உள்ளே செல்லும்போது பொது தரிசனம், சிறப்புத் தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் என்று மூன்று வகை. ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டணம். அதில் ஆளுக்கு 250 ரூபாய் கொடுத்து சிறப்புத் தரிசன டிக்கெட் வாங்கிக்கொண் டார்கள். அந்த வரிசையும் நீண்டு இருந்தது. அந்த வரிசையில் முன்னே அழைத்துப் போகிறேன், தனியாக 100 ரூபாய் கொடுங்கள் என்று கோயில் ஊழியர் ஒருவர், தனியே அழைத்துப் போனார். அங்கே பணியில் நின்றிருந்த காவலர், தனக்கு ஏதாவது தரும்படியாகக் கேட்டதும் அவருக்குத் தனியே 50 ரூபாய் தரப்பட்டது.
சரி, சாமியைப் பார்க்கப் போகிறோம் என்று உள்ளே சென்றால், அங்கே முக்கியப் பிரமுகரின் குடும்பம் ஒன்று சாவகாசமாக சாமியை மறைத்து உட்கார்ந்துகொண்டு பூஜையில் இருந்தது. வீட்டில் நடப்பது போன்றுஅவர் களுக்காகவே ஒரு சிறப்பு பூஜை நடந்துகொண்டு இருந்தது. அது முடியும் வரை மற்றவர்கள் காத்திருங்கள் என்றார்கள். குழந்தை காற்று இல்லாமல் அழுதது. அதை இடையூறாகக் கருதிய முக்கியப் பிரமுகர், குழந்தையை வெளியே அழைத்துச் செல்லுங்கள் என்று கோபப்பட்டார்.
அந்தப் பிரமுகருக்கு மாலை மரியாதை அணிவிக்கப்பட்டு, தட்டில் அவர் சில 500 ரூபாய்களை அள்ளிப்போட்டு எழுந்த பிறகு, கடவுள் மற்றவர்களுக்குத் தெரிய ஆரம்பித்தார். கூட்டம் அதிகம். சாமியைப் பார்த்தது போதும்... வெளியே போங்கள் என விரட்டிக்கொண்டு இருந்தார்கள். உண்டியலில் பணம் போட வேண்டாம், தட்டு காணிக்கை போடுங்கள் என்ற குரல் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.
கூட்டத்தில் சிக்கிய குழந்தை அழுது, உதடு துடித்துப் போனது. அவசரமாகக் குழந்தையைக் கடவுள் முன் காட்டிவிட்டு வெளியே வந்தோம். குழந்தைக்குத் தாகமாக இருக்கக் கூடும் என்று பாட்டி சொன்னார். தண்ணீர் எங்கே கிடைக்கும் எனத் தேடினால், கோயிலில் சுகாதாரமான குடிநீர் கிடையாது. வெளியேதான் போக வேண்டும் என்றார்கள். பிராகாரத்தில் அமர்ந்தபடியே ஏன்டா கோயிலுக்கு வந்தோம் என்று ஒரு குடும்பம் புலம்பிக்கொண்டு இருந்தது. ஒரு வெள்ளைக்காரர் அங்கிருந்த ஒரு சிலையைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார். புகைப்படம் எடுக்கக் கூடாது என்று கோயில் ஊழியர் மிரட்டியதும், அவர் தன் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாயை எடுத்து நீட்டினார். வாங்கிக்கொண்டு அந்த ஊழியர் சிரித்தபடியே வெளியேறினார்.
சரி, பிரசாதமாவது வாங்கி வருகிறேன் என்று போன நண்பர் அசதியோடு திரும்பி வந்து, ஒரே கொள்ளையா இருக்கு. பிரசாதம் விலை அதிகம். வாய்ல வைக்கவே முடியலை என்று புலம்பினார். கோயிலுக்கு வந்ததுக்கு சாமிப் படம் ஒன்று வாங்கிக்கொள்ளலாம் என்று அருகில் இருந்த கடைக்குப் போய், நண்பரின் மனைவி விலையைக் கேட்டதும் அவருக்குத் தலை சுற்றியது.
ஏழை எளிய மக்கள் நிம்மதியும் சாந்தியும் தேடி வரும் கோயில்கள் ஏன் இப்படிக் கொள்ளை அடிக்கும் மையமாக மாறிப்போனது. காசை வாரி இறைத்தால் மட்டுமே கடவுளை அருகில் சென்று வணங்க முடியும் என்ற அவலத்தை ஏன் சகித்துக்கொண்டு இருக்கிறோம். 'கோயில், கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது' என்று கொதித்து எழுந்தான் 'பராசக்தி' படத்தில் குணசேகரன். ஆனால், இன்று தமிழகக் கோயில்களைப்போல பக்தர்களைத் துச்சமாக, அவமரியாதையாக நடத்தும் கோயில்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
பல லட்சம் பேர் கலந்துகொள்ளும் ஹரித்துவாரின் கும்பமேளாவில் ஓர் இடம்கூட அசுத்தமாக இல்லை. குப்பைகள், கழிவுகளைக் காண முடியாது. அவ்வளவு தூய்மை பராமரிக்கப்படுகிறது. தரிசனம் துவங்கி, சாப்பாடு, தங்கும் இடம் வரை அத்தனையும் இலவசம். ஆனால், தொடரும் தமிழகக் கோயில்களின் அவலத்தைப் போக்கும்படியாக ஏதாவது ஒரு கடவுளிடம் முறையிடவேண் டும் என்றால்கூட அதற்கும் நாம் காசு செலவழித்தே ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைதான்.
|