ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் இலங்கையில் கொல்லப்பட்டார்கள். அது நம்மிடையே கோபத்தை உருவாக்கவில்லை. 10,000 கோடி ஊழல், 15,000 கோடி மோசடி என்று நாளிதழ்களில் செய்திகள் நிரம்பி வழிகின்றன. அதைப் பார்த்துக் கோபம் வரவில்லை. பள்ளிச் சிறுமி கற்பழிக்கப்படுகிறாள். பதின் வயது வேலைக்காரப் பெண்ணை எரித்துக் கொன்றிருக்கிறார்கள். சாதி திமிரில் ஒரு மனிதன் வாயில் மலம் திணிக்கப்படுகிறது. கல்லால் அடித்துக் காதலர்கள் கொல்லப்படுகிறார்கள். கடவுளின் தோழர்கள்போல் இருந்த துறவிகள் காமக் களியாட்டம் நடத்துகிறார்கள். மக்கள் எதற்கும் கோபம் கொள்வதே இல்லை.
ஒருவேளை மென் உணர்ச்சிகள் அதிகமாகிவிட்டனவா? அதுவும் நிஜம் இல்லை என்று இசை, நாடகம், மற்றும் கிராமியக் கலைகள் பார்வையாளர்கள் இன்றி மெள்ள அழிந்து வருவது காட்டுகிறது.
நல்ல இசை, நல்ல சினிமா, நல்ல இலக்கியம் எதையும் விரும்பித் தேடிப் போகிறவர்கள் குறைந்துபோனார்கள். ரசனைகெட்ட சூழல் அதிகமாகி வருகிறது. இப்படியாக மென் உணர்ச்சியும் இல்லை. கோபமும் இல்லை என்றால் மக்கள் என்னவாகத்தான் ஆகியிருக்கிறார்கள்.
யோசித்தால் கிடைக்கும் ஒரே உண்மை, மக்கள் மண்ணாக இருக்கிறார்கள் என்பதே. மண்ணைப் பழிக்கக் கூடாது என்பார்கள். மக்கள் மனது கசடேறிய மண்ணாக மாறியிருக்கிறது. எதையும் கண்டுகொள்ளாமல், எதற்கும் சலனம்கொள்ளாமல் பட்ட மரம்போல வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஏன் இப்படி நமது வாழ்க்கை அர்த்தமற்றுப்போய் இருக்கிறது. எதற்குமே ஏன் கோபம் வருவது இல்லை?
அஹிம்சையைக் கற்றுக்கொடுத்த அதே காந்திதான் பிடிவாதத்தையும் கற்றுத்தந்தார். யார் தடுத்தாலும், எதிர்த்தாலும் பிடிவாதமாக நியாயத்தை மக்கள் உணரச் செய்திருக்கிறார். எங்கிருந்து வந்தது அந்தப் பிடிவாதம். கோபம்தான் பிடிவாதமாக மாறியிருக்கிறது. நியாயமான விஷயங்களில் பிடிவாதமாக இருக்க வேண்டும் என்ற காந்தியின் வழிகாட்டல் ஏன் இன்று கைக்கொள்ளப்படுவது இல்லை.
கோபத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமக்குள்ளாகவே அமுக்கிவைத்துக்கொள்வதைவிடச் சிறு தீக்குச்சிபோலத் தன்னை எரித்துக்கொண்டு வெளிச்சம் தரும் கோபம் வெளிப்பட வேண்டும். அதன் விளைவு மெள்ள விரிவுகொள்ளும். நாம் கோபம்கொள்ள வேண்டிய அவ்வளவு அநியாயங்களும், மனித அவமதிப்புகளும் கண் முன்னே நடக்கின்றன. ஆனால், அடங்கியே போகிறோம். இதற்கு மாறாக, எளிய மனிதர்களிடம் அடங்கிப் போக வேண்டிய இடங்களில் ஆத்திரப்படுகிறோம்.
மனசாட்சியின் குரல் என்ற சொல்லையே இன்று மறந்துவிட்டோம். முன்பு மனசாட்சிக்குப் பயந்தவர்கள் இருந்தார்கள். மனசாட்சி நமது சரி, தவறுகளைக் கண்காணித்தபடியே இருக்கும் என்ற பயம் இருந்தது. மனசாட்சி விழித்திருக்கிறது என்பதன் அடையாளமே சமூகக் கோபங்கள். அது மறையும்போது மனசாட்சியும் கூடவே மறைந்துபோகிறது.
1947 வருடம் நான்கு மாநிலங்கள் ஒன்றிணைந்த சென்னை ராஜதானியின் முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பணிஆற்றிய காலத்தில், ஒரு முறை அவர் அரசு வேலையாகக் குற்றாலம் சென்றிருக்கிறார். அங்கே உள்ள தங்கும் விடுதியில் ஒரு இரவு தங்கி, மறுநாள் சென்னைக்குக் காரில் திரும்பி இருக்கிறார்.
முதல்வரின் கார் டிரைவர், அந்தப் பயணியர் விடுதியில் இருந்த ஒரு பலாப் பழத்தை அறுத்து எடுத்து, காரின் டிக்கியில் போட்டு சென்னைக்குக் கொண்டுவந்துவிட்டார். இந்தச் செய்தி ஓமந்தூராருக்குத் தெரியவருகிறது.
உடனே, டிரைவரை அழைத்து உனக்கு பலாப் பழம் எப்படிக் கிடைத்தது என்று விசாரித்திருக்கிறார். காசு கொடுத்து வாங்கினேன் என்று டிரைவர் பொய் சொன்னதும், அவருக்குக் கோபம் வந்துவிட்டது. உண்மையைச் சொல் என்று மிரட்டியதும் பலாப் பழத்தை குற்றாலத்தில் இருந்து திருடி வந்த விஷயத்தை டிரைவர் ஒப்புக்கொண்டுவிட்டார். உடனே ஓமந்தூரார், 'நீ இப்போதே குற்றாலம் சென்று, இந்தப் பழத்தை உரியவரிடம் ஒப்படைத்து எழுதி வாங்கிக்கொண்டு வா' என்று உத்தரவிட்டார்.
|