என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

டீன் கொஸ்டீன்

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

 ##~##
பிருந்தா, கோவை.

 ''கல்லூரி மாணவி நான். ஆடைகள் நமது தன்னம் பிக்கையை வெகுவாக உயர்த்தும் என்பதால், நன்றாக உடை அணிந்துகொள்வேன் நான். ஆனால், செருப்பினைத் தேர்வு செய்யும் விஷயத்தில் சொதப்பிவிடுவேன். சராசரி உயரம் கொண்ட நான், விதவிதமான ஆடைகளுக்கு எவ்வாறு செருப்பினைத் தேர்வு செய்ய வேண்டும்?''

ப்ரியா மணிகண்டன், ஆடை வடிவமைப்பாளர்.

டீன் கொஸ்டீன்

''அலங்காரத்துக்கென்று காலணிகள் உபயோ கிப்பதைவிட, வசதிக்கேற்ற காலணிகளை அணிந்துகொள்வதுதான் சிறந்தது. தினசரி உபயோகத்துக்குத் தட்டையான அடிப்பாகம் கொண்ட செருப்புகளும் ஷூக்களும்தான் பெஸ்ட். விழா, விசேஷங்கள் போன்ற தருணங்களுக்கு ஹீல்ஸ் வகை காலணிகள் அணியலாம். அப்போதும் 'பாய்ன்டட் ஹீல்ஸ்’ வகைகளைத் தவிர்த்து, அடிப்பாகம் முழுக்கவே உயரமாக இருக்கும் ப்ளாக் ஹீல்ஸ் கொண்ட செருப்புகளை அணியலாம். அதுதான் இப்போது ஃபேஷனும்கூட. நீங்கள் சல்வார் அணிந்தால், ஆடையின் நிறத்துக்கு கான்ட்ராஸ்ட்டான ஃப்ளாட் வகை செருப்புகள் பொருத்தமாக இருக்கும். ஜீன்ஸ் அல்லது முட்டிக்கு மேலே இருக்கும் ஆடைகளை அணிவீர்கள் என்றால், ப்ளாக் ஹீல்ஸ்கொண்ட காலணிகள் அணியலாம்!''

வே.கிருபாகரன், சென்னிமலை.

''சென்ற தேர்தலின்போது, என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை என்பதால், வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதி மறுத்துவிட்டனர். இந்த முறை வாக்காளர் பட்டியலில் என் பெயர் இருக்கிறது என்பதை நான் எப்படி உறுதிப்படுத்துவது? இம்முறை நான் எனது வாக்கினைப் பதிவு செய்தே ஆக வேண்டும்!''

நரேஷ் குப்தா, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்.

டீன் கொஸ்டீன்

''வருடத்தில் விடுமுறை நாட்கள் தவிர, மற்ற எல்லா நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளலாம். வட்டார அலுவலகங்கள், தாலுகா, பஞ்சாயத்து மற்றும் முனிசிபல் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் இருக்கும். அதில் உங்கள் வார்டு எண்ணுக்குரிய பட்டியலில் உங்கள் பெயர் இல்லாவிட்டால், 'படிவம் 6’ விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் சென்னையில் வட்டார அலுவலகங்களிலும் மற்ற ஊர்களில் தாலுகா அலுவலகங்களிலும் கிடைக்கும். தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்பும் உங்கள் பெயரைப் பட்டியலில் சேர்க்கலாம். http://elections.tn.nic.in என்ற இணையதளத்தில் கிடைக்கும் வாக்காளர் பட்டியலிலும் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்தலாம்!''  

ர.சுகந்தி, மதுரை.

''மூன்று மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு பெண் குழந்தை  பிறந்தது. பிரசவத்துக்குப் பின் என் உடல் எடை அதிகரித்துவிட்டது. மீண்டும் என்னால் உடல் எடையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியாதா?''

டீன் கொஸ்டீன்

ஹேமலதா, மகப்பேறு மருத்துவர், அப்போலோ.

டீன் கொஸ்டீன்

''பொதுவாக, பிரசவ காலத்தில் பெண்களுக்கு 10 முதல் 12 கிலோ வரை எடை அதிகரிக்கும். ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் உடல் எடை இயல்பு நிலைக்குத் திரும்பும். திரும்ப வேண்டும்! காரணம், பிரசவித்த முதல் ஆறு மாதங்களில் குழந்தைக்குத் தாய்ப் பால் மட்டுமே போஷாக் கான ஆகாரம். எனவே, ஊட்டமான தாய்ப் பால் சுரக்க சத்தான, ஆரோக்கிய உணவுகளைத் தாய்மார்கள் உட்கொள்ள வேண்டியது அவசி யம். அதனால், அந்தச் சமயம் உடல் எடை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது. மேலும், சுகப் பிரசவமாக இருந்தால், கர்ப்பப்பை இயல்பு நிலைக்குத் திரும்ப 30 நாட்களும், சிசேரியனாக இருந்தால் 45 நாட்களும் பிடிக்கும். உங்களுக்குக் குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆகியிருப்பதால், இப்போதைக்கு உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்காதீர்கள். அது உங்கள் குழந்தையின் நலனை வெகுவாகப் பாதிக்கும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, டயட் மற்றும்உடற் பயிற்சி மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்!''  

விஷ்ணுராம், சென்னை.

''நான் ஓர் ஆயுர்வேத மருத்துவர். ஹிப்னாட்டிஸத்தில்  எனக்கு ஆர்வம் அதிகம். அந்த சப்ஜெக்ட்டில் தொலைதூரக் கல்வி மூலம் சான்றிதழ் படிப்பு படிக்க விரும்புகிறேன். அந்தச் சான்றிதழ்களுக்கு அரசு அங்கீகாரம் உண்டா? வேலைவாய்ப்புக்கு ஏதேனும் பயன் இருக்குமா?''

நெடுஞ்செழியன், கல்வியாளார்.

டீன் கொஸ்டீன்

''பொதுவாக, தொலை தூரக் கல்விப் பட்டங்கள் மூலம் அரசாங்க வேலை எதிர்பார்க்காதீர்கள். அதனால், சிரமம் பார்க்காமல் நேரடிக் கல்வி மூலம் படித்துப் பட்டம் பெறுங்கள். இன்னொரு விஷயம், ஹிப்னாட்டிஸத்துக்கு என்று தனியாகப் படிப்பு தமிழ்நாட்டில் கிடையாது. எம்.எஸ்.பரோடா பல்கலைக்கழகத்தில் 'க்ளினிக்கல் இன் ஹிப்னாட்டிஸம்’ முதுகலை பட்டப் படிப்பு இருக்கிறது. அதில் சேர ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம் போதும். சைக்காலஜியில் இரண்டு வருட எம்.ஃபில் படிப்பு Rehabilitation Council of India அமைப்பில் படிக்கலாம். அதற்கு மருத்துவத் துறை சார்ந்த டிகிரியுடன், மருத்துவம் பற்றிய ஆய்வுக் கட்டுரையும் வெளியிட்டிருக்க வேண்டும். இல்லையேல், இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு!''

ஹரி நாராயணன், நாகர்கோவில்.

''என் மொபைலுக்கு சில நாட்களாக வங்கி, கல்லூரி, வீட்டு உபயோகப் பொருட்கள் சம்பந்தமான தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்கள் குவிகின்றன. எரிச்சலில் 'D.N.D - ( Do Not Disturb ) வசதிக்குப் பரிந்துரைத்தேன். ஆனால், அப்படியும் அது போன்ற எஸ்.எம்.எஸ்கள் வருகின்றன. இது தொடர்பாக நான் யாரிடம் புகார் அளிப்பது?''

விஜயா, மக்கள் தொடர்பு மேலாளர், பி.எஸ்.என்.எல்.

டீன் கொஸ்டீன்

''டெலி மார்கெட்டிங் மூலம் மெசேஜ் செய்யப்படும் விளம்பரங்களை 1909 என்ற எண்ணில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்வதன் மூலம், தடை செய்யலாம். அந்த எண்ணில் பதிவு செய்த 48 மணி நேரத்துக்குப் பிறகுதான் உங்களுக்கான சேவை துவங்கும்.

அந்த 48 மணி நேரத்துக்குப் பிறகும் தேவை இல்லாத மெசேஜ்கள் வந்தால், உங்களுக்கு சேவை வழங்கும் மொபைல் நிறுவனத்தினரிடம் புகார் அளிக்கலாம். தவறுகள் மொபைல் ஆபரேட்டருடையது என்றால், அவர்கள் தக்க முறையில் தண்டிக்கப்படுவர். டெலி மார்க்கெட்டிங் முறைப்படி பதியாமல் வேறு ஒரு சோர்ஸ் மூலம் உங்கள் எண்ணுக்கு மெசேஜ் வந்தால், நீங்கள் காவல் துறையின் உதவியையும் நாடலாம்!''