புயல் எந்தத் திசையில் கடலைக் கடக்கப்போகிறது என்பதை கண்டுபிடித்துவிட முடிகிறது. எரிமலை எப்போது வெடிக்கும் என்றுகூட எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், பதின்வயதில் உள்ள பையனோ... பெண்ணோ என்ன நினைக்கிறார்கள்? ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை எந்த அறிவாளியாலும் கண்டுபிடிக்க முடியாது. தரையில் வீழ்ந்த பாதரசத்தைக் கையில் அள்ள முயற்சித்தால், அது எப்படி நழுவி ஓடிக்கொண்டே இருக்குமோ, அத்தகைய மனது பதின்வயதில் உருவாக ஆரம்பிக்கிறது.
அந்த வயதை, கண்ணாடி பார்க்கும் காலம் என்றே சொல்வேன். முன் எப்போதையும்விட பதின்வயதில்தான் ஆணும் பெண்ணும் அதிகம் கண்ணாடி பார்ப்பதும் தனது நிறைகுறைகளைப்பற்றியே தொடர்ந்து யோசிப்பதுமாக இருக்கிறார்கள். திடீரெனத் தன்னைப் பிடிக்காமல் போய்விடுகிறது. தீவிரமாகக் கவலைப்படுவதும் அழுவதுமாக இருக்கிறார்கள். நினைத்தாற்போலத் தன்னை அழகுபடுத்திக்கொள்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.
குண்டாகிவிடுவேன். அழகாக இல்லாவிட்டால் மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்று சாப்பாட்டை வெறுக்கத் துவங்குகிறார்கள். நண்பர்கள் மட்டுமே உலகமாகத் தோன்றுகிறது. அடுத்த சில நாட்களிலே நண்பர்களைப் பிடிக்காமல் போய்விடுகிறது. கடிகாரத்தின் பெண்டுலம்கூட சீராகத்தான் இடவலமாக ஆடுகிறது. ஆனால், பருவ வயதின் மனதோ தீர்மானிக்க முடியாத வேகத்தில் ஊசலாடுகிறது.
நேற்று வரை பிடித்தமானதாக இருந்த வீடும், அப்பாவும், அம்மாவும், அண்ணன், தங்கைகளும் வேற்று மனிதர்கள்போலத் தெரியத் துவங்குகிறார்கள். மீசை முளைக்கத் துவங்கிய பையனும் பருவம் எய்திய பெண்ணும் உடலை அப்போதுதான் உற்று நோக்குகிறார்கள். அதுவரை வெறும் காகிதம்போல் இருந்த உடல், அந்த வயதில் கட்டுப்பாடு இல்லாமல் அலைவுறுகிறது. உடலின் ரகசியக் கதவுகள் திறந்துகொள்கின்றன. அதன் வழியே கனவுகள் ஊற்றுபோலப் பெருகுகின்றன. தனக்குத்தானே சிரித்துக்கொள்ளவும், தன்னைத்தானே திட்டிக்கொள்ளவும் ஆசைப்படும் அந்த வயதின் ஒரே குறை, தன்னை யாருமே புரிந்துகொள்வது இல்லை என்பதே!
15 வயதில் மகளோ, மகனோ உள்ள பெற்றோர் அவர்களைப்பற்றிய புகார்களை, கவலைகளை, வியப்பை நிறையச் சொல்கிறார்கள். அதைக் கேட்கையில் எல்லாக் காலத்திலும் வயதின் தடுமாற்றங்கள், குழப்பங்கள் ஒன்றுபோலவே இருப்பதை உணர முடிகிறது. புத்தர் மூன்று காட்சிகளால் தூண்டப்பட்டு தன் அரண்மனையில் இருந்து வெளியேறித் துறவு மேற்கொண்டார் என்பார்கள். பதின் வயதினரைப்பற்றிய இந்த மூன்று காட்சிகள் ஓர் எளிய உண்மையை நமக்குப் புரியவைக்கின்றன.
முதல் காட்சி...
பள்ளி இறுதி ஆண்டில் படிக்கும் 15 வயதான நிஷா ஒருநாள் காலை வகுப்புக்குப் போகாமல் படுத்துக்கிடக்கிறாள். வேலைக்குச் செல்லும் அவளது அம்மா, 'என்னடி ஆச்சு... உடம்புக்கு முடியலையா?' என்று அக்கறையாகக் கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டாள். மகளிடம் பதிலே இல்லை. நிஷா காலையில் எழுந்ததில் இருந்து காபி குடிக்கவில்லை. குளிக்கவில்லை, சாப்பிடவில்லை. படுக்கையிலேயே கிடக்கிறாள். யார், எது கேட்டாலும் கோபப்படுகிறாள். அவளுக்கான காலை உணவு, மதிய உணவு அத்தனையும் உணவு மேஜையில் எடுத்துவைத்துவிட்டு, |