மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - அறிவைத் திருடுவது... அசிங்கம்! - 54

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - அறிவைத் திருடுவது... அசிங்கம்! - 54

சிறிது வெளிச்சம்!.
சிறிது வெளிச்சம்! - அறிவைத் திருடுவது... அசிங்கம்!  - 54
சிறிது வெளிச்சம்! - அறிவைத் திருடுவது... அசிங்கம்!  - 54
அறிவைத் திருடுவது... அசிங்கம்!
எஸ்.ராமகிருஷ்ணன் ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - அறிவைத் திருடுவது... அசிங்கம்!  - 54
சிறிது வெளிச்சம்! - அறிவைத் திருடுவது... அசிங்கம்!  - 54

றிந்தே ஏமாற்றப்படுகிறோம் என்பதுதான் ஒரு மனிதன் அடையும் வேதனைகளில் மிகக் கொடுமையானது. தனது கற்பனையை, தனது உழைப்பை, தனது இடையறாத முயற்சிகளை இன்னோர் ஆள் தனது என உரிமைகொண்டாடும்போது, அதை மௌனமாகப் பார்த்தபடி வழி இல்லாமல் ஏற்றுக்கொள்வதைப்போன்ற துரதிருஷ்டம் வேறு எதுவும் இல்லை.

இன்று அடுத்தவரின் கற்பனையைத் திருடுவது உலகெங்கும் வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் இந்திய சினிமாவில் 118 திரைப்படங்கள் ஆங்கில, உலக மொழிகளில் இருந்து அப்படியே திருடி எடுக்கப்பட்டு இருக்கின்றன என்கிறது புள்ளிவிவரம் ஒன்று. பாடல்கள், இசை, கவிதை, விளம்பர வாசகங்கள், விளம்பர போஸ்டர்கள், உடை அலங்காரம், ஓவியம் என அனைத்தும் நகல் எடுக்கப்படுகின்றன.

சினிமா, இசை, விளம்பரம், பத்திரிகை என்று அனைத்து ஊடகங்களிலும் அறிவுத் திருடர்கள் வளர்ந்துவிட்டார்கள். சாதாரண பெருங்காய டப்பாகூட காப்புரிமை பெற்றிருக்கிறது. ஆனால், ஒரு படைப்பாளியின் கற்பனையில் உருவான படைப்பு எந்தக் காப்புரிமையும் இல்லாமல் பகிரங்கமாகத் திருடப்படுகிறது. அடுத்தவர் பெயரில் வெளியாகிறது. அதைக் கேட்க முறையான காப்புரிமை அமைப்புகள், நடைமுறைகள் நம்மிடையே இல்லை. ஏமாற்று பவர்கள் துளியும் குற்ற உணர்ச்சிகொள்வதே இல்லை.

துணிக் கடையில் ஒரு கர்ச்சீப் திருடினால். குற்றம், ஓடும் பேருந்தில் அடுத்தவர் பாக்கெட்டில் உள்ள 10 ரூபாயைக் கைவிட்டு எடுத்தால், அது குற்றம். ஆனால், ஒரு கலைப் படைப்பை அப்படியே நகல் எடுத்து முறையான உரிமை இன்றி அடுத்தவர் பயன்படுத்திக்கொள்வது மட்டும் எப்படிக் குற்றம் இல்லாமல் போகிறது. இன்னொரு பக்கம், சொற்பப் பணம் தந்துவிட்டு அடுத்தவர் படைப்பை விலைக்கு வாங்கி, அதைத் தன் பெயரில் தனது படைப்பாக உருமாற்றிக்கொள்ளும் வக்கிரமும் சமகாலத்தில் அதிகமாகி வருகிறது.

