ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு சந்தோஷத்தைத் தருகிறது. ஆனால், பெற்றோர்களுக்குக் கல்வி குறித்து புதிய பிரச்னைகளையும் நெருக்கடிகளையுமே உருவாக்குகிறது. இன்று, பெரும்பான்மையான பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களை அற்பப் புழுக்களைப்போல நடத்துகின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன். ஆட்டோ ஓட்டுநர் தன் ஆற்றாமை தாங்க முடியாமல் புலம்பியபடியே வந்தார். என்ன விஷயம் என்று கேட்டபோது, தன் இரண்டு பிள்ளைகளை மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கவைப்பதாகவும் அந்தப் பள்ளி நிர்வாகம் தன்னை மிகக் கேவலமாக நடத்துவதாகவும் சொன்னார். எதற்காக அப்படி நடத்துகிறார்கள் என்று கேட்டேன்.
இப்போதுதான் பள்ளி முடிந்து விடுமுறை ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், ஒரு வாரத்துக்குள் அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை முழுமையாகக் கட்டிவிட வேண்டும். பள்ளியில் மட்டுமே யூனிஃபார்ம், நோட்டு, புத்தகங்கள் வாங்க வேண்டும். அவர்கள் சொல்லும் கடையில் போய்த்தான் ஷூ வாங்க வேண்டும். இப்படி ஆயிரம் கெடுபிடிகள். மிரட்டல்கள். கேள்வி கேட்க முடியாது. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டாலோ, அல்லது ஏன் இவ்வளவு கட்டணம் என்று கேட்டாலோ, பிள்ளையை வேறு பள்ளிக்கு மாற்றிக்கொண்டு போ என்று கோபப்படுகிறார்கள். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் கூட்டினால் கோபப்படும் மக்கள், ஒரு குயர் நோட்டின் விலை 60 ரூபாய், யூனிஃபார்ம் தைக்க 2,000 ரூபாய், ஓர் அடையாள அட்டைக்கு 350 ரூபாய் என்று பள்ளி நிர்வாகம் கேட்கும்போது, வாயைப் பொத்திக்கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு வருகிறார்கள். அது ஏன் என்றுதான் புரியவே இல்லை.
ஏன் இப்படிக் கொள்ளை அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, என்னை படிக்காத முட்டாள் என்று திட்டி அனுப்பிவிட்டார்கள். பிள்ளைகளை அடுத்த பள்ளியில் சேர்ப்பது என்பது இன்னும் மோசமான அனுபவம். இதைப்பற்றி புகார் செய்வது என்றால்கூட அதே பள்ளி நிர்வாகத்தில்தான் செய்ய வேண்டும். அவர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? என்ன செய்வது என்றே தெரியவில்லை? பிள்ளைகளுக்காக இந்த அவமானங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று வேதனைப்பட்டார்.
இது, யாரோ ஒரு ஆட்டோ ஓட்டுநரின் ஆதங்கம் மட்டுமில்லை; பெரும்பான்மை பெற்றோர்களின் மனநிலை இதுதான். கல்வித் துறையைப் பெரும் வணிகமாக்கிவிட்டோம். கல்வி அடிப்படை உரிமையாகிவிட்டது என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அதே சூழலில், சிறுவர் சீர்திருத்த நிலையங்கள்போலப் பள்ளிகள் உருமாறிவிட்டதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்.
எதற்காக என்று எந்த விளக்கமும் இல்லாமல் ஆயிரக்கணக்கில் பள்ளி பணம் கேட்கிறது. தையல் கடை, செருப்புக் கடை, துணிக் கடை, டை, பெல்ட், அடையாள அட்டை, நோட்டு, புத்தக வெளியீட்டாளர்கள் என்று எல்லாரோடும் ஓர் உள் ஒப்பந்தம் செய்துகொண்டு, கமிஷன் ஏஜென்ட்டுகள்போலச் செயல்படுகிறார்கள்.
கட்டணத் தொகையை விசாரிக்க வரும் ஆங்கிலம் அறியாத பெற்றோர்கள் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள். நீதிமன்றத்தில் நிற்கும் குற்றவாளியைவிடவும் கூனிக் குறுகி, பள்ளி அலுவலகம் முன்பாகப் பெற்றோர்கள் பணம் கட்டத் தவணை கேட்டுத் தயங்கி நிற்கிறார்கள். நிர்வாகம் தயவுதாட்சண்யம் எதுவும் இன்றி அவர்களைக் கொச்சையாகத் திட்டுகிறது. வெளியேற்றி அனுப்புகிறது. பள்ளி குறித்து புகார் செய்வதற்குப் பள்ளி நிர்வாகத்தைவிட்டால் வேறு வழி இருப்பது இல்லை.
|