கடந்த ஆறு மாதங்களாக இந்த மாணவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திக்வருகிறார்கள். நிறைய நிதியும் கிடைக்கிறது. 'We Love our Teachers' என்றார்கள் ஒரே வரியில்.
எவ்வளவு ஆத்மார்த்தம். ' கணக்கு வாத்தியாரைப் பிடிச்சா, கணக்கு தானா வரும்' என்று சொல்வார்கள். நேசியுங்கள், மனதார ஆசிரியரைப் பார்க்கிற உணர்வு அடர்த்தியான அன்புடன் கூடியது.
இந்த மாணவர்களிடம் பேசியபோது எனக்கு என் பள்ளி ஞாபகங்கள் வந்தன. யாராக இருந்தாலும் தோளில் கை போட்டுப் பேசிக்கொண்டே ஃபார்முலாக் கள் சொல்லித்தருகிற ஜேம்ஸ் சார்... எப்போது எது கேட்டாலும் அருகில் இருக்கிற மர நிழலில் நிறுத்தி விளக்கமாகச் சொல்லித் தருகிற அருள்ராஜ் சார்... காதைப் பிடித்துத் திருகியவாறே திருக்குறள் கேட்கும் முத்தியாலு ஐயா, பாட்டுப் பாடி பார்வையால் அபிநயம் காட்டிப் பாடம் நடத்தும் அரங்கசாமி ஐயா என்று எனக்கும் நிறைய நிறைய ஆசிரியர்களைப் பிடிக்கும்.
மாறி இருக்கிற கல்விச் சூழலில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான நட்புறவு ஆத்மார்த்தமானதாக இருக்கிறதா?
கல்வி தொடர்பான தலைப்பில் நடந்த 'நீயா... நானா'வில் ஒரு மாணவர் யதார்த்தமாகச் சொன்னார் 'நாங்கள் பணம் கொடுக்கிறோம்... அவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்' என்று. அப்படி வெறும் வர்த்தகத்தனத்தோடு பேசக் கூடாது என்று அங்கு கண்டிக்கப்பட்டாலும் அந்த மாணவரின் மனதில் இருந்த எண்ணம் அதுதான்.
ஒரு மளிகைக் கடைக்காரருக்கும், வாடிக்கையாளருக்குமான உறவைப்போல வியாபாரரீதியான உறவாக ஆசிரியர்-மாணவர் நட்பு மாறிக்கொண்டு வருகிறதோ என்று ஒரு சில நேரங்களில் தோன்றுகிறது. வெறுமனே பாடம் சொல்லித்தருகிற இன்னொரு கம்ப்யூட்டராக நம்முடைய ஆசிரியர்களை இந்தக் கல்விச் சூழல்மாற்றி வைத்திருக்கிறதோ என்ற சந்தேகம்கூட எழுகிறது.
ஆசிரியர் மரியாதைக்கு உரியவர் என்பதைத்தாண்டி அன்புக்கு உரிய மனிதராகத் தெரியவும், உணரவும் தேவைப்படுகிற வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. பள்ளியின் மீதும், கல்லூரியின் மீதும், ஆசிரியர்கள் மீதும் ஓர் உணர்வுபூர்வமான இணைப்பு மிகவும் அவசியம். அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கை கொடுக்கவும் உதவும்.
'நீங்கள் வேலை செய்கிற நிறுவனத்தோடு உணர்வு பூர்வமாகத் தொடர்புகொண்டு இருக்காதீர்கள்' என்று கார்ப்பரேட் உலகில் அறிவுறுத்தப்படுவது உண்டு. அதே மனோநிலை கல்விக்கூடங்கள் மீதும் மாணவர்களுக்கு வருவது நல்லது அல்ல.
அடுத்தவனைப்பற்றி எல்லாம் அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லப்படுகிற அமெரிக்காவின் மாணவர்கள், தங்கள் ஆசிரியர்களின் நலனுக்காக நிதி திரட்டுகிறார்கள். இப்படித் தங்கள் பள்ளி, பகுதி மேம்பாடு, பொதுப் பிரச்னைகள் போன்ற பலவற்றுக்கும் மாணவக் குழுக்கள் உதவ முன்வருகின்றன.
ஒரு காலத்தில் இருந்ததைப்போல் பள்ளியையும் கல்லூரியையும் காதலிக்கத் தேவைப்படும் காரணங்கள் குறைந்துகொண்டே போனாலும், அவற்றின் மீது ஆசையோடு இருங்கள். இந்த ஆசைதான் நாளை அந்தப் பள்ளிக்குத் தேவைப்படுகிற பல விஷயங்களை உங்கள் மூலம் செய்துகொள்ளவைக்கும்.
|