சிறிது வெளிச்சம்! - அறிவைத் திருடுவது... அசிங்கம்!  - 54

எனக்குத் தெரிந்த ஒரு முதுமையான தமிழ் அறிஞர், பல வருடங்களாக ஒரு பிரபல பேச்சாளருக்கு மேடைப் பேச்சை எழுதித் தருபவராக இருக்கிறார். ஒவ்வொரு கூட்டத்துக்குச் செல்லும்போதும் பேச்சாளர் ஆள் அனுப்பி, தமிழ் அறிஞர் எழுதிக்கொடுத்ததை வாங்கிக்கொண்டுபோய், தனது சொந்த சிந்தனைகள் என்று மேடையில் பேசி கைதட்டல் வாங்குகிறார். இதற்காகத் தமிழ் அறிஞருக்கு மாதம் 5,000 ரூபாய் ஊதியம் தரப்படுகிறது. பேச்சாளருக்குக் கிடைப்பதோ ஒரு கூட்டத்துக்கு 20,000 ரூபாய்.

இப்படி அரசியல்வாதிகளுக்கு, பிரபலங்களுக்கு, தொழில் அதிபர்களுக்கு பேச்சு எழுதித் தருபவர்கள், கவிதை எழுதித் தருபவர்கள், விமர்சனம், பாட்டு எழுதித் தருபவர்கள், புதிய சிந்தனைகளை உருவாக்கித் தருபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை ஆங்கிலத்தில் கோஸ்ட் ரைட்டர் என்கிறார்கள். அந்த ஆவி எழுத்தாளர்கள் உலகின் கண்களில் அடையாளம் காணப்படுவதே இல்லை. யாரோ ஒரு பிரபலம், சொந்தக் கற்பனை என அவரது சிருஷ்டியை உரிமையாக்கிக்கொண்டு கைதட்டல் வாங்கிக்கொண்டு இருக்கிறார்.

அடுத்தவரை ஏமாற்றிப் பொருள் அடைவதைவிட, ஏமாற்றிப் புகழ் அடைவது அவமானத்துக்கு உரியது. அது ஏன் ஒரு மனிதனை உறுத்துவதே இல்லை.
ஒருவர் உயர் அதிகாரியாகவோ, பிரபலமாகவோ, இளம் தலைவராகவோ வளர்ந்துவிட்டால், உடனே கவிதை எழுதத் துவங்கிவிடுகிறார்கள். அது தமிழகத்தின் தனித்துவம். அதாவது, அவர்களாக எழுதுகிறார்களா என்றால் கூலிக்கு ஆள் போட்டு கவிதை, கட்டுரைகள் எழுதி வாங்கித் தனது பெயரில் பாராட்டுக்களை வாங்கிக்கொள்கிறார்கள்.

பணமும் அதிகாரமும் கைக்கு வந்தவுடன் இல்லாத தனித் திறமைகள் அத்தனையும் பிரபலங்களுக்கு ஒரு மாதத்தில் வந்து சேர்ந்துவிடுவதுதான் ஆச்சர்யம். அவர்கள் தங்களது திறமைகள் பிறவியில் இருந்தே தனக்கு இருப்பதாகச் சொல்லி தன்னடக்கம்கொள்வதுதான் கூடுதல் வேடிக்கை.

அப்படி ஒரு திடீர் பிரபலம், எனது எழுத்துக்களை வாசித்திருப்பதாகச் சொல்லி, மாலை நாம் சந்திக்கலாமா என்று ஒருநாள் கேட்டார். அவரது வீட்டில் சந்திப்பு நடைபெற்றது. மிகப் பெரிய வீடு. அவரது அறை விஸ்தாரமாக இருந்தது. அறை முழுவதும் புத்தகங்கள். புத்தகங்களைத் தேடி விலைக்கு வாங்குவதற்காகவே ஓர் உதவியாளர் வேலைக்கு இருந்தார் என்றால் பாருங்கள். எப்படியும் 5,000 புத்தகங்களுக்கு மேலாக இருக்கக்கூடும்.

