என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்ஓவியம் : ஹரன்

##~##
ரந்து விரிந்துகிடக்கும் இணைய உலகில் லேட்டஸ்ட் ஹாட் என்னவெனப் பார்க்கலாம். வருடந்தோறும் டெக்சாஸ் ஆஸ்டின் நகரில் நிகழும் SXSW (http://sxsw.com/) மாநாட்டை ஐ.டி இண்டஸ்ட்ரியை கவர் செய்பவர்கள் தீர்க்கமாகக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். Four square போன்ற சில பிரபலமான நிறுவனங்களின் பூப்புனித நீராட்டு விழா நடந்தது இந்த மாநாட்டில்தான் என்பதால், இந்தக் கவனிப்பு. இந்த வார இறுதியில் தொடங்கும் இந்த மாநாட்டில் வெளியாகப்போவதாகக் கருதப்படும் பல இணைய நிறுவனங்களில் ஒன்றை மிக முக்கியமானதாகக் கருதுவதால், இந்த வாரத்தில் அதைப் பார்க்கலாம்.

 சென்னைவாசிகளுக்கு ஆட்டோ தேவை மற்றும் தொல்லைகளைப்பற்றி சொல்ல வேண்டியது இல்லை. சென்னை என்றில்லை... உலகின் பல நகரங்களில் டாக்சி சவாரி என்பது தேவையான evil என்ற நிலைதான். தேவைப்படும் நேரத்தில், வசதியான இடத்தில் டாக்சி கிடைப்பது என்பது பெரும்பாலான நகரங்களில் மிகவும் கடினம்.

வருங்காலத் தொழில்நுட்பம்

புதிதாக ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். உங்களுக்கு அவசரமாக டாக்சி அல்லது ஆட்டோ வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்?

டாக்சி / ஆட்டோவுக்காக ஒதுக்கப்பட்ட ஸ்டாண்ட் இருக்கும் இடத்துக்கு வருவீர்கள். அல்லது கடந்து செல்லும் சாலை வளைவில் நின்று கை அசைத்து, உங்களது விருப்பத்தைத் தெரிவிப்பீர்கள். கால் டாக்சி நிறுவனம் ஏதாவது ஒன்றின் தொலைபேசி எண் தெரிந்திருந்தால் அதை அழைத்து, நீங்கள் இருக்கும் இடத்துக்கு டாக்சியை அனுப்பக் கேட்டுக்கொள்வீர்கள்.

இதில் எந்த முறையைப் பின்பற்றினாலும் ஒன்று நிச்சயம்... நீங்கள் பயணம் மேற்கொள்ளப்போகிற டாக்சி ஓட்டுநர்பற்றியோ, டாக்சியின் கண்டிஷன்பற்றியோ உங்களுக்கு எதுவும் தெரியாது. டாக்சியில் பயணிக்கிறீர்கள். உங்களது அனுபவம் நல்லதாகவோ, மோசமானதாகவோ இருக்கலாம். ஆனால், அந்த அனுபவத்தைப் பொத்தாம்பொதுவாக மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு வலைப்பதிவர் என்றால், உங்களது அடுத்த பதிவில் 'இன்று ஆம்ஸ்டர்டாமில் பயன்படுத்திய டாக்சி சேவை அருமை’ என்று உங்களது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வீர்கள். உங்களது ஆத்ம சாந்திக்கு இது பயன்படலாமே தவிர, உங்களைப்போலவே மற்றொருவர் இதே நிலையில் இருக்கும்போது, உங்களது பின்னூட்டங்களால் எந்தப் பயனும் இல்லை.

சென்னையில் இருந்து டோக்கியோ, நியூயார்க் வரை எந்தப் பெரிய நகரத்தை எடுத்துக்கொண்டாலும், இன்னொரு மிகப் பெரிய பிரச்னை டாக்சிகளின் எண்ணிக்கை. சிங்கப்பூர் தவிர்த்து, உலகின் பல நகரங்களில் இரவு வேளைகளில் டாக்சி கிடைக்காமல் தவித்த அனுபவம் எனக்குப் பல முறை உண்டு. சரி, கார்கள் அதிகமாக இருப்பதால், கார் வைத்திருப்பவர்கள் 'சைடு பிசினஸாக’ தங்கள் காரைப் பயன்படுத்தினால் எல்லோருக்கும் லாபமாக இருக்குமே என்ற அடிப்படை பொருளாதார, தொழில்முனைவு தீர்வு கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், பிராக்டிகலாக சரி வராது.

