பலூனை விசித்திரமான பழம் என்று நினைத்துக் கடித்துத் தின்ன ஆசைப்படும் சிறுவர்களைக் கண்டு இருக்கிறேன். அவர்கள் பலூனை அணைத்துக்கொள்கிறார்கள். முத்தம் இடுகிறார்கள். கொஞ்சுகிறார்கள். சாதம் ஊட்டுகிறார்கள். கூடவே பேசு கிறார்கள். கட்டிக்கொண்டு உறங்க ஆசைப்படுகிறார்கள். எதிர்பாராமல் பலூன் உடைந்துவிட்டால், அதற்காக விக்கிவிக்கி அழுகிறார்கள். உடைந்த பலூன் துண்டுகளைத் தேடி எடுத்து மறுபடியும் ஊதி பலூன் ஆக்கமுடியா மல் வருத்தம்கொள்ளும் குழந்தைகள் எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள். அது துடைக்கவே முடியாத வேதனை.
20 வருடங்களுக்கு முன்பு கடையில் 10 பைசா தந்து ரப்பர் பலூன் வாங்கி அதை ஊதித் தருவதற்கு ஆள் தேடிச் சிறுவர்கள் அலைவார்கள். பலூனை ஊதுவது பெரிய கலை. மூச்சை இழுத்துக் கவனமாக ஊத வேண்டும். வேகமாக ஊதினால் வெடித்துவிடும். சிறுவர்களுக்குக் கண் முன்னே பலூன் வெடிப்பதைவிட மிகப் பெரிய சோகம் எதுவுமே இல்லை.
கவனமாக ஊதி அழகான வடிவம் கொண்ட பலூனை நூலால் கட்டி, அந்த நூலைக் கையில் பிடித்தவுடன் சிறுவனின் மனதும் பறக்கத் துவங்கி விடும். வானைத் தன்னால் தொட்டுவிட முடியும் என்று அவன் நம்புவான். தன்னால் பலூனைக்கொண்டு பறவை போல் பறக்க முடியும் என்று கனவு காண்பான். பலூன்களோடு வீதியில் ஓடும் சிறுவர்கள் தாங்கள் உலகிலே பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்றே கருதுகிறார்கள்.
இன்றைக்குக் கடையில் பலூனை வாங்கி அதை ஊதுவதற்கு ஆள் தேடும் சிறுவர்கள் எவரும் இல்லை. காற்று அடைத்து விற்கப்படும் பலூன்களை மட்டுமே வாங்குகிறார்கள். தானாகக் காற்றடைத்துப் பார்க்கும் ஆர்வம் சிறார்களிடம்கூட இல்லை. அதைவிட, பலூன் இன்றைக்கு பார்ட்டிக்கான பொருளாகிவிட்டது. யாராவது ஒன்றுக்கு மேற்பட்ட பலூன்கள் வாங்கினால், உடனே வீட்டில் பார்ட்டியா என்று கேட்கிறார்கள்.
பலூன் எதைக் கற்றுத்தருகிறது? அதைப் பார்க்கப் பார்க்க மனதில் நிறையத் தோன்றுகிறது. 'உள் இழுத்த காற்றை வெளியேவிட்டா, கதை முடிஞ்சிபோச்சு' - இது வாழ்க்கையின் தத்துவம். அதைத்தான் பலூன்கள் நினைவுபடுத்துகின்றனவா? இல்லை, நமது சுய பெருமைகள் யாவும் நாமாக ஊதிப் பெருக்கவைத்தவை. அவை ஒருநாள் தானே உடைந்துவிடும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறதா? இல்லை, காற்று தான் இருப்பதைக் காட்டிக் கொள்வதற்கு பலூன்களைத் தனது வடிவமாகத் தேர்வு செய்திருக்கிறதா?
பலூன்கள் நம் வயதைக் கரைத்துவிடுகின்றன. ஆசையாக ஒரு சிறுமி பலூனைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காண்பதே மனதை நெகிழச் செய்கிறது. பால்ய வயதின் கனவுகள் யாவும் இந்தப்பலூன்கள்போல அற்ப நேரம் நம்மை மகிழ்வித்துவிட்டு பின்பு வெடித்துச் சிதறிப்போனவைதான் இல்லையா?
