மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - நோய் தீர்க்கும் சொற்கள்! - 56

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - நோய் தீர்க்கும் சொற்கள்! - 56


நோய் தீர்க்கும் சொற்கள்!
சிறிது வெளிச்சம்! - நோய் தீர்க்கும் சொற்கள்! - 56
சிறிது வெளிச்சம்! - நோய் தீர்க்கும் சொற்கள்! - 56
எஸ்.ராமகிருஷ்ணன்
ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்.
சிறிது வெளிச்சம்! - நோய் தீர்க்கும் சொற்கள்! - 56
சிறிது வெளிச்சம்! - நோய் தீர்க்கும் சொற்கள்! - 56

ம் காலத்தின் தீர்க்கவே முடியாத நோய் எது என ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல்போன நோய் என்றேன். நண்பர் புரியாமல், அது என்ன என்று மறுபடியும் கேட்டார். இன்று மருத்துவரிடம் சென்று வரும் பெரும்பான்மையினர் மருத்துவர்களை நம்புவதே இல்லை. அவர் தந்த மருந்துகள் தன்னைக் குணமாக்குமா என்று சந்தேகப்படுகிறார்கள். எதற்கும் இன்னொரு மருத்துவரைப் பார்த்துவிடலாம் என்று அடுத்த மருத்துவரைத் தேடுகிறார்கள். அவர் தந்த மருந்தை முதல் மருத்துவர் தந்ததுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறார்கள். குழப்பம் அடைகிறார்கள்.

ஆங்கில மருத்துவம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே மாற்று மருத்துவத்துக்குத் தாவுகிறார்கள். அதைச் சாப்பிடத் துவங்குவதற்குள் சந்தேகம் வருகிறது. உடனே, விட்டுவிடுகிறார்கள். மருத்துவம் தொடர்பாக யார் எந்தத் தகவல், செய்தி சொன்னாலும் நம்பிவிடுகிறார்கள். அதை நினைத்து நினைத்து அச்சப்படுகிறார்கள். அந்தப் பயம்தான் நம் காலத்தின் தீர்க்க முடியாத நோய் என்றேன்.

மோகனசுந்தரம் எனது நண்பரின் அண்ணன். அவருக்கு 48 வயது. இன்ஷூரன்ஸ் ஊழியர். திடீரென ஒருநாள் மூட்டு வலியால் அவதிப்படத் துவங்கினார். வீட்டின் அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டி வந்தார்கள். அந்த மருத்துவர் வெறும் எம்.பி.பி.எஸ்., அவரால் இதைச் சரியாகக் கண்டுபிடிக்க முடியாது என்று அவநம்பிக்கைகொண்ட மோகனசுந்தரம், பெரிய மருத்துவமனைக்குப் போய் வரலாம் என்றார். நகரின் அதிநவீன மருத்துவமனையில் சிறப்பு மருத்துவரிடம் காட்டினார்கள். ஸ்கேன் எடுக்கப்பட்டது. வலி நிவாரணிகள், மருந்துகள் தரப்பட்டன. உடனே மோகனசுந்தரம், இது பணம் பறிக்கும் வழி. மூன்றாவதாக ஒரு டாக்டரிடம் காட்டி அபிப்ராயம் கேட்டுவிடலாம் என்றார். அதற்கும் வீட்டார் சம்மதித்தனர்.

சிறிது வெளிச்சம்! - நோய் தீர்க்கும் சொற்கள்! - 56

இப்படியாக, அவர் இரண்டு வாரங்களில் ஏராளமான டாக்டர்களிடம் தனது மூட்டு வலியைக் காட்டிவிட்டார். உடல் எடை அதிகமாவதன் காரணமாக மூட்டு வலி உருவாகி இருக்கக்கூடும். அல்லது வயதாவதன் காரணமாகத் தேய்மானம் ஏற்படுவது இயல்பு. ஆகவே, வலி அதிகமானால் நிவாரணிகள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை. தனது நோய் மிக இயல்பானது. பெரும் பான்மையினருக்கு வரக்கூடியது என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்த சந்தேகத்துடனே இருந்தார். மருத்துவர் தந்த மருந்துகளை முறையாகச் சாப்பிடவும் இல்லை.

