மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 22

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலிஓவியங்கள் : மணி, பாரதிராஜா

நானும் நண்பனும்!

 ##~##

'வீடு வாசல் சோறு தண்ணி’ - எல்லாம் இருந்தும் -

திருவரங்கம் விட்டுத் தரும மிகு சென்னையம்பதிக்கு, சினிமா ஆசையால் வந்தேன்.

வறுமை என்னைத் தழுவவில்லை; நான்தான் விரும்பி வறுமையைத் தழுவிக்கொண்டேன். அதாவது, இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டேன்!

எந்தப் புகழும், ஒரு விலை கொடுக்காமல் வருவதில்லை; ஆனால் இன்றைய புகழுக்கு, அடியேன் கொடுத்த விலை அதிகம்.

நாளைய சினிமா நமக்காகத்தான் என்று நம்பிக்கொண்டு -

காலையும் மாலையும், கட் செவிபோல் காற்றைப் புசித்துக்கொண்டிருந்த காலம்!

ருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாமலும்; இருநாள் உணவை ஒருசேர ஏலென்றால் ஏலாமலும் -

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 22

இருக்கின்ற இடும்பை கூர் வயிற்றைப்பற்றி, தமிழ்க் கிழவி தராசு பிடித்த மாதிரி, அன்றே சொல்லிவிட்டுப் போய்விட்டாள்!

படிமிசை, சகல பாவங்களுக்கும் துணிந்து மனிதனைத் துரத்துவது - காலியாய்க் கிடக்கும் இரைப்பைதான்.

'இருக்குமிடம் தேடி ஒரு வேளை உணவு வந்தால், உருக்கமுடன் உண்பேன்!’ என்று -

காவியும் கமண்டலமும் சொல்லலாம்; சராசரி மனிதனுக்கு அது சாத்தியமல்ல!

பட்டினியாயிருப்பவன் காதுகளில் - பக்தியும் புகாது; பகுத்தறிவும் புகாது. அதனால்தான் வள்ளல் பெருமான், அன்ன சாலையை ஆரம்பித்தார்கள்.

'உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே!’ என்றெல்லாம் உலகறியக் கூவி உலவுகிறது தமிழ்!

'தினம் தினம் நாம படிக்கிற திருக்குறளைவிட - இந்த சினிமாப் பாட்டுதான், இல்லாமையின் கொடுமையை யதார்த்தமா எல்லாருக்கும் பொட்டுல அடிச்ச மாதிரி புரியவைக்குது!’

- என்று கலைவாணர் என்.எஸ்.கே. ஒரு சமயம் ஒரு சினிமாப் பாட்டைச் சிலாகித்துப் பேசினார்.

' ஒரு சாண் வயிறு இல்லாட்டா - இந்த
உலகத்தில் ஏது கலாட்டா?
அரிசிப் பஞ்சமே வராட்டா - நம்ம
உசுரெ வாங்குமா பரோட்டா?’

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 22

- இது,அருமைக் கவிஞர் திரு. தஞ்சை ராமையதாஸ் அவர்கள், 'சிங்காரி’ படத்தில் எழுதிய பாட்டு. 'அஞ்சு அவுன்ஸ் அரிசி’ என்று காங்கிரஸ் ஆட்சியைக் கழகங்கள் விமர்சித்த காலம் அது.

அதனால்தான் இந்தப் பாட்டைத் திரு. கலைவாணர், 'திருக்குறளைவிட மேலான தெருக் குறள்!’ என்று 'சபாஷ்’ போட்டுப் பேசினார்.

இவற்றையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால், நான் பசியோடு இருந்த நாள்கள் என் நினைவில் நிழலாடுகின்றன!

'ஒரு சார்மினார் சிகரெட் பிடி; புகைய விடாதே; ஒரு செம்புத் தண்ணீரெக் குடி! ஒருநாள் பூராப் பசிக்காது!’

- என்று சொல்லி, என் உதடுகளுக்கிடையே ஒரு சார்மினார் சிகரெட்டைச் செருகி, நெருப்பு வைப்பான் என் நண்பன்.

அற்றை நாளிலிருந்து, சிகரெட்டே சிற்றுண்டியாகிப்போனது; மூன்று வேளை உணவென்பதெல்லாம், முயற்கொம்பே!

வயிற்று நிலத்தை, வன்பசி எனும் ஏர் உழும்; அடி வயிறு அழும். அந்த அழுகைச் சத்தமெல்லாம், சினிமாச் சிந்தனையில் மூழ்கிக்கிடந்த என் செவிகளில் ஏறாது!

