உங்கள் உணர்வைத் தவிர, வேறு எதுவும் சிறந்தது இல்லை என்ற நினைப்பு மனதுக்குள் பதிவதன் பின்னணியில்ஒளிந்து இருப்பது தயக்கம்தான். கேட்பதில் இருக்கும் தயக்கம், எனக்கு இது தெரியாது என்று வெளிப்படையாகச் சொல்வதில் இருக்கும் தயக்கம். இப்படி நிறைய உண்டு. இந்தத் தயக்கங்களை மறைக்கவும், ஒளிந்துகொள்ளவும் ஈகோ ஒரு நல்ல போர்வையாகிவிடுகிறது.
நான் சொல்வதுதான் சரி என்று ஒற்றைக் காலில் நிற்பதன் மூலம் தன் தயக்கங்களை மறைத்துக்கொள்ளலாம். எதிரில் இருப்பவரின் கருத்துக்குச் செவிமடுக்க நான் தயார் இல்லை என்பதையும் சொல்லிவிடலாம். இது சுலபமாகத் தெரிந்தாலும் இந்த மனோபாவம் என்றைக்கும் நல்லதல்ல. என் நினைப்பே சரி என்கிற எண்ணம் நீண்ட காலப் பார்வையில் ஆபத்து.
அந்த விஞ்ஞானி மிகச் சிறந்த புத்தி சாலி. யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாததை அவரால் செய்துவிட முடியும். ஆனால், அவரின் படைப்பை ஒரு சிறு குறை சொன்னாலும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது.
பல வருட முயற்சிக்குப் பின் ஒரு புதிய சூத்திரத்தைக் கண்டறிந்தார். தன்னைப் போலவே அச்சு அசலான 13 உருவங்களை உருவாக்கி, அவற்றுக்கு உயிர் கொடுத்து உலவவைக்க அந்த சூத்திரத்தை அவர் பயன்படுத்தினார். இந்த சூத்திரத்தைக் கண்டறிய விஞ்ஞானிக்கு ஒரு தனி ஆர்வம் இருந்தது. காரணம், இன்னும் சில வருடங்களில் தன் உயிரை எடுத்துச் செல்ல எமன் வருவான் என்று அவருக்குத் தெரியும்.
கண், காது, மூக்கு, பேச்சு, செயல் என அனைத்திலும் விஞ்ஞானியைப்போன்றே அந்த 13 பேரும் இருந்தார்கள். விஞ்ஞானி எதிர்பார்த்ததைப்போல ஒருநாள் எமன் வந்தான். ஒரே மாதிரி 14 பேர் இருப்பதைப் பார்த்து ரொம்பவே குழம்பிப்போனான். விஞ்ஞானியின் ஐடியாவும் அதுதானே. எப்படியாவது உண்மையான விஞ்ஞானியின் உயிரை எடுத்தாக வேண்டும். என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறினான் எமன். சட்டென ஒரு யோசனை வந்தது
அந்த 14 பேரையும் ஓர் இடத்துக்கு வரவழைத்தான். 'விஞ்ஞானி சார், மிக அருமையான கண்டுபிடிப்பு உங்களுடையது. மனிதனை மறு உருவாக்கம் செய்வது சாதாரண விஷயமா... இருந்தாலும் உங்கள் கண்டுபிடிப் பில் ஒரு குறை உள்ளது' என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னான். எல்லோரும் அமைதியாகி இருக்க, ஒருவர் மட்டும் கோபமாகி முன்னே வந்து கத்தினார். 'என் படைப்பை எப்படிக் குற்றம் சொல்ல முடியும். என்ன குறை கண்டீர்கள்?' என்று படபடவென கோபப்பட்டார்.
எமன் முகத்தில் ஏக சந்தோஷம். 'வாங்க சார், உங்களைத்தான் தேடிட்டு இருந்தேன்' என்று கையோடு மேலோகம் கூட்டிக்கொண்டு போனார். விஞ்ஞானி எமனிடம் கேட்டார், 'எப்படி நான்தான் விஞ்ஞானி என்று கண்டுபிடித்தீர்கள்?'
'நீ பெரிய அறிவாளி என்றாலும் ஈகோ பிடித்தவன் என்பது தெரியும். அதனால்தான் குறை இருக்கிறது என்று சொன்னேன். நீயும் கோபமாக முன்னே வந்தாய் அவ்வளவுதான்' என்றார்.
இந்த ஜன சமுத்திரத்தில் நீங்கள், நான் எல்லோரும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்கள். ஆனால், நான் மட்டுமே சிறந்தவன் என்ற எண்ணத்தில் இருந்து நாம் வெளியே வந்தாக வேண்டும்.
தயங்கித் தயங்கி நின்றால், ஈகோவுக்குள் ஒளிந்து கொள்ள வேண்டும். இல்லாத ஒன்றுக்குள் ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும்?
வெளியே வாருங்கள்...
தென்றல் சுகமாக வீசுகிறது!
|