நமது வீடுகள் எங்கோ காட்டில் இருந்து வெட்டப்பட்ட மரத்தாலும், ஏதோ மலையில் உடைத்து எடுக்கப்பட்ட கற்களாலும் நீரோடிய ஆற்றின் மணலாலும்தான் கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், வீட்டை இயற்கையானது என்று எவரும் நினைப்பதும் இல்லை; உணர்வதும் இல்லை.
காகம் எங்கெங்கோ இருந்து சிறு சுள்ளிகளை எடுத்து வந்து தனக்கான கூட்டினை மரத்தில் கட்டிக்கொள்கிறது. தூக்கணாங்குருவி இன்னும் சற்று ரசனையுடன் மின்மினி விளக்கோடு சுகமாக அலைந்தாடும் ஒரு தொங்கு வீட்டை உருவாக்கிக்கொள்கிறது. அப்படி நமது ரசனையும் பொருளாதாரச் சாத்தியங்களுமே நமது வீடாக உருக்கொண்டு இருக்கிறது.
வீட்டை அலங்கரிக்க நினைக்கும் நாம், அதுவே இயற்கையின் ஒரு பகுதிதான் என்று உள்ளூர உணர்வதே இல்லை. எனது எழுதும் மேஜை எங்கோ காட்டில் இருந்த ஒரு மரம்தானே. அந்த மரம் எங்கே இருந்தது... எவ்வளவு பெரியது... யார் அதன் நிழலில் தங்கிப் போனார்கள். எதுவும் தெரியாது. மரத்தின் முதுகுதான் மேஜையாகி இருக்கிறது. மரம் இப்போது தெரிவது இல்லை.
பயன்பாடு என்ற தளத்துக்குள் நுழைந்தவுடன் இயற்கையின் சாராம்சம் மறைந்துவிடுகிறது. எதைப் பயன்படுத்தத் துவங்கினாலும், அதனால் பிரயோஜனம் இருக்கிறதா என்பதே முதல் கேள்வியாக இருக்கிறது. பயன்படாதவற்றைத் தூக்கி எறிந்துவிடுங்கள் என்பதுதான் நாம் அறிந்துவைத்துள்ள ஒரே அறிவு. ஆனால், இயற்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு பயனும், தேவையும், அவசியமும் இருக்கிறது. அதை நேரடியாக நாம் புரிந்துகொள்ள முடியாது. இது ஒரு சமன். இந்தச் சமனை வெகு ரகசியமாக இயற்கை உருவாக்கிவைத்திருக்கிறது. அந்தப் புதிரை அவிழ்க்க விஞ்ஞானம் பல நூறு வருடங்களாக முயன்றபடியே உள்ளது.
இயற்கையை நோக்கிச் செல்வது என்பது, எங்கோ வனத்துள் போய்விடுவது என்பது இல்லை. நமது வீதியோரங்களில், நமது வீட்டின் அருகில், நமது வீட்டின் திறந்த வானத்தில், நமது அயல்புறங்களில் எத்தனையோ பறவைகள், செடி கொடிகள், பூக்கள், பெயர் அறியாத மரங்கள், சிறியதும் பெரியதுமான விலங்குகள் இருக்கின்றன.
அதை நாம் அரிதாகக் கவனம்கொள்கிறோம். சில நிமிடங்களில் மறந்துவிடுகிறோம். நம்மை உற்சாகம் கொள்ளவைக்க இயற்கை பாடுகிறது. பசுமைகொள்கிறது. பனியும் மழையுமாக உருமாறுகிறது. அதிலிருந்து நம்மைத் துண்டித்துக்கொண்டு அதே விஷயங்களைச் செயற்கையாக உருவாக்கி அனுபவிப்பதற்கே நாம் அதிகம் விரும்புகிறோம்.
கடலில் உள்ள உப்பு கரிக்கக்கூடியது என்பதை கண்களோ, கை கால்களோ, காதுகளோ அறிய முடியாது. அதை உணர்ந்து சொல்வதற்கு நாக்கு அவசியமானது. அப்படி நமக்கு உலகின் ருசியை உணர்ந்து சொல்லக்கூடிய நாக்கு தேவையாக இருக்கிறது. அந்த நாக்குதான் நமது மனது. அது உலகை ருசித்துப் பழக வேண்டும். அதற்குப் பெரும் தடையாக இருப்பது நமது வாழ்க்கை முறை. விடுமுறையை நாம் உறங்குவதற்கும், தொலைக்காட்சிகளுக்கும், மிதமிஞ்சிச் சாப்பிடுவதற்கும் மட்டுமே உரியதாக மாற்றிவைத்திருக்கிறோம்.
உண்மையில், விடுமுறை என்பது நமது தினசரி செயல்பாடுகளில் இருந்து விடுபட்ட, மாறுபட்ட வாழ்வை உருவாக்கிக்கொள்வதே. அந்த விருப்பமும் தேடுதலும் மிகவும் சுருங்கி வருகிறது. விடுமுறை நாளை நாம் பயனற்றதாகக் கழிக்கவே பெரிதும் முயற்சிக்கிறோம். விடுமுறை நம்மைப் புத்துணர்வு கொள்ளவைக்கும் ஒரு வைத்தியம். அது உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தக் கூடியது. அதற்குத் தேவை பயணமும் புதியன காணும் வேட்கையுமே.
|