம் உண்டு. தமிழ்நாட்டில் கிடையாது.

ஒருநாள் இரண்டு இளைஞர்களுடன் காரில் சென்றுகொண்டு இருந்தேன். நான் பின் இருக்கையில் இருந்தேன். முன்னே அமர்ந்திருந்த இருவருமே ஸீட் பெல்ட் அணியவில்லை. கேட்டதற்கு காரை ஓட்டிக்கொண்டு இருந்த இளைஞன் டிரைவிங் லைசென்ஸே எடுக்கவில்லை என்று சொன்னான். உடனே, காரை நிறுத்தச் சொல்லி இறங்கிவிடலாமா என்று நினைத்தேன். ஆனால், அந்த இளைஞன் அன்றுதான் அந்த காரை வாங்கியிருந்தான். பூஜைக்காக பிள்ளையார்(!) கோயிலுக்குச் சென்றுகொண்டு இருந்தோம். அந்த சுபவேளையில் கலாட்டா செய்ய வேண்டாம் என்று காரைவிட்டு இறங்கவில்லை.

ஏன் வாங்கவில்லை என்று கேட்டதற்கு அந்த இளைஞன் சொன்ன காரணத்தைக் கேட்டு நான் மிரண்டுபோனேன். "எதற்கு அநாவசியமாக அரசாங்கத்துக்குப் பணம் கொடுக்க வேண்டும்?" எப்படிப்பட்ட இளைஞர்களை இந்தச் சமூகம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். பெற்றோரும் கல்விக் கூடங்களும்தான் இதற்குப் பொறுப்பு. மற்றொரு காரணம், ஊழல்பற்றிப் பொதுவாக சமூகத்தில் நிலவும் மனப்பான்மை.

மனம் கொத்திப் பறவை! - 04

ப்ரீ கே.ஜி-யில் 25,000 ரூபாய் கொடுத்து குழந்தையைச் சேர்க்கும் போதே இந்த ஊழல் மனப்பான்மை துவங்கிவிடுகிறது. இந்தப் படிப்பை முடிப்பதற்கு எவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறோம்? இனிமேலும் எதற்காக நாம் அரசாங்கத்துக்குப் பணம் தர வேண்டும்? எப்படி எப்படியெல்லாம் அரசாங்கத்தை ஏமாற்ற முடியுமோ, அப்படியெல்லாம் ஏமாற்றலாம். இதுதான் இன்றைய சமூகத்தின் பொதுப் புத்தி. ஒரு மந்திரி ஊழல் செய்கிறார். எவ்வளவு என்று கேட்டால் 60,000 கோடி என்கிறார்கள். இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு எல்லாம் உரிமம் வழங்கும் அதிகாரி ஒருவர் ஊழலில் மாட்டிக் கைது ஆகிறார். அவர் வீட்டில் இருந்த பணம் 3,000 கோடி மற்றும் ஒரு டன் தங்கம். இதனால்தான் அந்த இளைஞன் டிரைவிங் லைசென்ஸ் வாங்க மறுக்கிறான். ஏதோ அவனால் முடிந்த தேச சேவை!

மனம் கொத்திப் பறவை! - 04
மனம் கொத்திப் பறவை! - 04
(பறக்கும்...)