யோசிக்கும்போது, நம்மைப் பயங்கொள்ளவைக்கும் நிறைய விஷயங்களோடு நமக்கு நேர் பரிச்சயமே கிடையாது. ஆனால், அச்சம் நமக்குள் ஆழமாக வேரோடி இருக்கிறது. ஒவ்வொருவருக்கு உள்ளும் அச்சமூட்டும் மனிதர்கள், விஷயங்கள் என்ற ஒரு பட்டியல் இருக்கிறது. அதில் அண்டை வீட்டார் துவங்கி, ஆபத்தான தீவிரவாதிகள் வரை பல்வேறு மனித முகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நமது பயத்தின் பட்டியல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டேஇருக் கிறது. புதிய நோய்கள், புதிய ஏமாற்றுத்தனங்கள், புதிய ஆயுதங்கள் என்று பயத்தைப் பெருக்கிக்கொண்டே இருக்கிறோம்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியை தனது வகுப்பில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப்பற்றி இணையத்தில் எழுதியிருந்தார். முதலாம் வகுப்பில் படிக்கும் இரண்டு சிறுவர்கள், அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு சிறுவனை மிரட்டி, அவன் தங்களுக்கு அடிமை என்று பயமுறுத்தி, தங்களது புத்தகப் பையைச் சுமக்கவைப்பது, பூட்ஸைத் துடைக்கச் சொல்வது, உட்காரும் பெஞ்ச்சை கர்சீப்பால் துடைக்கவைப்பது என்று மாறி மாறித் தண்டனை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பையனும் பயந்துகொண்டு வெளியே இதைப்பற்றிச் சொல்லவேஇல்லை.
ஆனால், ஒருநாள் அவர்கள் தங்கள் அடிமைகுடிக் கும் தண்ணீர் பாட்டிலில் மூத்திரம் பெய்து குடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அவன் அழுதுகொண்டே ஆசிரியரிடம் முறையிட, விஷயம் பெரிதாகி பள்ளியில் விசாரணை நடைபெற்றிருக்கிறது. ஒரு சிறுவனை அடிமையாக்க வேண்டும் என்ற ஐடியா எப்படி அவர்களுக்கு வந்தது என்று கேட்டதற்கு, அந்த இரண்டு சிறார்களும் டி.வி-யில் அப்படி ஒரு நிகழ்ச்சி வருகிறது. அதில் ஒருவனை மற்றவன் அடிமை ஆக்கிக்கொள்கிறான் என்று அழுதபடியே சொல்லியிருக்கிறார்கள்.
உண்மையில், இது தொலைக்காட்சியில் இருந்து மட்டுமே உற்பத்தியாகிற விஷயம் இல்லை. பல நேரங்களில் நாம் அடுத்தவரை அடிமைபோலத்தான் நடத்துகிறோம். அது நம் குடும்பத்தில் துவங்கி அலுவலகம், வெளியிடம் என எங்கும் நீள்கிறது. அதை ஒவ்வொருவரும் அவரவர் அளவில் கற்றுக்கொண்டு விடுகிறார்கள்.
யோசிக்கும்போது வியப்பாக இருக்கிறது. அத்தனை ஊடகங்களிலும் கண்ணுக்குத் தெரியாமல் பயம் கசிந்து நம் வீட்டுக்குள் வந்தபடியே இருக்கிறது. தனியாக இருக்காதீர்கள், இருட்டில் வெளியே போகாதீர்கள், அடுத்த மனிதனை நம்பிப் பேசாதீர்கள், உதவி செய்யாதீர்கள் என்று ஊடகங்கள் பயத்தை உற்பத்தி செய்தபடியே இருக்கின்றன.
எனது பால்ய காலங்களில் தீவிரவாதி என்ற சொல்லையே கேள்விப்பட்டு இருக்கவில்லை. கிராமத்துக்கு யாராவது வெளியாட்கள் வந்தால் அவர்களை விசாரித்து, எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வார்கள். தங்களால் முடிந்த உதவி செய்வார்கள். சாப்பாடும் தங்கும் இடமும்கூடக் கிடைப்பது உண்டு. சந்தேகம் உருவானால், விசாரித்து இங்கே தங்கக் கூடாது என்று அனுப்பிவிடுவார்கள். மனிதர்கள் மீதான அச்சம் அன்று அதிகம் இல்லை.
பயம் முழுவதும் பேய், பிசாசுகள், ஆவிகள் மற்றும் பாம்பின் மீதே குவிந்திருந்தன. ஐந்து தலைப் பாம்பு வந்து கொத்திவிடும். பறக்கும் பாம்பு இருக்கிறது. அது கண்ணைக் கொத்திக் குருடாக்கிவிடும் என்று உருவாக்கப்பட்ட பயம், யாவர் மனதிலும் இருந்தது. தனியே இருட்டில் நடந்தால் பேய் பிடித்துவிடும் என்று ஊரே பயந்தது. இன்று பேய்கள், பிசாசுகள் மீதான பயம் பெரும்பாலும் போய்விட்டது. ஆனால், அந்த இடத்தை மனிதர்கள் பிடித்துக்கொண்டுவிட்டார்கள். இன்று பயமே நம்மை வழிநடத்துகிறது.
எதையும் அடிமையாக்கவும் அச்சமூட்டுவதற்கும் மட்டுமே பழகிய நாம், வசீகரிப்பதற்கும் நெருங்கி அன்புகொள்வதற்கும் என்ன சாத்தியங்களை உருவாக்கப்போகிறோம்? இந்தக் கேள்வியின் விடையில்தான் நமது எதிர்காலத்தின் அமைதி அடங்கி இருக்கிறது!
|