Published:Updated:

அணிலாடும் முன்றில்! - 5

அணிலாடும் முன்றில்
பிரீமியம் ஸ்டோரி
News
அணிலாடும் முன்றில்

ஆயா, பதிமூணு வயசுல கல்யாணமாகி தாத்தாவுக்கு வாக்கப்பட்டு வந்துச்சாம். இவன் பொறக்குறதுக்கு முன்னாடியே தாத்தா இறந்துட்டாரு.

ஆயா

அம்மாவைப் பெற்ற அம்மாச்சி. காலையில் இருந்து இரவு வரையிலும் தினசரி ஒரு பூ பூத்தபடியிருப்பது அபூர்வம் என்றால், அவளும் அபூர்வம்தான். காது வளர்த்து, தண்டட்டிகளாடக் கல்யாண வீடுகளில் நிறையச் சாப்பிட்டு, வெற்றிலை போட்டு, உதட்டில் விரல் மூடிக் காவி நீர் உமிழ்ந்தால், ஒரு பாகம் சென்று விழும். அவ்வளவு வலுவும் வீரியமும் மிக்கவள். நேர் மாறாக, பிள்ளை மனசு. யார் அழுதாலும் எதற்கென்று கேட்காமல், தானும் அழுவாள்; அழுபவளைவிட அதிகமாகவும் உண்மையாகவும்.

- கந்தர்வன் (கந்தர்வன் கதைகள் தொகுப்பில் இருந்து)

ரு ஊர்ல ஒரு ஆயா இருந்துச்சி. அந்த ஆயா அப்பாவைப் பெத்த ஆயா. இவன் எப்பவும் ஆயா ஆயான்னு பின்னாடியே சுத்திட்டு இருப்பான். ஒருநாள் இவன்கூடப் படிக்கிற பையன் இவன் கிட்ட, ''எங்க வீட்ல எல்லாம் நாங்க பாட்டின்னுதான் கூப்பிடுவோம். வேலைக்காரங்களைத்தான் ஆயான்னு சொல்லுவோம்''னு சொன்னதைக் கேட்டதும், இவனுக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு. அந்தப் பையன் பணக்காரப் பையன். அவன் சொன்னா, அது சரியாத்தான் இருக்கும்னு தோணிச்சு. அதற்கப்புறம் ஒரு ரெண்டு நாள் இவனும் பாட்டின்னு கூப்பிட ஆரம்பிச்சான். அது ஏதோ ஆயாவுக்கு பணக்கார கவுன் போட்ட மாதிரி தோணவே, சரி நம்ம ஆயா வுக்குப் பணக்காரத் தோற்றம் வேணாம்... அது ஏழையாவே இருந்துட்டுப் போகட்டும்னு விட்டுட்டான்.

அப்பாவைப் பெத்த அந்த ஆயாவை இவனுக்கு ரொம்பப் பிடிக்கும். இவனை வளர்த்தது அந்த ஆயாதான். செக்கச்செவேல்னு அழகா இருக்கும். அழகுலயே பல அழகு இருக்கு. தீ மாதிரி மிரட்டுற அழகு; அருவி மாதிரி பிரமிக்கவெக்கிற அழகு; கடல் மாதிரி கொந்தளிக்கிற அழகுன்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த ஆயாவோட அழகு, மலை மாதிரி அமைதியான அழகு. முதுமையோட கோடுகளும் சேர்ந்து அந்த அழகை ஓர் அற்புதமான ஓவியமா மாத்தியிருந்தது.

அணிலாடும் முன்றில்
அணிலாடும் முன்றில்

அந்த ஆயா சுத்த சைவம். வாரத்துல நாலு நாள் விரதம் இருக்கும். அதனால, வீட்ல அசைவம் சமைக்க மாட்டாங்க. இவன் இப்ப வரைக்கும் அசைவத்தை ரொம்ப விரும்பிச் சாப்பிடறதுக்கு அதுவும் ஒரு காரணம்.

ஆயா, பதிமூணு வயசுல கல்யாணமாகி தாத்தாவுக்கு வாக்கப்பட்டு வந்துச்சாம். இவன் பொறக்குறதுக்கு முன்னாடியே தாத்தா இறந்துட்டாரு. அந்தக் காலத்துல வண்டி கட்டிப் போயி, மகாத்மா காந்தியோட பேச்சைக் கேட்டது; சுதந்திரம் வந்தப்போ... ஊரே கொண்டாட்டமா இருந்ததுன்னு நெறைய கதை சொல்லும்.

