லிங்குசாமிஓவியம் : எஸ்.இளையராஜா
இந்த
இடி சத்தத்துக்கு
அவளும் பயந்திருப்பாளோ
சுஜாதா
கவிதா பத்மா உஷா
அப்புறம் கீதா
இவை எல்லாம்
வெறும் பெயர்கள் அல்ல

இரண்டு விஷயங்கள் மட்டும்
அப்படியே மனதில் நிற்கிறது
முதன்முதலில் கடல் பார்த்தது
கவிதாவைப் பார்த்தது
ஒரு சிங்கத்தைக்
காதலித்திருந்தால்கூட இந்நேரம்
சொல்லியிருப்பேன்
விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்லுகிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?
அது என்ன
அந்தப் புறா
சொல்லிவைத்த மாதிரி
உன் வீட்டுக்கும்
என் வீட்டுக்குமாய்ப் பறக்கிறது?
நீ ஊரில் இல்லை
அது தெரியாமல்
திருவிழா கொண்டாடுகிறார்கள்
##~## |
இன்னும் என்ன வேண்டி
கோயிலுக்கு
வருகிறாய்?
நீ வடம் பிடிப்பதற்கு
முன்னதாகவே
நகர ஆரம்பித்துவிடுகிறது தேர்
நல்ல வேளை
எனக்கான தண்டனை முடிந்த பிறகு
நீ வகுப்பறைக்குள் வந்தாய்
தேவை இல்லாமல்
குழப்பம் விளைவிக்கிறாய்
எல்லாத் திருமண வீடுகளிலும்!