எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு உள்ள நூலகம் மற்றும் புத்தகக் கடைகளைத் தேடுபவன் நான். புத்தகக் கடைகளைப் பொதுவாக மக்கள் அதிகம் கவனம்கொள்வதே இல்லை. அது தங்களுக்குத் தொடர்பு இல்லாத ஒன்று என்ற எண்ணம் படித்தவர்களிடம்கூட உள்ளது. புத்தகக் கடைகள் எங்கே இருக்கின்றன என்று விசாரிக்கும்போது, பலரும் பள்ளி, கல்லூரிப் பாடப் புத்தகக் கடைகளையே காட்டுகிறார்கள்.
இலக்கியம், கலை, அறிவியல், தத்துவம், சமூகவியல் என்று அறிவுத் துறை சார்ந்த புத்தகங்களை விற்கும் கடைகள் அவர்கள் நினைவுக்கு வருவதே இல்லை. சில வேளைகளில் உள்ளூர் நண்பர்களுடன் தேடி அலைந்து புத்தகக் கடைகளைக் கண்டுபிடித்துவிடு வேன். அப்போது, இப்படி ஒரு கடை இருப்பது இப்போதுதான் தெரிய வருகிறது என்று உள்ளூர் நண்பர் வியப்பார். இவ்வளவுக்கும் அவர் அதே ஊரில் பிறந்து வளர்ந்தவர் என்பதுதான் இதன் முரண்.
ஒரு நகரின் மக்கள் தொகைக்கும் அங்கு உள்ள புத்தகக் கடைகளின் எண்ணிக்கைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் மிகப் பெரிய இடைவெளி இருப்பதைக் கண்கூடாக உணர முடிகிறது. எல்லா ஊர்களிலும் புதிது புதிதாக உணவகங்கள், ஜவுளிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், நகைக் கடைகள், அலங்காரப் பொருள் அங்காடிகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், புத்தகக் கடைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
புத்தக விற்பனை செய்பவர் எப்போதுமே ஏளனமாகவே பார்க்கப்படுகிறார். சாலையோரம் பீடா கடை வைத்திருப்பவரைக்கூட மக்கள் நினைவில் வைத்து இருக்கிறார்கள். நண்பர்களுக்குச் சிபாரிசு செய்கிறார்கள். ஒருநாள் அவரைக் காணவில்லை என்றாலும் அக்கறையாக விசாரிக்கிறார்கள்.ஆனால், அறிவை விருத்தி செய்வதற்குத் துணை செய்யும் புத்தகக் கடைக்காரர்களை எவரும் பாராட்டுவதோ, ஊக்கப்படுத்துவதோ இல்லை. புத்தக விற்பனையாளர்கள் வெறும் வணிகர்கள் அல்ல; மாறாக, படிப்பதில் அக்கறைகொண்டவர்கள். புத்தகங்களை ரசனையோடு நேசிக்கத் தெரிந்தவர்கள் என்பதை மக்கள் இன்று வரை புரிந்துகொள்வதே இல்லை.
நேரம் போவதே தெரியாமல் இருப்பதற்கு ஓர் இடத்தைத் தேர்வு செய்யுங்கள் என்றால், உடனே புத்தகக் கடை என்று சொல்லிவிடுவேன். சில நேரம் விமான நிலையங்களில் அடுத்த விமானத்துக்காக ஐந்தாறு மணி நேரம் காத்திருக்கக்கூடும். அவ்வளவு நேரமும் புத்தகக் கடைக்குள்தான் இருப்பேன். புத்தகத்தைப் புரட்டுவதுபோன்ற இன்பம் வேறு எதிலும் இல்லை.
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு புத்தகமும் ஒரு பறவை. அது ஒரு கிளையில் வந்து அமர்ந்து இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு வசீகர வண்ணமும் இனிமையான குரலும் இருக்கிறது. அவை ஒன்றாகத் தங்களுக்குள் பாடியபடி இருக்கின்றன. அப்படியானால், அந்த இடம் எப்படி இருக்கும்? எவ்வளவு தூரம் நம் மனதை அது களிப்பூட்டும்? அப்படித்தான் இருக்கிறது புத்தகக் கடையின் உள்ளே இருக்கும்போது.
உலகம் பெரியது என்பதைப் புத்தகக் கடையே உணரச் செய்கிறது. எத்தனை எழுத்தாளர்கள், எவ்வளவு தகவல்கள், கதைகள், கவிதைகள், சிந்தனைகள், எந்தெந்த நூற்றாண்டிலோ வாழ்ந்து மறைந்தவர்கள் தங்கள் படைப்புகளின் வழியே இன்றும் உயிரோடு இருக்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கவிதை வரியை இன்று ஒருவன் படித்து வியக்கிறான். அதைத் திரும்பத் திரும்பத் தனக்குள் சொல்லிக்கொள்கிறான். கொண்டாடுகிறான்.
எந்த மனிதனிடமும் புத்தகங்கள் பேதம் காட்டுவது இல்லை. சொற்கள் எவ்வளவு தித்திப்பானவை என்பதைப் புத்தகங்களே நமக்கு அறிமுகம் செய்திருக்கின்றன. புத்தகக் கடைகளை அகன்ற விருட்சத்தின் நிழலடிபோலத்தான் பார்க்கிறேன். அதன் குளிர்ச்சியும் தண்மையும் சொல்லில் அடங்காதது.
|