என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

'யாருடா நீ?'

'யாருடா நீ?'

##~##
ண்டிபட்டி அருகே நான்கு மலைகளுக்கு நடுவில் இருக்கிறது ஏத்தக்கோவில். அந்த ஊரின் திகில் அடையாளம்... செய்வினை!

முறுக்கு மீசை, முண்டாசுத் தலையுடன் ''வாங்க!'' என்று வரவேற்கிறார் பூசாரி எத்துராவுலு. வந்து அமர்ந்த பெண்ணின் கண்களில் இருந்து நீர் வழிகிறது. பூசாரி கைத்தண்டையைச் சரி செய்தபடியே, ''சொல்லும்மா, பிரிக்கணுமா... சேர்க்கணுமா?'' என்று கேட்க, ''என் பொண்ணு வேற சாதிக்காரனைக் காதலிக்குறா. அவன் பின்னாடியே மந்திரிச்ச கோழிகணக்காத் திரியுறா. ரெண்டு பேரையும் பிரிக்கணும்!''- குரல் பிசிறப் பேசுகிறார் அந்தப் பெண். ''கவலைப் படாதே. உம் பொண்ணுக்கு அவனோட நினைப்பே இல்லாமப் பண்ணிடுறேன். அவளோட காலடி மண், எச்சில், தலை முடி, மேல் அழுக்கு, துணி ஏதாவது கொண்டுவந்திருக் கியா?'' என்று பூசாரி கேட்க, சுருக்குப் பையில் இருந்து காலடி மண் எடுத்துத் தருகிறார் அந்தத் தாய்!

'யாருடா நீ?'

அருகில் உள்ள வாசி மலைக்குள் போன பூசாரி, சில இலை தழைகளை அள்ளிக்கொண்டு  வருகிறார். இலை தழைகளைக் கல் உரலில் அரைக்க, கண் மைபோல கருமையாகத் திரள் கிறது. அதை உருண்டையாகப் பிடித்து, உலை மூடியில் வைத்து மந்திரங்களை ஓதி, அந்தப் பெண்ணிடம் நீட்டுகிறார் பூசாரி. ''இதைக் கோழிக் குழம்பில் கரைச்சு உன் பொண்ணுக் குக் குடு. சாப்பிட்டதுக்கு அப்புறம், அந்தப் பையனைப் பார்த்தா, 'யாருடா நீ’ன்னு கேட்பா!'' என்று பூசாரி சொல்ல, இடைமறிக் கிறார் அந்த அம்மா.

''சாமி, அந்தப் பையன் சைவம்னு இவளும் கறி திங்கிறதை விட்டுட்டா!'' பூசாரியின் நெற்றி யில் யோசனைச் சுருக்கங்கள். ''பரவாயில்ல... பால்ல கலந்து கொடு!'' என்று பூசாரி சொல்ல... காணிக்கையைக் கொடுத்துவிட்டுக் கிளம்புகிறார் அந்தப் பெண்.

60 வயதுக்காரரைக் காதலிக்கும் தன் மகளின் மனதை மாற்ற மருந்து கேட்டு இரண்டாம் முறையாக வந்திருந்தார் கோம்பைப் பக்கத்துப் பெண் ஒருவர். ''என்னம்மா, உன் பொண்ணு இன்னும் மனசு மாறலையா?'' என பூசாரி கேட்க, உதட்டைப் பிதுக்குகிறார் அந்தப் பெண். ''அந்த .......... மருந்து சாப்பிடவைக்க முடியுமா?'' என்று பூசாரி கோபமாகக் கெட்ட வார்த்தையை உதிர்க்க, தலை அசைத்து மறுக் கிறார் இவர். ''அவனோட போட்டோவ இவ வெச்சிருந்தா. அதை எடுத்துட்டு வந்திருக்கேன் சாமி''-பெண் சொல்ல, பூசாரி கண்களில் பிரகாசம்.

'யாருடா நீ?'

''நாம செய்யப்போறது பாவ காரியம். பன்னி வெட்டிப் பலி கொடுத்தா, அந்த ஆளுக்கு எங்கேயாவது இழுத்துக்கும். நிறைய செலவாகும். யோசிச்சுச் சொல்லும்மா'' என்கிறார் பூசாரி. ''என்னா செலவானாலும் பரவாயில்லை!'' என பணக் கட்டை எடுத்துவைக்கிறார் அந்தப் பெண்.

