மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும்... நானும்! : கோபிநாத் - 20

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும்... நானும்! : கோபிநாத் - 20

16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்
நீயும்... நானும்! : கோபிநாத் - 20
நீயும்... நானும்! : கோபிநாத் - 20
நீயும்... நானும்!
கோபிநாத், படம்: 'தேனி' ஈஸ்வர்
நீயும்... நானும்! : கோபிநாத் - 20
நீயும்... நானும்! : கோபிநாத் - 20

சமீபத்தில் ஒரு தகவல் படித்தேன் நூற்றில், தொண்ணூறு பேருக்கு மேடை ஏறிப் பேசுவதில் பயம் இருக்கிறதாம்.

இப்படி நம் எல்லோருக்குமே ஏதோ ஒரு விஷயம் குறித்துப் பயம் இருக்கும். சிலருக்கு, உயரம் பயம். சிலருக்கு, இருட்டு பயம். சிலருக்கு, தண்ணீர் பயம். சிலருக்கு, பேய், பூதம் பயம். சிலர் டூ விலரின் பின் சீட்டில் அமர்ந்துகொண்டு, 'பார்த்துப் போ... மெதுவாகப் போ' எனப் பயமுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.

நாளை காலை உயிரோடு இருப்பேனா என்று பயந்தவாறே படுக்கைக்குச் செல்ப வர்கள் உண்டு. நிறையப் பணம் இருந் தும், தேவைகள் இருந்தும், விமானத்தில் பறக்கப் பயப்படுபவர்கள் உண்டு. பழைய கட்டடம், இருட்டு அறை, மலைப் பயணம் என எல்லோருக்கும் ஏதோ ஒரு பயம்!

வெளியில் இருந்து ஏதோ ஒன்று நம்மைப் பயமுறுத்துகிறது என்று நினைக் கிறோம். உண்மையில், பயம் நமக்குள்தான் இருக்கிறது. பாதுகாப்பின் பெயராலும், அச்சுறுத்தலின் பெயராலும், நாம் சிந்திக் கவும் எதிர்கொள்ளவும் மறுத்த, மறந்த காரணிகள் பயமாக மாறிப் பயமுறுத்து கின்றன.

ஒரு சின்ன விஷயமாக இருக்கும், அப்பாவிடம் பர்மிஷன் கேட்பது, கோபமாக இருக்கிற ஆசிரியரைச் சந்திப்பது, தன்னைப்பற்றி தவறாகப் பேசிய நண்பனை எதிர்கொள்வது என வாழ்க்கையின் மிகச் சாதாரண விஷயங்கள் அனைத்தையும் 'அப்புறம் பார்த்துக்கலாம்' என தள்ளிப்போடுவதுதான் மனதுக்குள் பயம் தங்க ஆரம் பிப்பதன் முதல் படி.

இந்த விஷயத்துக்கு 'அவர் என்ன சொல்வாரோ? அதனால், அப்புறம் பேசலாம்' எனத் தள்ளிப்போடுவது எளிதான உத்தி யாகத் தெரிந்தாலும், மனசுக்குள் ஆழமாக அந்த விஷயம் அரித்துக்கொண்டே போய் பயமாக மாறி நிற்கும்.

அந்தக் குறிப்பிட்ட விஷயத்தை மறந்து விட்டதுபோல உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டாலும் அந்த தள்ளிப்போடல் நடவடிக்கை மனசுக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று ஆயிரம் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.

நீயும்... நானும்! : கோபிநாத் - 20

அநேகமாக, அந்த விஷயத்தை நீங்கள் எதிர்கொண்டால், அது மிகச் சாதாரணமாக முடியவும் வாய்ப்பு உண்டு. 'இதுக்குப் போயா இப்படிப் பயந்துகிடந்தோம்' என்று சிரிப்பு வரலாம். 'எந்த விஷயத்தையும் நாம் பயத்தின் காரணமாக எதிர்கொள்ளத் தயங் குவது இல்லை. எதிர்கொள்ளத் தயங்கு வதால்தான் பயம் வருகிறது.'

ஏ.டி.எம். மிஷினில் பணம் எடுத்த பிறகு அதற்கான ரசீதை எடுக்க யோசிப்பவர்கள் உண்டு. ஒருவேளை சேமிப்பில் இருக்கும் பணம் மிகக் குறைவாக இருக்கிறது என்று அது காட்டினால்?

'வேணாம்ப்பா... அப்புறம் பார்த்துக்கலாம்' என்று தள்ளிப்போடுவது உண்டு. ஒருநாள் அவசரமாகப் பணம் எடுக்கப் போகும்போது உங்கள் கணக்கில் பணமே இல்லை என்று ரசீது வரும்.

ஓர் ஆங்கில அறிஞர், 'உங்கள் எதிரி புதர்களுக்குள் ஒளிந்திருக்கவில்லை. உங்க ளைத் தாக்குவதற்காக மலைப் பகுதிகளில் பதுங்கி இருக்கவில்லை. அது, பயம் என்ற பெயரில் உங்கள் மனதுக்குள் உட்கார்ந்து இருக்கிறது. எதிரியை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு உயர உயர எப்படிப் போவது?

