என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

பூ.. பச்சை.. புன்னகை.. உனதாகட்டும்..!

பிரகாஷ்ராஜ் ஆட்டோகிராஃப்

பூ.. பச்சை.. புன்னகை.. உனதாகட்டும்..!
##~##
பு
து வருஷம்!

முள்ளும் முள்ளும் முத்தம் குடுக்கறப்போ முழிச்சுட்டிருக்கேன். காத்துல காதுல விழறதுஎல்லாம் சந்தோஷச் சத்தம். நான் என் குட்டிப் பொண்ணைக் கட்டிக்கிட்டேன். ஊர் உலகமெல்லாம் நடக்கிற திருவிழாக் கொண்டாட்டத்துல என் பங்கு இதோ!

எதுக்கு இது?

'நாளை மற்றுமொரு நாளே’ன்னு இன்னொரு நாள் நகரப்போவுது. இத்தனை கலாட்டா ஏன்?

பூ.. பச்சை.. புன்னகை.. உனதாகட்டும்..!

இது நம்பிக்கை. நம்மை நாமே 'கியர்-அப்’ பண்ணிக்க போடற ஜாலி நாடகம். 'ஏதாவது பண்ணணும்’னு துடிக்கிற எல்லாரோட மனசுக்கும் அது சர்வீஸ் டே!

இதுதானே வாழ்க்கை!

பேச்சுப் போட்டியில பிரைஸ் வாங்கினேன். அதுவும்கூட ஆர்வத்துல இல்லை. என் பிரதர், சிஸ்டர்லாம் சோப்பு டப்பா, எவர்சில்வர் டம்ளர், கத்தை கத்தையா சர்டிஃபிகேட்ஸ்னு வாங்கிட்டு வர... நான் மட்டும் சும்மா கெடக்கிறேனேனு வெறி. அதுல நுழைஞ்சது... அப்புறம் கைதட்டலுக்கு ஆசைப்பட்டு, அலைய ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ் பண்ணி, நாடகம் போட்டு... கவிதை எழுதி... அங்கே இங்கேனு கொஞ்சம் பொறுக்கிட்டு... சினிமா!

எனக்கு இன்ஸ்பிரேஷன் பெங்களூர்ல பிளாட்ஃபார்ம்ல ஆர்மோனியப் பெட்டியோட பாடுற பார்வையில்லாத இளைஞன், ஒவ்வொரு தேர்தலின்போதும் காலையில சீக்கிரமா எழுந்து குளிச்சு ஓட்டு போட நிக்கிற வாக்காளன், காஷ்மீர்ல பிரேயர் பண்ற மாதிரி கை விரிச்சு எழுந்து நிக்கற மரங்கள், நானா படேகர் மாதிரி நல்ல கலைஞன், ஓஹோன்னு ரசிக்கப்படற நல்ல திரைப்படங்கள்னு ஒவ்வொண்ணும் நம்மை ஷேப் பண்ணும். தியேட்டர் வாசல்ல... மவுன்ட் ரோட்ல பெரிய பெரிய பேனர் பார்க்கறப்போ 'ஒருநாள் என்னை யும் இப்படி வரைவீங்க... என் முகம் போட்டு போஸ்டர் அடிப்பீங்க’ன்னு சிரிச்சுக்கிடற நிமிஷங்கள்தான் நம்மை வளர்க்குது.

'நான் போற பாதை எனக்குத் தெரியும். அதைப் புல் மூடி மறைச்சிருக்கு. நட்சத்திரங்களின் மொழியில் அதை நான் கண்டுபிடிப்பேன். காற்று என் பக்கமிருக்கிறது. பூக்களின் வாசனை என் வழியைச் சொல்கிறது நான் போக வேண்டிய இடம் எதுன்னு எனக்குத் தெரியாது. ஆனா, அந்த இடத்துக்கு நான் வருவேன் என்பது தெரியும்!’

- தாகூரோட இந்தக் கவிதை எனக்குப் பிடிச்ச விஷயம். நான் என்னை இப்படித்தான் சொல்லிக் குவேன்.

ஆட்டோகிராஃப் கேட்ட எல்லாருக்குமே நான் எழுதித் தர்றது-

'பூ...
பச்சை...
புன்னகை...
உனதாகட்டும்!’தான்
.

சின்ன வயசுல ஒரு சர்ச்ல ஃபாதர் ஒருத்தர் எனக்குச் சொன்னது. நெஞ்சுக்குள்ள பச்சைகுத்தின மாதிரி, என்னோட தங்கிப்போச்சு இந்த வார்த்தைகள்.

'மத்தவங்களை இம்ப்ரெஸ் பண்றதுதான் லைஃப்’னு ஆச்சு ஒரு நடிகனுக்கு. நான் கத்திப் பேச ஆரம்பிச்சேன். கைதட்டல் போதை. ஸ்கவுட்ல இருந்தப்போ ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டியோட கைகுலுக்கற சந்தர்ப்பம் கிடைச்சது. 'என்னடா... இந்தியாவோட ஜனாதிபதியின் கை இவ்வளவு சின்னதா இருக்கு’ன்னுதான் யோசிச்சேன்.

எனக்கெல்லாம் காது கேட்க ஆரம்பிச்சதே ரெண்டு மூணு வருஷமாத்தான். கேட்க ஆரம்பிச்ச பிறகுதான் வாழ்க்கை புரியுது.

எப்பவுமே 'முயற்சி’ங்கிறது தெரிஞ்ச வெளிச்சத்துல இருந்து தெரியாத இருட்டுக்குள்ள குதிக்கற சங்கதி.

விழறப்போ ஒரு பாறை நம்மைத் தாங்கி அதுவே மேடை ஆகலாம். ஆனா, அது அபூர்வம். இல்லே... ஒரு அதலபாதாளத்துல விழ நேரலாம். நஷ்டமில்லை. பாதாளம் நமக்கு பறக்கக் கத்துக்கொடுக்கும். சும்மா இருக்கிறதுக்கு நடக்கலாம். முடிஞ்சா பறக்கலாம். பறவைகள் எல்லாம் இறக்கை முளைச்ச மனுஷங்கன்னு புரிஞ்சுக் கலாம். நாமும் பறவையாகலாம்!

- ரா.கண்ணன்
படம்: கே.ராஜசேகரன்