கதை கேட்கிறதுன்னா, இவனுக்கு அப்படிப் பிடிக்கும். ஆயாகிட்ட இவன் கேட்ட கதைகள்ல கம்பளம் பறக்கும்; மோதிரம் பேசும்; ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, கிளியோட கழுத்துல இளவரசியோட உயிர் இருக்கும்; தெனாலிராமனோட கத்தரிக்காய்க்கு கிரீடம் முளைக்கும்.

இவன் ஆயா மடியில படுத்துக்கிட்டே கதை கேப்பான். சமையலறைப் புகை, பூண்டு, வெங்காயம், விபூதின்னு கலப்படமா ஆயா மேல ஒரு வாசனை அடிக்கும். அது இவனுக்கு ரொம்பப் பிடிக்கும். பாதி கதையில தூங்கிட் டாலும் கனவுக்குள்ள அவங்க குரல் கேட்டுக் கிட்டே இருக்கும்.

அணிலாடும் முன்றில்! - 5

இவனுக்கு சின்ன வயசிலேயே அம்மா இறந்துட்டதால, அந்த ஆயா இவனுக்கு எல்லாமா இருந்துச்சி. இவன் மேல அப்படி ஒரு ப்ரியம். டவுனுக்குப் போயிட்டுத் திரும்பும்போது முந்தானையில மடிச்சி போண்டா வாங்கிட்டு வரும். அத்தை வீடு களுக்குக் கூட்டிட்டுப் போயி, இவனுக்காகக் கறி எடுத்து சமைக்கச் சொல்லும். எண்ணெய் தேய்ச்சிக் குளிப்பாட்டும். காது அழுக்கு எடுத்துவிடும். விளையாடிட்டு வந்து தூங்கும் போது கால் அமுக்கிவிடும்.

ஒரு முறை இவன் குழந்தையா இருக்கும்போது, வீட்டுக்குப் பக்கத்துல இருந்த குட்டையில விழுந்துட்டான். எல்லாரும் எங்கெங்கேயோ தேடறாங்க. அப்ப இவன் தலையில குடுமி போட்டிருப்பான். இவனோட அம்மாதான் சிவப்பு கலர் ரிப்பன் குட்டைக்கு மேல தெரியறதைப் பார்த்து இவனைத் தண்ணிக்குள்ள எறங்கிக் காப்பாத்துனாங்க. எல்லாரும் சேர்ந்து ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனது இவனுக்கு இப்பவும் ஞாபகம் இருக்குது.

அன்னியில இருந்து இவனுக்குத் தண்ணியில கண்டம்னு ஆயா தண்ணி பக்கமே விடாது. இவனோட கூட்டாளிங்க கெணத்துல சொட்டாங்கல்லா குதிக்கும்போது இவன் கரையில இருந்து பார்த்துட்டு இருப்பான். ரொம்ப நேரமா இவனைக் காணோம்னா, ஆயா வயல்காட்டுல இருக்குற கெணறு கெணறாத் தேட ஆரம்பிச்சிடும். இவன் கரை மேல இருக்கிறதைப் பார்த்த பிறகுதான் அதுக்கு நிம்மதி வரும். ஆயாவோட பயத்தால, இன்னிக்கும் இவன் நீச்சலே கத்துக்கல.

அணிலாடும் முன்றில்! - 5

இந்த மாதிரிதான் நெறைய விஷயங்கள்ல இருந்து இவன் தள்ளியே இருந்தான். ப்ளஸ் டூ படிக்கும்போதுதான் இவனுக்குப் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிள்ல போற அனுமதியே கெடச்சது. டியூசன் எல்லாம் முடிஞ்சு, ராத்திரி வர்றவரைக்கும் ஆயா திண்ணையிலேயே உட்கார்ந்திருக்கும். ''இனிமே பஸ்லயே போ... சைக்கிள்ள போகாதே. பயமாஇருக்கு''ன்னு சொல்லும்.

''ரா முழுக்கக் கண்ணு முழிச்சி எழுதிக்கிட்டே இருக்காதே. ஒடம்பப் பார்த்துக்கோ. பேசாம காலேஜ் வாத்தியாரு வேலைல சேர்ந்துட்டு, ஊர்லயே இரு''ன்னு இப்பவும் சொல்லிக்கிட்டே இருக்கும்.

இவன் சிரிச்சிக்கிட்டே பேச்சை மாத்திருவான். ஆயாவுக்கு இப்ப 92 வயசு. இப்பவும் ஊருக்குப் போனா, அவங்க மடியில படுத்துப்பான். எதுவும் பேசாம இவன் மொகத்தை நடுங்குற விரலால தடவிக்கொடுத்துட்டே இருக்கும். இவன் அப்படியே தூங்கிடுவான். கனவுக்குள்ள அது முன்ன சொன்ன கதை களோட குரல் கேட்கும்.