''இந்த மாதிரி காரியத்துக்கு பன்னியைப் பலி கொடுத்தா, அதோட வம்சம் பலுகாது (வளராது)ன்னு நம்பிக்கை இருக்கு. அதனால யாரும் பன்னியை விலைக்குக் கொடுக்க மாட் டாங்க. அதனால, களவாண்டுதேன் வரணும். பன்னிக்குப் பூசை செஞ்சு, அதை வெட்டி ரத்தத்தைக் குடிச்சு, ஒரு துண்டு விடாம வேக வெச்சுத் திங்கணும். அப்போதான் அந்த ஆளுக்குப் பாதிப்பு வரும். ஆனா, இதுக்கு பணத்தைக் கணக்குப் பார்த்தா வேலைக்கு ஆகாது தாயே''- பூசாரி சோழி உருட்டியபடி சொல்ல, அது வரை பேசாமல் இருந்த கணவர், மஞ்சள் பையில் இருந்து ரூபாய் கட்டுகளை எடுத்துவைக்கிறார்.

சில்லென்று காத்து வீசும் மாலை வேளை. பன்றி பூசைக்குத் தயாராக நான்கு புறமும் குச்சியால் மால் ஊன்றி, அதில் நூல் கட்டு கிறார்கள். நடுவே கம்பளி விரித்து அமர்கிறார் பூசாரி. அவர் முன்பாக எருக்கு இலை, சுருட்டு, அரிசிப் பொரி, கம்பு மாவால் செய்த கருப்புப் பிண்டம், காதோலை கருகமணி எனப் பல பொருட்கள் பரப்பிவைக்கப்படுகின்றன. அருகி லேயே வயதான காதலனின் போட்டோ வைக்கப்படுகிறது. அமுக்கிப் பிடிக்கப்பட்ட பன்றி மிரண்ட கண்களோடு பூசாரியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. திடீரென, ''ஜக்கம்மாள் தேவுடு அவரு ஏட உந்திலாலும் எந்த லோகத்தில் உந்திலாலும் நினைவிழந்தி, நெருகி நெக்கி போகவாலா இது ஜக்கமாள் வாக்கு'' என பூசாரி கர்ஜித்து தெலுங்கில் மந்திரம் ஓதத் துவங்குகிறார். எருக்கு இலையில் இருந்த பொரியைக் கையில் எடுத்து, சுருட்டு மீதும் கருகமணி மீதும் வீசிய பூசாரி, கொஞ்சம் ஆவேசமாகி, பிண்டத்தின் கை கால்களைத் திருகி ஒடிக்கிறார். வயசான காதலனின் போட்டோவை நான்கைந்தாகக் கிழித்து, வாயில் போட்டு மென்று அதைக் கையில் துப்புகிறார்.  சரேலென அரிவாளை எடுத்துப் பன்றியின் கழுத்தை அறுக்கிறார். பீய்ச்சி அடிக்கும் ரத்தத்தை வாய்வைத்து உறிஞ்சிக் குடிக்கிறார். 'கிர்கிர்’ எனச் சத்தத்தோடுஅடங்கு கிறது பன்றியின் உயிர். அடுத்து, தீயை மூட்டி பன்றியை வாட்டி கறியை வேகவைத்து அனைவரும் சாப்பிடுகிறார்கள்.

சாப்பிட்டு முடித்து அந்தப் பெண்ணை அழைத்த பூசாரி, ''கவலைப்படாமப் போம்மா... எண்ணி எட்டே நாள்ல அந்த ஆள் பக்கமிருந்து கெட்ட சேதி வந்து சேரும்!'' என்று கறுப்பு மையை நெற்றியில் இழுத்துவிடுகிறார். பவ்யமாக சட்டைப் பையில் கைவிட்டு, ரூபாய் எடுத்து எண்ணிக் கொடுக்கிறார் அந்தப் பெண்ணின் கணவர். அதை எண்ணாமல் அப்படியே வேட்டியில் சுருட்டிவைக்கிறார் பூசாரி. பிரிப்பதற்கு அடுத்த ஆள் தயாராக வந்து நிற்கிறார்!

- இரா.முத்துநாகு