புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுப்பதில்லை என நிறையப் புதிய விஷயங்களையும் பொருளாதாரம் சார்ந்த கூறுகளையும் ரெசஷன் நமக்கு அறிமுகம் செய்துவைத்தது.
உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இந்தப் பொருளாதாரச் சரிவின் தாக்கம் கொஞ்சம் குறைவுதான். ரெசஷன் என்கிற போர்வையில் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்றவை திட்டமிட்டு நடத்தப்படுவதும் பல இடங்களில் நடந்தன... நடக்கின்றன. பெருநகரங்களை மையப்படுத்தி நடக்கும் வர்த்தகப் பரிமாற்றங்களும், யோசனைகளும் பொருளாதார வளர்ச்சியை அலங்காரம் சார்ந்ததாக, அடிப்படைக் கட்டமைப்பைப் பலமாக்கும் உத்திகளற்ற வெறும் வர்த்தகப் பரிமாற்றமாக மாற்றிவைத்திருக்கின்றன.
உலக நாடுகளுக்கு எப்படியோ, இந்தியச் சூழலுக்கு சிறு நகரங்களும் கிராமங்களும் வளர வேண்டியதே அவசியம். சமூக நோக்கோடுகூடிய பொருளாதாரத் தன்னிறைவுக்காகத் திட்டம் வகுத்த பலரும், கிராம வளர்ச்சியையே முன்னிலைப்படுத்தினார்கள்.
சமீபத்திய வருடங்களில் இந்தியாவில் நிலைகொண்டுவிட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளும், சித்தாந்தங்களும் ஒட்டுமொத்தச் சமூகத்துக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கின்றன என்பது தெளிவாகப் புரியவில்லை. ஆனால், இளைஞர்களுக்கு 'எவன் எக்கேடு கெட்டால் என்ன... நீ எப்படியாவது பிழைச்சுக்கோ' என்று ஆழமாகச் சொல்லிக்கொடுத்தது.
'வலியவன் வாழட்டும், எளியவன் ஏங்கட்டும்' என்ற பட்டவர்த்தனமான கொஞ்சமும் வாஞ்சைஅற்ற பொருளாதாரச் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை. ஆனாலும், மரத்தின் மேல் கிளைக்குப் போனவன் கீழே இருப்பவனுக்குக் கை கொடுத்துத் தூக்கிவிடுகிற மரபு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.
இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பாகத்தான் கிராமங்களும், சிறு நகரங்களும் தொடர்ந்து பின்தங்கி இருக்கின்றன. தேசம் மட்டுமின்றி, தனி மனிதர்களும் பெருநகரங்களை மையப்படுத்தியே நமது பொருளாதாரப் பரிவர்த்தனைகளை நகர்த்துகிறோம். ஒரு கட்டத்தில் சொந்தக் கிராமத்துக்குப் போவதும், வருவதும் ஓய்வு எடுத்துக்கொள்வதற்கான ஏற்பாடாக மட்டுமே மாறி வருகிறது.
வெளிநாடுகளில் சம்பாதித்து உள்நாட்டில் முதலீடு செய்தல் எப்படி தேசத்தின் வளர்ச்சிக்கு உதவ முடியுமோ, அதேபோல் பெருநகரங்களில் சம்பாதிப்பதை, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் முதலீடு செய்வது பலன் அளிக்கும் என்கிறது ஒரு பொருளாதாரக் கணக்கு.
|