இன்னோர் அறையில் 2,000 உலகத் திரைப்படங்கள், ஹோம் தியேட்டர். அந்த அறையின் சுவரில் பதிக்கப்பட்ட அலமாரியில் உலகின் பல்வேறு விதமான இசைத் தகடுகள், இசைக் கருவிகள், கூடுதலாக ஓர் அலமாரி முழுவதும் பழைமையான பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், மாடியில் உள்ள ஓர் அறைக்கு அழைத்துப் போனார். அங்கே விதவிதமான என்சைக்ளோபீடியா, பழைய ஏடுகள், பிரதிகள், ஏதோ ஒரு விநோத மியூஸியத் துக்கு வந்துவிட்டதுபோன்று இருந்தது.

அவரோடு பேசத் துவங்கிய மறு நிமிடம், அவர் முழு முட்டாள் என்பதும், அவரது கையில் மிதமிஞ்சிய அளவில் பணம் இருப்பதால், யார் எதைச் சொன் னாலும் விலைக்கு வாங்கி, அதில் தனக்கு அதிக ஆர்வம் இருப்பதைப்போல போலியாகக் காட்டிக்கொள்கிறார் என்ப தையும் உணர முடிந்தது.

ஒரே ஆள் எப்படி இலக்கியம், இசை, சினிமா, நுண்கலை, அகழ்வாராய்ச்சி, பயணம், ஆய்வு, சமூக சிந்தனை, எழுத்து, விளையாட்டு, இதழியல் என்று அத்தனை துறைகளிலும் ஒரே நேரத்தில் விற்பன்னராக இருக்க முடியும் என்று தெரியவில்லை. அந்தப் பிரபலம் அப்படித் தன்னைக் காட்டிக்கொண்டு இருந்தார். அவரது வீடு மிகப் பெரிய நாடக மேடைபோலவே தோன்றியது. தன்னை அறிவாளியாகக் காட்டிக்கொள்ள ஓர் ஆள் எவ்வளவு முட்டாளாக நடந்துகொள்ள முடியுமோ, அத்தனையும் அவர்மேற்கொண் டார். தனது தவறுகளை அடுத்தவர் அறிந்துவிடுவாரோ என்ற கூச்சம்கூட அவரிடம் துளியும் இல்லை. அதுதான் பணத்தின் இயல்புபோலும்.

தான் அறிவாளி இல்லை. தனக்கு அதிகம் தெரியாது என்று சொல்லிக்கொள்வதை ஏன் மனிதர்கள் எப்போதும் அவமானமாக நினைக்கிறார்கள். எல்லாம் தெரிந்தவர்போல காட்டிக்கொள்வதில் அப்படி என்ன சுகம் இருக்கிறது?

தனக்குத் தெரியாததைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்வதில்தான் எல்லா தவறுகளும் துவங்குகின்றன. அதை யாராவது மறுத்தால் அவர் மீது கோபம் உருவாகிறது. அதை எங்காவது, யாராவது நிரூபணம் செய்துவிட்டால், பழிவாங்கத் தூண்டுகிறது.தன்னைப் பற்றி முதுகுக்குப் பின்னால் பேசிச் சிரிக்கிறார்கள் என்ற உண்மையைக்கூட ஒரு மனிதன் அறியாமல் பகட்டாக இருப்பதை எந்த வகையில் சேர்ப்பது. எதற்காக இந்த இழிவான நடிப்பு?

அந்தப் பிரபலத்திடம் நான்குவிதமான செல்போன்கள் இருந் தன. நான்கிலும் அவர் மாறி மாறிப் பேசிக்கொண்டு இருந்தார். இடையிடையே, லத்தீன் அமெரிக்க இலக்கியம், பெட்ரோப் அல்மதோவார் சினிமா, லெமூரியா கண்டம் உண்மையானதா, ஈழத் தமிழர் பிரச்னை என்ற சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். எனக்கு ஓர் அபத்த நாடகம் ஒன்றில் நடிப்பதைப்போலவே இருந்தது.