ஒரு மாதத்துக்குப் பிறகு ஆயுர்வேத மருத்துவமனைக்குச் சென்று 2,000 ரூபாய்க்கு மருந்து வாங்கி வந்தார். இரண்டு நாட்களில் அக்குபஞ்சர் சிகிச்சை செய்தார். அவரது உறவினர் வழியாக ஹோமியோபதி வைத்தியச் சிகிச்சைபற்றிக் கேள்விப்பட்டு, அங்கேயும் போய் வந்தார். இடையில் 12 கோயில்களில் பிரார்த்தனை, பூஜைகள் செய்துகொண்டார். எதனாலும் மூட்டு வலி குறையவே இல்லை.

மோகனசுந்தரத்தின் அப்பாவுக்கு வயது 75. அவருக்குக் கடுமையான கால் வலி இருக்கிறது. அவர் ஒருபோதும் தனது வலியைக் காட்டிக்கொண்டதே இல்லை. தானாகத் தைலம் தேய்த்துக்கொள்வதோடு முடிந்தவரை தனது வேலைகளை அவரே செய்து வந்தார். ஒருபோதும் அவர் தன்னை ஒரு நோயாளியாகக் கருதியது இல்லை.

தினசரி நடைப் பயிற்சி, எளிய உணவு, பகல் நேரங்களை படிப்பதிலும் இசை கேட்பதிலுமாக ஈடுபடுத்தி வந்தார். அவருக்குத் தனது 48 வயது மகன் வலி தாங்க முடியாமல் கூப்பாடு போடுவதும், மருத்துவர்களைத் தேடி அலைவதையும் காண்பது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது.

ஒருநாள் மோகனசுந்தரத்தை அழைத்து, "நீ இன்னும் சின்னப் பிள்ளை இல்லை. வலிக்குதுன்னா... வலிக்கட்டும்னு பொறுத்துக்கோயேன். ஏதாவது ஒரு டாக்டர் கொடுத்த மருந்தை ஒழுங்காச் சாப்பிட்டா, இந்நேரம் நீ சரியாகி இருப்பே" என்றார். அதை மோகனசுந்தரத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

"முட்டாள் மாதிரி பேசுறப்பா. என் வலி எனக்குத்தான் தெரியும். உன் அட்வைஸத் தூக்கிக் குப்பைல போடு. இந்த வீட்ல என் வலியை நீங்க யாரும் புரிஞ்சுக்கவே இல்லை. உங்களுக்கு வேடிக்கையா இருக்கு" என்று கடுமையாகக் கத்தி, வீட்டில் இருந்த மனைவி, பிள்ளைகள் யாவரையும் திட்டித்தீர்த்தார்.

வலியைத் தாங்கிக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் இந்தக் காலப் படிப்பு உதவவே இல்லை.

"உனக்கு எல்லாத்துக்கும் பயம். அதுல பாதி நீயே ஏற்படுத்திக்கிட்டது. 100 பேர் கூடவே இருந்தாலும், நோய் யாருக்கு வருதோ, அவங்கதான் அத்தனையும் அனுபவிக்கணும். நோய்ல இருந்து விடுபட மருந்து மட்டும் போதாது. மனசுதாம்ப்பா முக்கியம்" என மோகனசுந்தரத்திடம் அவரின் அப்பா மனம்விட்டுச் சொன்னார். தற்போது மோகனசுந்தரம் மறுபடி முதலில் பார்த்த மருத்து வரிடம் சிகிச்சை பெறலாம் என்று தொடங்கி இருக்கிறார். இது யாரோ ஒருவரின் பிரச்னை இல்லை. பெரும்பான்மையினர் மருத்துவத்தை, மருத்துவர்களைச் சந்தேகத்துடனே பார்க்கிறார் கள். அதற்குத் துணை செய்வதுபோலவே போலி மருந்துகள், பணம் பறிக்கும் மருத்துவமனைகள், போலி டாக்டர்கள் பெருகி வருகிறார்கள். அவர் களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கதைகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிடுகின்றன. அது நோயைவிட அதிக அச்சம் ஊட்டுகிறது.