ன்னொரு ஊர்ல இன்னொரு ஆயா இருந்துச்சி. இந்த ஆயா அம்மாவைப் பெத்த ஆயா. இந்த ஆயாவும் அழகு. இந்த ஆயாவோட அழகு, கிராமத்துக் கோயில்ல இருக்குற சிறு தெய்வம் மாதிரி கொஞ்சம் ஆக்ரோஷமான அழகு. இந்த ஆயாவோட மூக்குதான் இவனோட அம்மாவுக்கும், அவங்ககிட்ட இருந்து இவனுக்கும் வந்திருச்சி. இந்த மூக்கால பள்ளிக்கூடத்துல இவனுக்கு பட்டப் பெயர் 'ஜப்பான்.’

இந்த ஆயா அந்த ஆயாவுக்கு அப்படியே நேரெதிர். வீர அசைவம். முழுப் பரீட்சை லீவுக்கு சென்னைக்கு ஆயா வீட்டுக்கு வரும்போது எல்லாம், ஆயா மண் சட்டியில் மீன் ஆய்வதை வேடிக்கை பாக்குறதுதான் இவனோட பொழுதுபோக்கு. மண் சட்டியில ஆயா வெக்கிற மீன் குழம்போட ருசியை இன்னிக்கி வரைக்கும் இவன் வேற எங்கயும் சாப்பிட்டதில்ல. மீன் குழம்பு இல்ல, அது தேன் குழம்பு.

வாய்யான்னு பாசத்தோடு கூப்பிட்டு, வெத்தலை பாக்குக் கறையோட கன்னத்துல முத்தம் கொடுக்கும். கல்லூரி முடிஞ்சி கல்யாணம் ஆகற வரைக்கும், இவன் இந்த ஆயா வீட்லதான் இருந்தான். அஞ்சு மாமா, மாமிங்க, அக்கா, குழந்தைங்கனு கூட்டுக் குடும்பம்.

ஆல மரம் மாதிரி ஆயாதான் எல்லோரையும் தாங்கிட்டு இருந்துச்சி. எங்கேயாவது வெளிநாட்டுக்கோ, வெளியூருக்கோ போகும்போது, இவனை சாமி படத்துக்கு முன்னாடி நிக்கவெச்சி விபூதி பூசிவிடும். இவன் கால்ல விழுவான். சுருக்குப் பையில இருந்து பத்து ரூபா எடுத்துக் கொடுத்து, ''பார்த்து செலவு பண்ணுய்யா... பத்திரமாப் போயிட்டு வா''ன்னு அனுப்பிவைக்கும். அந்த பத்து ரூபாய, பல லட்சம் ரூபாயா இவன் நெனச்சிருப்பான். செலவே பண்ண மாட்டான்.

இந்த ஆயா கொஞ்சம் வைராக்கியமான ஆயா. அப்படி வைராக்கியமா இருந்ததால்தான், தனி ஆளா நின்னு இத்தனை புள்ளைகள வளர்த்திருக்கு. ஆயாவைக் கேக்காம யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க. அப்படி ஒரு பயம் கலந்த மரியாதை.

இவன் ராத்திரி எல்லாம் கண்ணு முழிச்சிப் படிச்சிட்டு இருப்பான். இவன் காஃப்காவைப் படிக்கிறானா? காம்யூவைப் படிக்கிறானா? சுந்தர ராமசாமியைப் படிக்கிறானா? சில்வியா ஃபிளாத்தைப் படிக்கிறானா? எதுவுமே ஆயாவுக்குத் தெரியாது. அதைப் பொறுத்த வரைக்கும் பேரன் படிச்சிக்கிட்டு இருக்கான். நிச்சயம் பெரிய ஆளா வருவான்னு நெனப்பு. பரீட்சைக்குப் படிக்கிறவங்களுக்குக் குடுக்குற மாதிரி, அதுவும் கூடவே முழிச்சிருந்து டீ போட்டுக் கொடுக்கும். காலையில எல்லோரும் பள்ளி, கல்லூரி, வேலைக்குப் போன பிறகும் இவன் தூங்கிக்கிட்டு இருப்பான். யாராவது சத்தமாப் பேசுனா, ''பேரன் படிச்சிட்டுத் தூங்கறான், மெள்ளப் பேசுங்கடி''ன்னு விரட்டி விட்டுடும்.

பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால இவனோட கவிதைப் புஸ்தகத்தை பாரதிராசா வெளியிட்டாரு. பாலுமகேந்திரா, பெரியார்தாசன், பாரதி புத்திரன்னு நிறையப் பெரியவங்க பேசினாங்க. புத்தகப் பிரதியை பாரதிராசாகிட்ட மேடையேறி வாங்குன ஆயா, அவரு காதுல ஏதோ சொல்ல... அவரு பேச வரும்போது, ''இந்தக் கவிஞனோட பாட்டி என் காதுல, 'என் பேரன்தான், பத்திரமாப் பாத்துக்குங்க’ன்னு சொன்னாங்க... எனக்கு எங்க அப்பத்தா ஞாபகம் வந்துடுச்சி''ன்னு அழ ஆரம்பிச்சிட்டாரு. அந்த நிகழ்ச்சியே நெகிழ்ச்சியா மாறிடுச்சி. இவன் மேல அதுக்கு அப்படி ஒரு அக்கறை.

இந்த அக்கறை சில சமயம் வேற மாதிரியும் முடியும். ஒரு முறை இவனைப் பேட்டி எடுக்க ஒரு பத்திரிகை நிருபர் வீட்டுக்கு வந்தாரு. இவன் இதுவரை எழுதிய பாடல்கள், இப்ப எழுதிட்டு இருக்கிற பாடல்கள்னு எல்லாவற்றையும் அவர் கிட்ட சொல்லிட்டு இருந்தான்.

அணிலாடும் முன்றில்! - 5

அவரு கிளம்பிப் போனதும், ஆயா இவன்கிட்ட வந்து, ''இவருகூடப் பழகாத, உன்னைப்பத்தி தெரிஞ்சிட்டுப் போக வந்திருக்காரு''ன்னு சொல்லிச்சு. இவன், ''இல்ல ஆயா... அதுதான் அவரோட தொழிலே, அவரு பத்திரிகை நிருபர்''னு சொன்னான். உடனே, ''இப்படி வெள்ளந்தியா இருக்காதே. எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் சொல்லாதே''ன்னு சொல்லிட்டு உள்ள போயிடுச்சு. அதுக்கு மேல புரியவைக்க முடியாம இவனும் சரின்னு தலையாட்டுனான்.

இந்த ஆயாவுடன் தன்னோட பத்தாங் கிளாஸ் லீவுல இந்தியா முழுக்க நாப்பத்தி எட்டு நாள் பேருந்துல டூர் போனது இவனால மறக்கவே முடியாது. இப்ப நெனச்சிப்பார்த்தா, கங்கையில தொடங்கி கோதாவரி வரை இந்தியாவுல இருக்குற எல்லா நதியிலயும் நீச்சல் தெரியாமலேயே இவன் இறங்கிக் குளிச்சிருக்கான். அந்த ஆயாகிட்ட இருந்து பயத்தையும், இந்த ஆயாகிட்ட இருந்து தைரியத்தையும் இவன் மாத்தி மாத்திக் கத்துக்கிட்டான்.

இவன் தலை வழியாப் பொறக்காம, கால் வழியாப் பொறந்ததால அடிக்கடி இந்த ஆயாவுக்கு காலால சுளுக்கு எடுத்து விடுவான். இப்பவும் எப்பவாவது காலை உதறும்போது எல்லாம் இவனுக்கு அந்த ஞாபகம் வந்துடும்.

இந்த ஆயாவைப் பார்க்கும்போது எல்லாம் இவனுக்கு அப்படியே வயசான அம்மாவைப் பார்க்கிற மாதிரியே இருக்கும். கொஞ்ச நாளா, இந்த ஆயாவுக்கும் இவனுக்கும் மனஸ்தாபம். மனம்னு இருந்தா... மனஸ்தாபமும் இருக்கத்தானே செய்யும்?

சமீபத்துல ஒரு கல்யாணத்துல இவனைப் பார்த்ததும் ஆயா அழத் தொடங்கிடுச்சி. இவனும் கண்ணு கலங்கிப் பக்கத்துல போயி உட்காந்தான். ஆயா இவன்கிட்டப் பேசலை. ''உன் பேரனுக்கு உன்கிட்ட சண்டை போட உரிமை இல்லையா?''ன்னு கேட்டான். அப்படியே இவன் கையப் புடிச்சு அணைச்சிக்கிச்சி. அந்த அணைப்புல இவன் அம்மாவைப் பார்த்தான். அவங்க அம்மாவைப் பார்த்தான். தலைமுறைக்கும் முந்தைய ஆதித் தாயைப் பார்த்தான்!

- அணிலாடும்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan