என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

நான் ஏன் பிறந்தேன்? - எம்.ஜி.ஆர்

நான் ஏன் பிறந்தேன்? - எம்.ஜி.ஆர்

நான் ஏன் பிறந்தேன்? - எம்.ஜி.ஆர்

'நான் ஏன் பிறந்தேன்’... எம்.ஜி.ஆரால் விகடன் இதழில் எழுதப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர். அந்தத் தொடரில் இருந்து சில பகுதிகள் இங்கே... 

மக்கள் புரிந்துகொள்கின்றனர்!

##~##

ந்தக் காலத்தில் தி.மு. கழகத்தின் பிரசாரப் பொதுக் கூட்டங்கள், நாடகங்கள், பாட்டுக் கச்சேரிகள் போன்றவை, அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் நண்பர்களால் பெரிய அளவுக்குத் தடை செய்யப்பட்டன.

சட்டம் போட்டுத் தடை செய்யவில்லை. பேசுவதற்கு நல்ல இடங்களைத் தருவது இல்லை. இத்தனை மணிக்குள் கூட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று திடீர்க் கட்டளைகள் வரும் அதிகாரிகளிடம் இருந்து!

கூட்டத்தில் பேசுகிற பேச்சாளர்கள் பேசி விட்டுத் திரும்பிப் போகும்போது வெட்டப்பட்டுக் கொலை செய்யப்படுவார்கள், அல்லது கை கால்கள் முடமாக்கப்படும்.

நான் ஏன் பிறந்தேன்? - எம்.ஜி.ஆர்

இப்படி ஏதாவது ஒரு வகையில் பிரசாரகர்களின் உயிருக்கோ அல்லது மக்களைச் சந்திப்பதற்கோ தடை ஏற்படுத்தும் வன்முறைச் செயல்கள், தாராளமாக நடைபெற்றன. எப்படியோ நாங்கள் மக்களைச் சந்திக்க முடியாமல் செய்துவிட முடிவு.

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இன்று தமிழகத்தில் மீண்டும் காணுகிறோம். அன்று எந்த தி.மு.க-வினர் அடிபட்டார்களோ, அவர்களே இப்போது பிறரை அடிக்கிறார்கள், வெட்டுகிறார் கள். யாரை? தங்களோடு இருந்து அன்று அடி வாங்கித் தி.மு.கழகத்தைக் காப்பாற்றி யார் வளர்த்தார்களோ... அதே உடன்பிறப்புக்களைத்தான் தாக்குகிறார்கள்.

இன்று ஆட்சியில் இருக்கும் தி.மு. கழகத்தை அமரர் அண்ணாவின் கழகமாகக்கொண்டு, தங்களது உயிரையும் உடைமைகளையும் தியாகம் செய்து, தமது கண்ணீரையும் செந்நீரையும் எருவாக்கி, தங்களே அழித்துத் தி.மு.கழகத்தை வளர்த்து, இன்றைய ஆட்சியாளர்கள் அங்கு இருப்பதற்கு இடம் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யாரோ, அந்தத் தியாகிகளையே இன்று அரசோச்சும் தி.மு.க-வினரும் (மீதம் இருக்கும் ஒரு சிலரும்) தங்களது அரசின், அதிகாரிகளின் உதவி பெற்றுத் தாக்குகிறார்கள்.

இப்படி நடப்பதுதான் 'அரசியல்’ என்று சொல்லுவார்களேயானால், வருத்தத்தோடு எழுதுகிறேன்... அரசியல் என்ற பெயரையே அகராதியில் இருந்து மாற்றுவதற்கு நல்லறிவாளர்கள் முயன்றாக வேண்டும்!

இன்றைய ஆளும் கட்சியினர் சமூக இயலையும், பொருளாதார இயலையும், அரசு இயலையும், இயல் - இசை - நாடகம் என்ற முத்தமிழில் உள்ள அந்த இயலுக்குத் தரப்படும் கருத்தில் உரை நடை என்று கருதி, அதில் தங்கள் திறமையைக் காட்டுவதில்தான் முக்கியக் கவனத்தை வைத்திருக்கிறார்கள்.

தன்மை, தகுதி, ஒழுக்கம் என்ற பொருள்கள் போய், 'பேச்சு’ என்ற பொருளுக்கு இலக்காக, அந்த 'இயல்’ தனது 'இயல்’ மாறிவிட்ட அவல நிலைமை!

மக்களாட்சித் தத்துவத்தில், மக்கள் தமது கண்டனத்தை வெளியிட எத்தனையோ வழிமுறைகள் வரையறுத்துக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்று... கறுப்புக் கொடி காட்டுவது!

அமரர் நேரு அவர்கள் சென்னைக்கு வந்தபோது, தமிழக மக்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட, அமரர் அண்ணா அவர்கள் அந்த முறையைத் தமது தம்பிகளுக்கு நினைவுபடுத்தி அற வழியில் செயல்பட உத்தரவிட்டார். அன்றைய அண்ணாவின் தி.மு. கழகம் நடந்திற்று அறவழியில் அமைதியாக!

ஆனால், காங்கிரஸ் கட்சியினரும் அன்றைய அதிகாரிகளும் சேர்ந்து தி.மு.கவினரைத் தாக்கினார்கள். வீட்டுக்குள் இருந்த திரு.கே.ஆர்.இராமசாமி, திரு.எஸ்.எஸ்.இராஜேந்திரன், திரு. டி.வி. நாராயணசாமி அவர்களையும், என்னையும் எச்சரிக்கையாகக் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். ஆயிரம் ஆயிரம் பேர்களாகக் கைது செய்தனர்.

அன்று ஆட்சியில் இருந்தவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குக் கறுப்புக் கொடி காட்ட அனுமதிக்கப்பட்டனர். அண்மையில் ஓரிரண்டு இடங்களில் எனக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவெடுத்தனர். இன்றைய ஆளும் கட்சியினரான மாண்புமிகு கருணாநிதிக் கட்சியினர். அவர்கள் அந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு, போலீஸாரே சிறந்த பாதுகாப்புக் கொடுத்திருந்தனர்.

கறுப்புக் கொடி காட்டுகின்ற திரு.கருணாநிதியின் கட்சியினருக்கென நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து, அவர்களைச் சுற்றிப் பலத்த போலீஸ் படையினரைத் தக்க ஆயுதங்களோடு நிறுத்தியிருந்தனர். அந்த போலீஸார் கறுப்புக் கொடி காட்டும் நண்பர்களைக் காத்து நின்றார்கள்.

ஆனால், அண்ணா தி.மு.க-வினர் தமிழகத்தின் இன்றைய அமைச்சர்களுக்குக் கறுப்புக் கொடி காட்ட முயலும்போது, குறிப்பிட்டவர்களை முன்னதாகவே கைது செய்கின்றனர். தொண்டர்களை அடிக்கின்றனர். அண்ணா தி.மு. கழகத் தினர் மீது பயங்கரமான தாக்குதலை நடத்துகின்றனர்.

இதுவும் ஜனநாயகம்தான் என்று இவர்கள் பேசுகின்றனர். அமரர் அண்ணா அவர்கள் கட்டிக் காத்த ஜனநாயகப் பண்புக்கும், திரு.கருணாநிதியின் கட்சியினர் நடத்தும் ஜனநாயகத்துக்கும் எத்தனை வேறுபாடு, மாறுபாடு என்பதை மக்களும் நேரிடையாகப் புரிந்துகொள்ளுகின்றனர்!

- தொடரும்...