அப்படியிருப்பினும் - நான் கம்பெனி கம்பெனியாய் அன்றாடம் ஏறி இறங்கிப் பாட்டு வாய்ப்புகள் கேட்டதில்லை. சுருண்டு சுருண்டு அறைக்குள்ளேயே படுத்துக்கிடப்பேன். அவ்வளவு சோம்பேறி!

பக்கத்து அறை நண்பன்தான், பெட்டிக் கடையில் பத்து பைசாவிற்கு, வெள்ளைத்தாள்களை வாங்கி வந்து -

'டேய், வாலி! You are killing the time! இந்தாடா, பேப்பர்; பேனா! இதுல, ஏதா வது நாலஞ்சு பாட்டெ எழுதிவையேண்டா! நாளைக்கு உனக்குன்னு ஒரு நல்ல நேரம் வந்தா, எல்லாத்தையும் வித்துடலாமே! கண்ணா! காய் விழுதோ விழல்லியோ - கல்லெ விட்டெறிஞ்சுக்கிட்டே இருக்கணும்; எந்தக் கல்லுல, எந்தக் காய் விழும்னு, எவனுக்கடா தெரியும்? அதே மாதிரி, எந்தக் கல்லுலேயும், எந்தக் காயும் விழாதுன்னும் எவன் சொல்ல முடியும்? 'Try! Try! Try! Until your Brain becomes - Dry! Dry! Dry!’ என்று - Jerry Lewis பாணியில், ஒரு நடனத்தை ஆடுவான்; அந்தப் புண்ணியவான் வேறு யாருமல்ல.

இல்லாமல் போன பின்பும், இன்றும் இருந்துகொண்டிருக்கும் என் நெருங்கிய நண்பன் திரு. நாகேஷ்!

'தாமரைக் குளம்’ படத்தில் - சின்னதாய் ஒரு வேஷங் கிடைத்தவுடன் -

கை நிறையச் சம்பாதித்துக்கொண்டிருந்த ரயில் வேலையைப் 'பொக்’கென விட்டவன்!

ருவரும் ஒன்றாய் இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டோம்.

நான் சொல்வதுண்டு நாகேஷிடம்,

'நாகேஷ்; நம்ம ரெண்டு பேர்கிட்டயும் -No Cash!’ என்று!

உடனே அவன் என் கைகளைப் பற்றி, 'டேய், வாலி! இந்த மாதிரி வார்த்தை விளையாட்டுதாண்டா சினிமாப் பாட்டு எழுதத் தேவை! Keep it up!’ என்று உற்சாக ஊசியை என் உள்ளத்தில் செலுத்துவான்.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 22

அவனோடு சிரம திசையில் சினேகிதனாயிருந்தபோது, நான் அவன் வாங்கி வந்த பத்து பைசாப் பேப்பரில் எழுதியவைதாம் கீழ்க்கண்ட பாடல்கள்.

'இறைவனில்லா ஆலயத்தில்
ஏற்றிவைத்த தீபம்;
இரவு பகல் எரிவதனால்
எவருக்கென்ன லாபம்?’

- இது பின்னாளில் சிவாஜி நடித்த 'அன்புக்கரங்க’ளில் இடம் பெற்றது.

'காசேதான் கடவுளடா! - அந்தக்
கடவுளுக்கும் இது தெரியுமடா;
கைக்குக் கைமாறும் பணமே!
  - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே!’

- இது பின்னாளில் 'பாலன் பிக்சர்ஸ்’ தயாரித்த 'சக்கரம்’ படத்தில் வந்தது.

'மாசியிலே சமயபுரம்
மாரியம்மன் தேரு வரும்;
ஊசிவிழ இடமிருக்காது; - மச்சான்!
நாம -
உரசிநின்னா ஊரறியாது!’

- இது திரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில், மதுரை திருமாறன் இயக்கிய 'மாமியார்கள் ஜாக்கிரதை’யில் வந்தது.

இப்படி எண்ணற்ற பாடல்கள் என்னை எழுதவைத்து - என் சோம்பலைத் தகர்த்தெறிந்த நாகேஷ§ம் நானும் -

வறுமையில் உயிருக்குயிரான நண்பர்களாக இருந்தோம்; இருவரும் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற பிறகு - விலகி, பரஸ்பரம் வெகு தூரம் போய்விட்டோம்!

'இவ்வுலகின் கண்
இருவரை -
வறுமை இணைக்கிறது,
வளமை பிரிக்கிறது!’

பழம்புலவன் ஒருவன் பாடிவைத்துப் போயிருக்கிறானே - தன் பட்டறிவைக் கொண்டு.

'மயிர் ஊடாடா நட்பும்-
பொருள் ஊடாடக் கெடும்!’

- சுழலும்...