அவர் எனக்கு ஜப்பானிய முறையில் தேநீர் தயாரிப்பது பிடிக்கும் என்றுச் சொல்லித் தானே, தேநீர் தயாரித்து வருவதாக கிச்சன் நோக்கிச் சென்றார். அப்போது அவரது உதவியாளர் அறைக்கு வந்து 10 நிமிடங்கள் என்னோடு பேசிக்கொண்டு இருந்தார். அப்போதுதான் ஓர் உண்மை புரிந்தது. அந்தப் பிரபலம் தினமும் மாலையில் வெவ்வேறு துறை சார்ந்த ஆட்களைத் தன் வீட்டுக்கு அழைத்துப் பேசிக்கொண்டு இருப்பது அவருக்கு ஒரு பொழுதுபோக்கு. தன்னைத் தெரியாதவர்கள் எந்தத் துறையிலும் இருக்கக் கூடாது என்பதே அவரது லட்சியம்.

அவரைத் தேடி வருபவர்கள் பேசிய விஷயங்களைக்கொண்டு, அதைத் தனது எண்ணமாக அடுத்தவரிடம் பேசுவார். ஒரு முறை வீட்டுக்கு அழைத்தவரை அடுத்த நான்கு வாரங்களுக்கு அழைக்க மாட்டார். யார் என்ன புத்தகம், சினிமா, இசைத் தகடுபற்றிச் சொன்னாலும் உடனே வாங்கிவிடுவார். ஆனால், எதையும் படிக்கவோ, பார்க்கவோ மாட்டார்.

சில வேளைகளில் இதைப் படிப்பதற்காகச் சில இளைஞர்களை வைத்திருக்கிறார். அவர்கள் ஒரு புத்தகம் படித்து அவரிடம் சொல்வதற்கு 200 ரூபாய். இது தவிர, மூன்று நகல் எழுத்தாளர்களை விலைக்கு வாங்கிவைத்திருக்கிறார். இப்போது ஜப்பானியத் தேநீர் தயாரிப்பதாகப் போனாரே... அதுகூட நடிப்புதான். வீட்டில் இதற்காக ஒரு சமையற்காரன் இருக்கிறான். அவனே உண்மையான டீ எக்ஸ்பர்ட். பிரபலத்தின் ஒரே வேலை... குடிப்பது, நன்றாகச் சாப்பிடுவது, உறங்குவது மட்டுமே. முறைகேடான வழிகளில் மிதமிஞ்சிய பணம் கிடைக்கிறது. அதை இப்படிச் செலவழிக்கிறார் என்றார் உதவியாளர்.

அதற்குள் ஜப்பானியத் தேநீர் வந்திருந்தது. தான் அதை எப்படித் தயாரித்தேன் என்று விளக்கமாக பிரபலம் சொன்னார். அதன் பிறகு, ஜப்பான் தொடர்பாகத் தன்னிடம் உள்ள இசைத் தட்டுகள், திரைப்படங்கள், ஓவியங்களை எடுத்துக் காட்டினார். வேடிக்கை என்னவென்றால், அதில் பாதிப் புத்தகங்கள் அட்டைகூடப் பிரிக்கப்படவில்லை. அதை அவர் அறிந்துகொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டினேன். உடனே, அவர் அதன் முந்தைய பதிப்பைத் தான் வாசித்து இருப்பதாகவும், இது தற்போது வெளியான புதிய பதிப்பு என்று சொல்லிச் சிரித்தார்.