உளவியலாளர்கள் ஒரு நல்ல பயிற்சியைச் சொல்கிறார்கள்... உங்களை எது பயமுறுத்துகிறதோ அதைப் பயப்படாமல் செய்யுங்கள். அதைச் செய்கிறபோது, 'இந்த விஷயத்தைச் செய்வதில் எனக்குப் பயம் உண்டு. ஆனாலும், அதைச் செய்கிறேன்' என்று சொல்லிக் கொண்டே செய்யுங்கள். மொத்தத்தில் உங்களைப் பயமுறுத்துவதாக நினைக்கும் எந்த விஷயத்தையும் மனசுக்குள் பதியவிடாதீர்கள்.

பயத்துக்கு எதிரான நம் வாழ்க்கைப் பயிற்சி எந்த விஷயத்தையும் எளிதாக்கிவிடும். கார் ஓட்ட ஆரம்பிக்கிறபோது, அல்லது புதிதாக பைக் ஓட்டும்போது, கிளட்ச்சைப் பாதியும் பிரேக்கைப் பாதியும் பிடித்துக்கொண்டே வண்டி ஓட்டுவோம். திடீரென யாராவது குறுக்கே வந்தால், கால்கள் பரபரக்கும். வேகமாக பிரேக்கை மிதிப்போம். சில நேரம் பிரேக்குக்குப் பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்துவோம். கண்களை அகலமாக விரித்து வைத்துக்கொண்டு பயந்தபடியே வண்டியில் பயணிப்போம்.

நீயும்... நானும்! : கோபிநாத் - 20

இந்தப் போராட்டங்களுக்குப் பயந்து, 'இதெல்லாம் நமக்குச் சரிப்படாதுப்பா' என்று கார் ஓட்டுவதைத் தவிர்த்தவர்கள்கூட உண்டு. ஆனால், ஆரம்பத்தில் பயந்து பயந்து பிரேக் அழுத்தி, கிளட்ச் பிடித்து, கியர் மாற்றி நாம் செய்த விஷயங்கள், பிறகு மிகச் சாதாரணமாகும். கொஞ்சம் பழகிய பிறகு, மனசுக்குள் தங்கியிருந்த பயம் வெளியேறிவிடும்.

எந்த ஒரு விஷயத்தையும் எதிர்கொள்ள ஆரம்பிக்கிறபோது, பயத்தை நாம் கையாளுகிறோம். அது நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எதிர் கொள்ளவும் அணுகவும் தயங்கித் தயங்கி நின்றால், பயம் நம்மைக் கையாள ஆரம்பிக்கிறது. உதைத்து விளையாடுகிறது.

நீயும்... நானும்! : கோபிநாத் - 20

நிர்வாகவியல் கருத்தரங்குகளில் பயம்பற்றியும் அதன் தன்மை குறித்தும் ஒரு விளக்கம் சொல்வார்கள். 'மீன் தொட்டியில் தாக்கும் குணம்கொண்ட கில்லர் வகையறா மீனையும், சாதுவான மீனையும் போடுவார்கள். இவை இரண்டுக்கும் நடுவே ஒரு கண்ணாடித் தகடைச் செருகிவைப்பார்களாம்.

ஒவ்வொரு முறை அந்தச் சாதுவான மீன் கடந்துபோகும்போதும் இந்த கில்லர் மீன் அதைப் பிடிக்க வேகமாக முன்னேறும். குறுக்கே கண்ணாடித் தடுப்பு இருப்பதால், அதன் முன்பகுதியில் அடிபட்டு கில்லர் பிஷ்ஷைத் திருப்பிவிடும். ஒரு நிலையில், அந்த கண்ணாடித் தகட்டை எடுத்த பிறகும் கில்லர் மீன், சாது மீனை நோக்கி நகராதாம். முன் னேறிப் போனால், மூக்கு அடிபடும் என்று அந்த மீனுக்குப் பயம்.

அடிபட்டாலும், பாதிப்புகள் வந்தாலும் ஒரு சிறிய இடைவெளி விட்டுத் தொடர்ந்து மோதுங்கள். பயத்தோடு பின்வாங்காதீர்கள் என்று சொல்கிறது நிர்வாகவியல்.

வாழ்க்கையும் அப்படித்தான். மோதுங்கள். பயத்துக்கு எதிராகப் பலமாக மோதுங்கள்.

உங்களைப் பயமுறுத்துகிற பயத்தைப் பயமுறுத்துங்கள். எதிர்கொள்வதற்கு நீங்கள் தயார் என்கிறபோது, பயம் பயப்படும்.

முன்னேறுவதற்கும் முயல்வதற்கும் பயம் ஒரு தடையாக இருக்க முடியாது... அந்தப் பயம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை.

இன்று தொடங்கலாம் பயத்தைப் பயமுறுத்தும் வேலையை. அது பல திசைகளை நமக்குச் சொல்லித்தரும்.

உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!

 
நீயும்... நானும்! : கோபிநாத் - 20
-ஒரு சிறிய இடைவேளை
நீயும்... நானும்! : கோபிநாத் - 20