வளங்களைத் தனிநபர்கள் சுரண்டல் செய்வதற்கு ஆதிவாசிகள் தடையாக உள்ளார்கள் என்பதே. அத்துடன் சுய லாபங்களுக்காக இயற்கையை அழிப்பதை ஆதிவாசிகள் ஒருபோதும் அனுமதிப்பது இல்லை. வனவாசிகளை நிழல் உருவங்கள்போல யதார்த்த உலகின் கண்களில் இருந்து இருட்டடிப்புச் செய்வதுடன், அவர்களின் ஆதாரப் பிரச்னைகளைப்பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படும்போது எல்லாம் வன்முறையால் அதை ஒடுக்கி, அவர்களை அடையாளம் அற்றுப்போகச் செய்வதே நடந்து வருகிறது.
நூற்றாண்டு காலமாக இயற்கையை நம்பி வாழ்ந்த ஆதிவாசிகள் ஏன் இன்று போராடுகிறார்கள். தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற அவர்களின் குரல்கூட வெளியே கேட்பது இல்லை என்பதுதான் அவர்களின் ஆதாரக் கோபம்.
ஆதிவாசிகளின் போராட்டம், தண்ணீரை, மரங்களை, கானுயிர்களைப் பாதுகாப்பதற்காகவும், இயற்கை வளங்களை அநியாயமாகக் கொள்ளையடிப்பதைத் தடுக்கவுமே துவங்கப்பட்டு இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் இன்றும் அவர்களுக்கு முறையான கல்வி வசதியோ, மருத்துவ வசதியோ, அடிப்படை உரிமைகளோ செய்து தரவில்லை. இரண்டாம்பட்சக் குடிமக்களாகவே ஆதிவாசிகள் எல்லா மாநிலங்களிலும் நடத்தப்படுகிறார்கள்.
மலைப் பயணங்களுக்குச் செல்லும் மக்கள், ஆதிவாசிகளைக் காண்பதை ஒரு வேடிக்கையாகவே கருதுகிறார்கள். அவர்களை, அவர்களின் வசிப்பிடங்களை எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொள்வதில் காட்டும் அக்கறையை அவர்கள் வாழ்நிலை மீது ஒருபோதும் காட்டுவதே இல்லை.
அமெரிக்காவின் பூர்வகுடி இந்தியர்களின் தலைவனாக இருந்த சியாடில், இயற்கையை ஆக்கிரமித்துக்கொள்ள விரும்பிய அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிராகப் போராடினார். அந்தப் போராட்டத்தின்போது அவர் ஆற்றிய உரை மிக முக்கியமானது. அவரது உரையில் மறக்க முடியாத சில பகுதிகள் உள்ளன.
'தூய்மையான காற்றை, பெருகியோடும் ஆற்றை, மலைகளின் மௌனத்தைப் புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் தெரியாத அதிகாரவர்க்கத்திடம் எப்படி இயற்கையை நாங்கள் ஒப்படைப்பது? அவர்கள் இயற்கையை விலைக்கு விற்கப்படும் பொருட்களைப்போலவே கருதுகிறார்கள். இயற்கை ஒரு வணிகப் பொருள் அல்ல; கானகத்தில் உள்ள அத்தனையும் இங்கு வாழ்பவர்களின் அடையாளங்கள்.
இங்கு உள்ள மரத்தை நீங்கள் வெறும் மரமாகப் பார்க்கிறீர்கள். நாங்கள் அதை எங்கள் மூதாதையர்களாகப் பார்க்கிறோம். இங்கு உள்ள ஒரு பாறை வெறும் பாறை இல்லை. அது எங்கள் தாயைப் புதைத்த இடம். இங்கு பூத்துள்ள பூக்கள் இறந்துபோன எங்கள் சகோதரிகளின் சிரிப்பு. காடுதான் எங்களின் வீடு. காடுதான் எங்களின் தாய் - தகப்பன். எங்களை நீங்கள் அதிகாரத்தின் துணைகொண்டு விரட்டி இதைக் கைப்பற்றவும்கூடும். ஆனால், இதன் புனிதத்தை நீங்கள் புரிந்துகொள்ளாமல் சிதைத்துவிடுவீர்கள் என்பதற்காகவே நாங்கள் போராட வேண்டியிருக்கிறது.
உங்களுக்கு நிலம், விலைக்கு விற்கப்படும் ஒரு பொருள். எங்களுக்கு அதுவே வாழ்க்கை. ஆகவே, உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான நிலத்தை நீங்கள் எங்களிடம் கேட்டால் நாங்கள் முன்வந்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், நீங்கள் உங்கள் வசதியைப் பெருக்கிக்கொள்ள நிலம் கேட்கிறீர்கள். இந்தக் காற்றில் எங்களின் பாட்டன் பூட்டன்களின் மூச்சுக் காற்று கலந்து இருக்கிறது. இதைவிட்டு எங்களை விரட்டினால் அவர்களோடு உள்ள அரூபமான தொடர்பு அற்றுப்போகும் என்பதை, ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்?
விதி வலியது என்று நாங்கள் நம்புகிறோம். அதுதான் உங்களை அனுப்பி எங்களோடு சமர் செய்கிறது. எங்களின் ரத்தம் இந்தப் பூமிக்குத் தேவைப்படுகிறது என்பதால், உங்களோடு போராட நாங்கள் முன் நிற்கிறோம். நாங்கள் இறந்துபோனாலும் எங்களின் அழியாத சொற்கள் உங்களை நட்சத்திரம்போல வானில் இருந்து பார்த்தபடியேதான் இருக்கும்!'
சியாட்டிலின் உரை நூற்றாண்டுகளுக்கு முன்பாக நிகழ்த்தப்பட்டு இருந்தபோதும் இன்றைய சூழலிலும் அப்படியே பொருத்தமாக இருக்கிறது. ஆதிவாசிகளைக் கேலிக்குரிய பிம்பமாக மாற்றியதில் ஹாலிவுட் சினிமாவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இன்று வரை ஹாலிவுட்டில் வெளியாகும் பெரும்பான்மைப் படங்கள், ஆதிவாசிகளை எப்படி நாகரிகமான மனிதர்கள் ஒடுக்கி அவர்களை நல்வழிப்படுத்தினார்கள், புதையலை எடுத்தார்கள் என்பதையே விளக்குகிறது.
|