மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 11

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகா

##~##
'எ
ன்னைக் கவர்ந்த பேச்சுத் தமிழ், திருநெல்வேலித் தமிழ்தான். 'என்னடே’ என்பதே மரியாதைச் சொல். 'புலிய அங்க வச்சுப் பாத்தேன்’ போன்ற வசீகரமான பிரயோகங்கள். எளிய ஜனங்களின் எளிய மனங்களின் வெளிப்பாடு!’

'எந்த வட்டாரத்துப் பேச்சுத் தமிழ் தங்களைக் கவர்ந்திருக்கிறது?’ என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், எழுத்தாளர் சுஜாதா மேற்குறிப்பிட்டவாறு சொன்னார்.

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று சுப்பிரமணிய பாரதியின் பாடல் எந்த அளவுக்குப் பெருமையை அளித்ததோ, அதற்கு ஈடாக சுஜாதாவின் இந்தப் பதில் திருநெல்வேலிக்காரனான எனக்குப் பெருமிதமாக இருந்தது. இந்தக் கருத்தை ஸ்ரீரங்கத்துக்காரரான சுஜாதா சொன்னதுதான் எனது மகிழ்ச்சிக்குக் காரணம். பாரதியார் சொல்லியிருந்தால்கூட, இந்த அளவுக்குச் சந்தோஷமாக இருந்திருக்காது. காரணம், எங்கள் ஊர் தமிழ் பற்றி பெருமையாக எங்கள் ஊர் சுப்பையா சொல்வதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?

மூங்கில் மூச்சு! - 11

ல்லாத் தமிழ்க் குழந்தைகளுக்கும் பரிச்சயமாகும் முதல் தமிழ் வார்த்தையான 'அம்மா’ என்னும் வார்த்தை, திருநெல்வேலிப் பேச்சுத் தமிழில் 'அம்மை’ என்று மாறும். பெண் பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சும்போது, 'என்னப் பெத்த அம்மைல்லா’ என்றுதான் கொஞ்சுவார்கள். நெல்லையப்பர் கோயிலுக்குப் பெரியவர்களுடன் நான் சென்றபோதெல்லாம், 'மொதல்ல அம்மை. அப்புறம்தான் அப்பன்’ என்று சொல்லி, முதலில் காந்திமதி அம்மையை வணங்கிவிட்டு, அதற்குப் பிறகுதான் நெல்லையப்பனைப் பார்க்கச் செய்தார்கள். அம்மை, அப்பன் இரண்டையும் சேர்த்து அம்மையப்பன் என்ற பெயரில் பலரை திருநெல்வேலிப் பகுதிகளில் பார்க்கலாம்.

மூங்கில் மூச்சு! - 11

'அம்மையும் அப்பாவும் நீர்’னு பாரதிதாசனே எழுதியிருக்காருல்லா! தூய தமிழ்ச் சொல்லுவே, திருநெல்வெலிக்காரன் பேசுறது!’ திராவிட இயக்கப் பெரியவர் குறளேருழவர் தாத்தா சொல்லிக் கேட்டிருக்கிறேன். 'நம்மளப் பாத்துதான் மலையாளத்துக்காரனும் அவன் அம்மாள அம்மைங்கான்.’ கூடவே இதையும் சொல்வார்.

லையாளம் மட்டுமல்ல... திருநெல்வேலித் தமிழுக்கும் இலங்கைத் தமிழுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. துடைப்பம் என்ற சொல்லை நானெல்லாம் சினிமாவில்தான் கேட்டு இருக்கிறேன். எங்களுக்கு அது 'வாரியல்’. இலங்கைக்காரர்களும் வாரியல் என்பார்கள். எந்தச் சண்டையிலும் திருநெல்வேலிப் பெண்களின் வாயில் இருந்து வரும் வசவுச் சொற்களில் வாரியல் முக்கிய இடம் பிடித்துவிடும். 'அந்த சேர்மாதேவிக்காரி மட்டும் என் கையில் கெடைச்சா வாரியலக்கொண்டே அடிப்பெம்லா.’ 'ராஜேஷ் எலெக்ட்ரிக்கல்ஸ்’ மஹாவீர் ஒருமுறை ஒரு வீட்டை அடையாளம் சொல்லும் போது சொன்னான்... 'எண்ணே, அந்தா ஒரு பொம்பள வாரியல் வச்சு வாசத் தூத்துக்கிட்டு இருக் காங்க பாருங்க... அந்த வீடுதான்.’ திருநெல்வேலியிலேயே பிறந்து வளர்ந்த மஹாவீரின் பூர்வீகம் ராஜஸ்தான்.