சிறிது வெளிச்சம்! - நோய் தீர்க்கும் சொற்கள்! - 56

நம்பிக்கைதானே மருத்துவத்தின் முதல் படி. அதைக் கைவிட்டால் எப்படி நோய் குணமாகும்? கடந்த காலத்தில் டாக்டர்கள் மீது நம்பிக்கை இருந்தது. மருத்துவர் முன்பாகப் போய் உட்கார்ந்த மறு நிமிடமே, தனக்குக் குணமாகப்போகிறது என்ற நம்பிக்கையை நோயாளி உருவாக்கிக்கொள்ளத் துவங்கு வான். மருத்துவரும் மிக அன்பாகப் பேசி அவனை ஆறுதல்படுத்துவதோடு மிகக் குறைவான மருந்துகளால் அவனது நோயைக் குணமாக்க முயற்சிப்பார்.

நோயாளி - மருத்துவர் என்ற உறவு கறாரானது அல்ல; மாறாக, மருத்துவர் மீது நோயாளிகள் மரியாதையுடன் இருந்தார்கள். மருத்துவர்களும் நோயாளிகளின் மீது அதிக அக்கறையும் அன்பும்கொண்டு இருந்தார்கள். அது ஓர் அறமாக இருந்து வந்தது. சிற்றூர்களில் மருத்துவர்களே, நோயாளிகளுக்குப் பேருந்துக்காகப் பணம் தந்து அனுப்பிவைத்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது போல மருத்துவரைப் பார்க்கச் செல்பவர்கள், அவருக் காகத் தங்கள் நிலத்தில் விளைந்த பழங்கள், தானியங்கள், கீரைகள், மற்றும் பால் பொருட்களைக் கொண்டு போவார்கள். அப்படி இன்று கிராமப்புற மருத்துவ மனைகளில்கூட நடப்பது இல்லை.

இன்றுள்ள மருத்துவமனைகள், சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயில் பிடிக்கப் போகிற கூட்டத்தைவிட அதிகமான தள்ளுமுள்ளு நடக்கும் இடமாக உள்ளது. ஒரு மருத்துவர், மாலை 4 மணி முதல் 10 மணிக்குள் மட்டும் 120 நோயாளிகளைச் சந்திக்கிறார். அப்படி என்றால், ஒரு நோயாளிக்கு மூன்று நிமிடங்கள் செலவழிக்கிறார். அதில் ஒரு நிமிடம்கூட அவர் பேசுவது இல்லை. மீறி அவர் பேசும் ஒன்றிரண்டு சொற்களும்கூட ஆங்கிலத்தில் இருப்பதால் நோயாளிகள் அதிகம் பீதி அடைகிறார்கள்.

எனது அண்ணன் ஒரு மருத்துவர். அவர் வேட்டி கட்டிக்கொண்டுதான் மருத்துவம் செய்கிறார். ஏன் வேட்டி கட்டிக்கொண்டு மருத்துவம் பார்க்கிறீர்கள் என்று பலமுறை அவரிடம் கேட்டிருக்கிறார்கள். மருத்துவர்கள் தமிழில் பேசுவதோ, வேட்டி கட்டியிருப்பதோ அவமானத்துக்கு உரிய ஒன்றா என்ன?

மருத்துவர்களின் கையெழுத்துக்கள் எல்லாக் காலத்திலும் புரியாத ஒன்றாகவே உள்ளது. புரியாத கையெழுத்தில் மட்டுமே மருந்துகளின் பெயர்கள் தரப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதியா என்ன?

சொற்கள் மருத்துவக் குணம்கொண்டவை. சரியான, ஆறுதல் தரக்கூடிய சில சொற்களை மருத்துவரிடம் இருந்து நோயாளி கேட்டால் போதும், அது மனதில் விதைபோல விழுந்து முளைக்கத் துவங்கிவிடும். அதை வளர்ப்பதற்குத் தெம்பூட்டும் சொற்களை நோயாளியின் நண்பர்களும் குடும்பமும் தொடர்ந்து சொல்லிச் சொல்லி வலிமை தருவார்கள். இன்று நாம் கைவிட்டது அத்தகைய சொற்களையே.

மருத்துவர்கள் ஒன்றும் மந்திரவாதிகள் அல்ல; நம் மனதில் உள்ளதைத் தானே கண்டுபிடிப்பதற்கு. நாம்தான் அவர்களுடன் பேச வேண்டும். அதே நேரம் நோயாளியைப் பேசவிட்டால், அவன் தனது வலியைப்பற்றிய கற்பனையை மிக அதிக மாகவே பேசிக்கொண்டு இருப்பான். ஆகவே, நோயாளிகளுடன் பேசி நோய்மையை அறிந்து கொள்வது ஒரு கலை. அதில் விற்பன்னர்களாக இருப்பவர்களே சிறந்த மருத்துவர்கள்.