வருங்காலத் தொழில்நுட்பம்

காரணம், நீங்கள் நுகர்வோராக இருந்தால், டாக்சி என்று முத்திரைஇடப்படாத ஏதோ ஒரு வண்டியில் பயணிக்கத் தயங்குவீர்கள். சேவை அளிப்பவராக இருந்தால், முன் பின் தெரியாத ஒருவரை காருக்குள் ஏற்றுவதில் தயக்கம் இருப்பதும் இயல்புதான்.

மேற்கண்ட அத்தனை பிரச்னைகளையும் உள்வாங்கி ஸ்மார்ட்டான தீர்வு ஒன்றை வழங்குகிறது யூபர்கேப் ( http://www.uber.com/) நிறுவனம். சான்பிரான்சிஸ்கோவில் சென்ற பல மாதங்களாக சோதனை முறையில் செயல்படுத்தப்பட்ட யூபர்கேப் இப்போது பல நகரங்களுக்கும் கொண்டுசெல்லப்படுகின்றனவாம்.

யூபர்கேப் செயல்படுவது இப்படி

நீங்கள் டாக்சி பயன்படுத்தும் நுகர்வோர் என்றால், யூபர்கேப் மொபைல் மென்பொருளை உங்களது அலைபேசியில் தரமிறக்கி வைத்துக்கொள்கிறீர்கள்.  மென்பொருளை இயக்கும் முன், உங்களது கிரெடிட் விவரங்களையும் கொடுக்கிறீர்கள்.

அவசரமாக டாக்சி தேவைப்படும் சமயம், யூபர்கேப் மென்பொருளை இயக்கி, நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் யூபர்கேப் சேவை அளிக்கும் எந்த காராவது இருக்குமா எனப் பார்க்கிறீர்கள். ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் மூன்று கார்கள் இருப்பதைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த மூன்று கார்களையும் இதுவரை டாக்சியாகப் பயன்படுத்தியவர்கள், தங்கள் அனுபவத்தின் rating score ஐப் பார்த்து, நல்லதாக ரேட்டிங்  செய்யப்பட்ட காரைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். அந்த காரின் டிரைவருக்கு இந்தத் தகவல் செல்லும். அவர் உங்களை ஏற்றி எங்கே செல்ல வேண்டுமோ, அங்கே செல்கிறார். பயணம் முடிந்ததை நீங்கள் யூபர்கேப் மென்பொருளில் தெரிவிக்கிறீர்கள். தொடங்கிய இடத்தில் இருந்து, முடிந்த இடம் வரை உள்ள தூரத்தைக் கணக்கிட்டு யூபர்கேப் மென்பொருள் உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுத்து, டாக்சி டிரைவரின் கணக்குக்கு மாற்றும். இந்தப் பயண அனுபத்தை நீங்கள் ரேட்டிங்  செய்து உங்கள் பணியைத் தொடர்கிறீர்கள்.

சரி, உங்களிடம் கார் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி சைடு வருமானம் பார்க்க விருப்பமா? அதற்கும் வழிவகுக்கிறது யூபர்கேப்.

எப்படி?

வருங்காலத் தொழில்நுட்பம்

யூபர்கேப் மென்பொருளைத் தரவிறக்கி நீங்கள் டாக்சி சேவை அளிக்க விரும்புவதாகப் பதிவு செய்யுங்கள். இதற்கு, உங்களது கார் ரெஜிஸ்ட்ரேஷன், இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட விவரங்கள் தேவை. இதைச் செய்து முடித்ததும், இன்ஸ்டண்ட் டாக்சி டிரைவராக நீங்கள் ரெடி.

எப்போது நீங்கள் சேவை அளிக்கத் தயாராக இருக்கிறீர்களோ, அப்போது யூபர்கேப் மென்பொருளை இயக்கி உங்களது 'தயார்’ நிலையைத் தெரிவியுங்கள். இதைச் செய்ததும், நீங்கள் இருக்கும் இடம் யூபர்கேப் நுகர்வோருக்குத் தெரிய வரும். உங்களது சேவையின் ரேட்டிங்  நல்லதாக இருந்தால், உங்களை அழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இல்லைஎன்றால், நுகர்வோரைத் திருப்திப்படுத்தும் சேவை மனப்பான்மை உங்களுக்கு சரிவரவில்லை என்பதால், மற்றொரு தொழிலைக் கவனிக்க முற்படுவது நல்லது!

LOG OFF