ஷாஃப்டர் ஸ்கூலின் தமிழ் வகுப்புகளிலும் நாங்கள் திருவள்ளுவரையும் ஒளவையாரை யும் திருநெல்வேலித் தமிழிலேயேதான் படித்தோம்.

'மடல் பெரிது தாழை மகிழ் இனிது
கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா
கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே
சிற்றூறல்
உண்ணீரும் ஆகிவிடும்!’

- தமிழாசிரியர் மாணிக்கம் சார்வாள் இந்தப் பாடலைச் சொல்லிவிட்டு விளக்குவார்.

'எல, வெளங்குதா? சரவணன் ஷாட்புட்ல அத்தாதண்டி குண்டத் தூக்கித் தூக்கி எறிஞ்சு, கை காலையெல்லாம் கர்லாக்கட்ட மாரி வச்சிருக்கான். என்ன பிரயோஜனம்? திருக்குறளே ஒண்ணே முக்காலடி. அதுல அரையடிய முளுங்கிட்டு என்னையப் பாத்து ஈன்னு பல்ல இளிக்கான். சுப்ரமணியத்தப் பாரு. பாக்கதுக்கு பால்வாடிப் பிள்ள மாரி இருக்கான். பொம்பளய இவனப் பாத்தா தூக்கி ஒக்கல்ல வச்சிக்கிடுவாளுவொ. தமிள்ல நூத்துக்குத் தொண்ணூ றுல்லா வாங்குவான். அதே மாதிரி கடல்ல எவ்வளவுகானம் தண்ணி இருக்கு? வாயில வைக்க முடியுமால? உப்புக்கச்சுல்லா கெடக்கும். நம்ம சுப்ரமணியன் சைஸுல சின்ன ஊத்துத் தண்ணிதான் தாகம் தணிக்கும். ரெண்டு உவமைல ஒளவையாரு எப்பிடிச் சொல்லுதா, பாத்தேளால?’

மூங்கில் மூச்சு! - 11

பைந்தமிழை இப்படிப் பயின்ற நாங்கள் இன்று உலகுஎங்கும் சிதறி வாழ்ந்துகொண்டு இருந்தாலும், இன்னும் மனதில் தோன்றும் தமிழ் வார்த்தைகள் திருநெல்வேலி மொழியில் தோன்றாமல் போனால்தான் ஆச்சர்யம்.

திருநெல்வேலித் தமிழை திருநெல்வேலி பிராமணர்கள் பேசிக் கேட்க வேண்டும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிபோல அவர்கள் அட்சரசுத்தமாக பிராமண பாஷை பேசுவார்கள் என்று எதிர்பார்த்தால், நீங்கள் ஏமாந்துபோவீர்கள். சுத்தமான திருநெல்வேலித் தமிழில் மணக்க மணக்கப் பேசுவார்கள். சொல்லப்போனால், திருநெல்வேலித் தமிழின் ருசியை நண்பன் குஞ்சுவின் வீட்டில்தான் நான் அதிகம் சுவைத்தேன் எனலாம். உள்ளே நுழையும்போதே குஞ்சுவின் அப்பாவோ, பெரியப்பாவோ, 'வாடே’ என்பார்கள். 'என்னடே, கொஞ்ச நாளா இந்தப் பக்கமே லாந்த மாட்டேங்கே?’ இரண்டே நாட்கள்தான் அங்கு செல்லாமல் இருந்திருப்பேன். 'தோச திங்கியா? ஒன் சேக்காளி என்ன சொல்லுதான்? கொஞ்ச வரத்தா வாரான்கே?’ சில சொற்களுக்கு அர்த்தம் தெரியாமல் முழித்தது உண்டு. 'இவன் ஏம்ல படப்பயம் போடுதான்?’ என்பார்கள். கூப்பாடு என்ற சொல்லைத்தான் படப்பயம் என்கிறார்கள் என்பது புரிந்தாலும், அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் முழிப்பேன். நீண்ட நாட்கள் கழித்துதான் அது படப்பயம் அல்ல. படை பயம்என்னும் வார்த்தை என்பது புரியவந்தது.

சென்னைக்கு வந்த புதிதில் ஒரு முறை 'அங்கே நிக்கான்’ என்று பழக்கதோஷத்தில் சொல்லிவிட்டேன். என்னது? நிக்கானா? நண்பர்கள் சுற்றி நின்று கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதற்குப் பிறகுதான் நிக்கான், நிக்கிறான் ஆனது. மெள்ள நண்பர்களுடன் பேசும்போது திருநெல்வேலித் தமிழைத் தவிர்க்க ஆரம்பித்தேன். அதற்காக, சென்னை பாஷை பேச முடியவில்லை. இங்கும் இல்லாமல், அங்கும் இல்லாமல் திருச்சித் தமிழில் பேசத் துவங்கினேன்.

திருச்சிப் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சொல்வார்கள். 'எங்க ஊர் தமிழ்தான் எந்த விதமான கலப்பும் இல்லா தது. பாருங்க, சினிமாவில்கூட எங்க ஊர் தமிழ்தான் இருக்கும்.’ ஆனால், இப்போதுதான் சினிமாவில் அது இல்லை. ஒன்று, ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள். இல்லையென்றால், தமிழ் சினிமாவில் பெர்மனென்ட் போஸ்ட் வாங்கிவிட்ட மதுரைத் தமிழ்.

காலம் சென்ற ஆர்.எம்.கேவி. உரிமையாளர் விசுவநாதன் அண்ணன் ஒருமுறை சொன்னார்... 'தம்பி, திருநவேலில ஒரு பையன் அன்னைக்கு அவிங்கன்னு சொல்லுதான். இவ்வளத்துக்கு டவுன் வழுக்கோடைலதான் அவன் வீடு இருக்கு. எல்லாம் ஒங்க சினிமாவும் டி.வி-யும் பண்ற வேலைதான். நாளைக்கே மதுரைக்காரன், கோயம்புத்தூரு பாஷை பேசுனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல. அந்தந்த ஊர்க்காரங்க, அவங்கவங்க பாஷயப் பேசுனாதானெ வட்டார மொழிகளும் அழியாது. கேக்கதுக்கும் நல்லா இருக்கும். என்ன சொல்லுதீங்க?’

சினிமா, தொலைக்காட்சியின் வீச்சு எல்லா ஊர் மக்களையும் அவர்கள் மொழியைவிட்டு வேறு ஏதோ மொழியை நோக்கித் திருப்புகிறது என்கிற குற்றச்சாட்டு உண்மைதான் என்றே தோன்றுகிறது. திருநெல்வேலியில் நடிக, நடிகையர் தேர்வுக்குச் சென்றிருந்தேன். ஒரே ஒரு காட்சி என்றாலும், புதிய முகங்களாக, அதுவும் திருநெல்வேலி முகங்களாக முயன்று பார்ப்போமே என்று ஆசை. வரிசையாகப் பல தரப்பட்ட ஆண்களும் பெண்களுமாக வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் திருநெல்வேலி மொழியைக் கவனமாகத் தவிர்த்தே பேச முயன்றனர். 'எல, எப்பவும் நம்ம ஊர்ல பேசுற மாதிரி பேசாதெ. படிச்ச பய மாதிரி கொஞ்சம் டீசன்ட்டாப் பேசு’. ஹாலில் தன் நண்பனிடம் ஓர் இளைஞர் சொல்லுவதைக் கவனித்தேன். உள்ளே வந்த அந்த இளைஞனும் நிறைய ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி, 'அவங்க என்ன ஸொல்றாங்கன்னா’ என்று பேச ஆரம் பித்தான். மீண்டும் மீண்டும் நான் அவனிடம் திருநெல்வேலி பாஷையிலேயே பேசிப் பார்த்தேன். சங்கர் என்ற பெயரை ஷங்கர் என்றே சொன்னான். 'இத்தனைக்கும் திருநெல் வேலியில் சங்கர் என்ற பெயருக்கு முன் ஒரு 'ச்’ சேர்த்து ச்சங்கர் என்றுதான் சொல்வார்கள். அதுவும் தவிர, கடைசி வரை அவன் 'அவங்க என்ன சொல்லுதாங்கன்னா’ என்று சொல்லவே இல்லை. ரொம்ப வருத்தமாக இருந்தது.

சென்னையில் நான் கவனமாகத் தமிழ் பேசி வந்ததை உடைத்துப் போட்டவர்கள் சீமானும், அவரது தோழர்களும். சீமானின் குழாமில் அனைவருமே அவர்களது சொந்த மண்ணான மதுரைத் தமிழில் மட்டுமே பேசிக்கொள்வார்கள். 'அண்ணே, நம்ம பாண்டிப் பய நேத்து ஏழரைய இழுத்துட்டாண்ணே. ரொம்ப நாளா லந்த குடுத்துக்கிட்டிருந்த புரோட்டாக் கடைக்காரன் மண்டைய ஒடச்சுட்டான்ல.’ சீமானுடன் நட்பு ஏற்பட்ட பிறகு, திருநெல்வேலித் தமிழை சென்னையில் பேச எனக்கு இருந்த தயக்கம் போயே போய்விட்டது. சீமானையோ, செழியனையோ நான் எப்போது சந்தித்தாலும் முதலில் எங்கள் வாயில் வரும் இயல்பான வாக்கியம் 'எப்பிடி இருக்கிய?’ எல்லோருக்கும் புரியும்படி சொல்வதாக இருந்தால் 'ஹவ் ஆர் யூ?’

மீபத்தில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஒரு பிரபலமான மனிதருடன் சென்றிருந்தேன். விமானம் ஏறும் வழியில் நாங்கள் இருவரும் நடந்து செல்லும்போது, விமான நிலைய ஊழியராகப்

மூங்கில் மூச்சு! - 11

பணிபுரியும் ஓர் இளம் பெண் ஓடி வந்து, அந்த பிரபலத்திடம் இருந்து அவரது கைப்பெட்டியை வாங்கிக்கொண்டார் 'பரவாயில்லம்மா. நானே கொண்டுவரேன்’ என்று அவர் சொன்னதைப் பொருட்படுத்தா மல், கிட்டத்தட்ட பிடுங்கிக்கொண்ட அந்தப் பெண், விமானம் வரும் வரை அந்த பிரபலத்திடம் பேசிக்கொண்டே வந்தார்.

''சார், வீட்ல அம்மாவல்லாம் கூட்டிக்கிட்டு வராம்லா? பெரிய அண்ணன், சின்ன அண்ணன்லாம் சும்மா இருக்காங்களா? அக்காள நான் ரொம்பக் கேட்டதா சொல்லுங்க, என்னா?’ விகற்பமில்லாமல் தொடர்ந்து திருநெல்வேலித் தமிழிலேயே அந்தப் பெண் பேசியதை நான் ரசித்தபடியே வந்தேன். என்னைவிட அந்தப் பெண்ணின் அசலான திருநெல்வேலித் தமிழை வெகுவாக ரசித்த அந்தப் பிரபலத்தின் பெயர்... இளையராஜா!

- சுவாசிப்போம்..