எனது பால்ய வயதில் பலூன்காரர்கள் வருகை அபூர்வமானதாக இருக்கும். எங்கோ திருவிழாவில், பண்டிகை நாட்களில் அபூர்வமாக ஒரு பலூன்காரன் வருகை தருவான். அது ஏதோ ஒரு தேவதூதன் கிராமத்துக்குள் வந்துவிட்டதுபோன்று இருக்கும். சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் என்று கண்ணைப் பறிக்கும் நிறங்களில் ஊதிய பலூன்களுடன் அவன் மூங்கில் சட்டகம் ஒன்றைத் தோளில் சாய்த்துத் தூக்கிக்கொண்டு நடந்துவருவான். அவன் தோளில் அழுக்கடைந்துபோன ஒரு ஊதாப் பை தொங்கிக்கொண்டு இருக்கும். அது அத்தனையும் ஊதப்படாத பலூன்களே.
அவனைக் கண்டதும் சிறுவர்கள் தேனீக்களைப் போல மொய்த்துக்கொள்வார்கள். ஒரு சிறுவன் பலூன் வாங்குவதை மற்றவன் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருப்பான். பலூன் வாங்கவே முடியாத சிறுமிகள் கண்களால் பலூனைப் பறித்துக் கையில் வைத்துக்கொள்வதைப்போலப் பாவனை செய்வார்கள். அந்த வயதில் பலூன்காரர் யார். எங்கிருந்து வருகிறார். எதற்காக இதைத் தொழிலாகத் தேர்வு செய்தார். அவர் வீட்டில் உள்ள பிள்ளைகள் பலூன்வைத்து விளையாடுமா? என்று நிறையக் கேள்விகள் தோன்றும். எதையும் அவரிடம் கேட்டதே இல்லை.
எல்லா ஊர்களின் பலூன்காரர்களும் ஒன்று போலவே இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷத் தைச் சுமந்து வருகிறார்கள். சந்தோஷத்தின் கயிற்றைச் சிறுவர்கள் கையில் தந்து விளையாட வைக்கிறார்கள். பெற்றோர்கள் தராத அபூர்வ சந்தோஷம் இது. திருவிழா முடிந்து வீடு திரும்பும் குழந்தையின் கையில் உள்ள பலூன், விழாவை எப்போதுமே நினைவுபடுத்திக்கொண்டே இருக் கிறது.
இன்றைக்கு கடற்கரையில், கோயில் முன்பாக பலூன்காரர்களைப் பார்க்கிறேன். சாயல் ஒன்று போலவேதான் இருக்கிறது. யார் அவர்? பலூன் களை விற்பதில் என்ன ஆர்வம் என்று மனது கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. உடையாத பலூன் என ஒன்று வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாத சிறுவர்களே இல்லை. உடைந்து விடுவதுதான் பலூன்களின் அழகுபோல, அது மாறாமல் அப்படியே தொடர்கிறது.
பலூன்களைக் கண்டுபிடித்தவர் யார்? சிறு வயதில் இந்தக் கேள்வியைப் பள்ளி ஆசிரியர் களிடம் கேட்டு இருக்கிறேன். படிக்கிற வழியைப் பாருடா என்று வாயைப் பொத்தி கேள்வியை எனக்குள்ளாகவே அடக்கிவிட்டார்கள். பின்பு, ஒரு முறை கலைக்களஞ்சியத்தை வாசித்து நானே தெரிந்துகொண்டேன்.
லஸ்கோ என்ற பிரேசில் நாட்டு மதகுருதான் பலூனைக் கண்டுபிடித்தவர். 1709-ம் ஆண்டுதான் முதன்முதலாக பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அதைக் கடவுளின் வருகைபோல வியப்போடு பார்த்ததாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. பலூன் என்பது தமிழ் வார்த்தை இல்லை. அது பலூனீ என்ற இத்தாலியச் சொல்லில் இருந்து உருவானது. பெரும்பான்மை நாடுகளில் பலூன் அதே பெயரில்தான் அழைக்கப்படுகிறது.
பலூன்கள் எப்போதுமே கற்பனைகளைத் தூண்டுகின்றன. அதைக் கையில் வாங்கியதும் நடந்து சுற்றிய தெருக்களை மிதந்து காண வேண்டும் என்று மனது பேராசைகொள்ள ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் பலூனைப்பற்றிய ஒரு கதையைத் தனக்குள்ளாகக் கொண்டு இருக்கிறது. அதை வெறும் விளை யாட்டுப் பொருளாக மட்டுமே கருதுவது இல்லை.
|