சினிமாவில் எவ்வளவோ நடிகர்களைக் கண்டு இருக்கிறோம். புகழ்ந்து பாராட்டி இருக்கிறோம். ஆனால், நிஜ வாழ்வில் சிலர் நடிப்பதைக் காணும்போது சினிமா இன்னும் இது போன்ற உன்னத கலைஞர்களை அடையாளம் கண்டுகொள் ளவே இல்லை என்றே தோன்றியது. இவர் ஒரு தனி நபர் இல்லை. இவரைப்போன்ற போலி அறிவாளிகள், போலி படைப்பாளிகள் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களைச் சுற்றி விதவிதமான முகமூடிகளைப் போட்டுக்கொள்கிறார்கள். எளிய மனிதர்களிடம் உள்ள நேர்மைகூட இவர்களிடம் இல்லை.

சிறிது வெளிச்சம்! - அறிவைத் திருடுவது... அசிங்கம்!  - 54

சார்லி சாப்ளின், 'சிட்டி லைட்ஸ்' என்று ஒரு படம் இயக்கினார். மிகப் புகழ்பெற்ற படம். அதில் ஒரு பணக்காரன் இரவு ஆனதும் மிதமிஞ்சிக் குடித்தபடியே நகரில் அலைகிறான். அவனை நாடோடியான சாப்ளின் நீச்சல் குளத்தில் விழுந்துவிடாமல் காப்பாற்றுகிறார். உடனே, அவன் சாப்ளி னைத் தன் வாழ்நாளின் சிறந்த நண்பன் என்று புகழ்ந்து, தன் வீட்டுக்கு அழைத்துப் போகிறான். பகட்டான உணவு, உடை, வசதிகள் அத்தனையும் சாப்ளினுக்குக் கிடைக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் கார்கூடப் பரிசாகத் தரப்படுகிறது.

ஆனால், விடிந்ததும் அதே பணக்காரன், சாப்ளினைப் பிச்சைக்காரன் என்று சொல் லித் துரத்திவிடுவதோடு, தான் கொடுத்த பொருட்களை எல்லாம் பறித்துக்கொள்கிறான். பணக்காரனுக்கு இது ஒரு பழக்கம். இரவாகி அவன் குடித்தவுடன் தாராள மனதும் அன்பும் பெருகிவிடும். பகலில் அவன் மிக மோசமானவன் ஆகிவிடுவான். இவனிடம் சிக்கி சாப்ளின் படும்பாடுதான் படத்தின் மையக் கதை. பணக்காரனின் இரட்டை நிலை உலகுக்குப் புரிந்துவிட்டது. ஆனால், போலி அறிவாளிகள், அறிவுத் திருடர்கள்பற்றி அதிகம் மக்கள் இன்னமும் அறிந்துகொள்ளவே இல்லை.

சிறிது வெளிச்சம்! - அறிவைத் திருடுவது... அசிங்கம்!  - 54

ஒரு மனிதனின் கற்பனை என்பது அவனது கண்டுபிடிப்பு. வாழ்க்கையைப் புரிந்து கொண்டதன் அத்தாட்சி. மனசாட்சி விழித்துக்கொண்டு இருப்பதன் அடையாளம். யாவையும்விட சகமனிதனுக்குத் தன் அனுபவத்தைக் கற்றுக்கொடுக்கும் ஓர் அறிவுத் துணை. அதைத் திருடுவதும் ஏமாற்றிப் புகழ்பெறுவதும் அசிங்கமானது.

அறிவுசார் திருட்டைக் கண்காணிக்கவும், தடுக்கவும் தனியே துறைகள் அமைக்கப்படுவதால், பிரச்னைகள் தீர்ந்துவிடாது. போலிகளைப் பொதுமக்கள் அடையாளம் கண்டுகொள்வதோடு, பகிரங்கப்படுத்தவும் புறக்கணிக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் சில ஆண்டுகளில் திருக்குறளை எழுதியது தானே என்றுகூட யாரோ ஒருவர் கைதட்டல் வாங்கிக்கொண்டு புகழ்பெறவும் கூடும்!

சிறிது வெளிச்சம்! - அறிவைத் திருடுவது... அசிங்கம்!  - 54

 

சிறிது வெளிச்சம்! - அறிவைத் திருடுவது... அசிங்கம்!  - 54