நோய், உடலைவிட மனதையே அதிகம் பாதிக்கக்கூடியது. ஆகவே, மனதை நிலைப்படுத்திக்கொள்ளத் தைரியமும் ஆழ்ந்த நம்பிக்கையுமே தேவை. சாவை எதிர்கொள்ளும் நிலையில்கூட நோயாளிகள் நடந்துகொண்ட தைரியமான செயல்பாடுகள் வரலாற்றின் பக்கங்களில் மனித நம்பிக்கையின் சான்றுகளாக உள்ளன. அப்படி ஒரு நோயாளியைப்பற்றிய படம், The Diving Bell and the Butterfly.

2007-ம் ஆண்டு ஃபிரெஞ்சில் வெளியான இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது. ழான் டொமினிக் பௌபே என்ற பத்திரிகையாளர் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் இது. தனது 42-வது வயதில் பௌபே ஒருநாள் பக்கவாத நோயால் தாக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழந்துபோகிறார். மூன்று வார கோமாவுக்குப் பிறகு கண் விழிக்கிறார். இடது கண்ணைத் தவிர, மற்ற யாவும் இறுகிக்கொண்டன. அரிய நோய் இதுவென மருத்துவர்கள் அவதானிக்கிறார்கள். இனி என்ன செய்வது என்று புரியாமல் நோயாளியாகப் படுக்கையில் கிடக்கிறார். அவரைப் பேசவைப்பதற்காக ஒரு சிறப்பு மருத்துவர் சிகிச்சை அளிக்கத் துவங்குகிறார். அது மிகச் சவாலான வேலையாக இருந்தது.

எழுத்துக்களை பௌபே முன்னால் காட்டினால், அவர் கண்ணைச் சிமிட்டுவதன் வழியே சரியான எழுத்தைத் தேர்வு செய்து தனது எண்ணங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியும் என்ற பயிற்சியை ஆரம்பிக்கிறார் மருத்துவர். அது செயல்பட ஆரம்பிக்கிறது. இப்படியாக பௌபே கண் சிமிட்டலின் வழியே பேசத் துவங்குகிறார். படுக்கையில் கிடந்தபோது அவருக்குள் தோன்றிய கனவுகள், எண்ணங்களை அவர் ஒரு புத்தகமாக எழுத நினைக்கிறார். ஒவ்வொரு எழுத்தாகக் கண் சிமிட்டிக் காட்டி, அவரால் புத்தகம் எழுதுவது முடியவே முடியாது என்று யாவரும் அவ நம்பிக்கைகொள்கிறார்கள்.

சிறிது வெளிச்சம்! - நோய் தீர்க்கும் சொற்கள்! - 56

பௌபே விடாப்பிடியாகத் தன்னால் ஒரு புத்தகம் எழுத முடியும் என்று நினைக்கிறார். இதற்காகப் பதிப்பகத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண் அவருக்கு உதவி செய்ய மருத்துவமனைக்கு வந்து சேர்கிறாள். அவர் தனது கதையைக் கண் சிமிட்டல் வழியாக ஒவ்வோர் எழுத்தாக வளர்க்க ஆரம்பிக்கிறார். கதையை எழுத எழுத, அவரது கடந்த கால நினைவுகள் துளிர்விடுகின்றன. போராடி முடிவில் அவர் தனது புத்தகத்தை எழுதி முடிக்கிறார். ஆனால், புத்தகம் வெளியான சில நாட்களில் இறந்துவிடுகிறார். கண் சிமிட்டல் என்ற ஒரே துணையுடன் ஒரு நோயாளி புத்தகம் எழுதிச் சாதனை படைத்த மன தைரியத்தையே இந்தப் படம் விவரிக்கிறது.

நோய்மை, மனிதன் எதிர்கொள்ளும் சவால். எதிர்பாராத சோதனை. அதை வெல்வதன் வழியேதான் அவனது நிஜமான வலிமையை அவனே உணரக்கூடும்!

சிறிது வெளிச்சம்! - நோய் தீர்க்கும் சொற்கள்! - 56
சிறிது வெளிச்சம்! - நோய் தீர்க்கும் சொற்கள்! - 56
சிறிது வெளிச்சம்! - நோய் தீர்க்கும் சொற்கள்! - 56
இன்னும் பரவும்...