ஒரு மனிதரோடு பழக ஆரம்பிப்பதற்கு முன், அவர் சரியான மனிதரா, நல்ல குணம் படைத்தவரா என்று அறிந்துகொள்ள முயல்வது ஆரோக்கியமானதுதான். ஆனால், 'இவர் இப்படித்தான் இருப்பார்' என்று முடிவு கட்டிக்கொண்டு பழக ஆரம்பிப்பது ஏமாற்றங்களையே தரும்.
பாகிஸ்தானில் இஜாஸ் அஹமது என்று ஒரு மூத்த பத்திரிக்கையாளர் இருக்கிறார். சர்வதேசச் செய்தியாளர்கள் மாநாட்டில் அவரைச் சந்தித்தேன். 'வணக்கம். நான் இந்தியாவில் இருந்து வருகிறேன்' என்று என்னை அறிமுகம் செய்துகொண்டபோது, ஏனோ அவர் என்னிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை.
பாகிஸ்தான்காரர்ளுக்கு நம் மீது விரோதம். அதுதான் நம்மிடம் அவர் சரியாகப் பேசவில்லை என்று எனக்குத் தோன்றியது. ஏனைய நாட்டு நண்பர்களிடம் நான் மிக நெருங்கினாலும், அவரிடம் மட்டும் அதன் பிறகு நான் பேசுவது இல்லை. அவரும் பெரும்பாலும் யாரிடமும் பேச மாட்டார். அவர் என் எதிரில் வந்தால்கூட நான் சிரிப்பது இல்லை... 'என் எதிரியைப் பார்த்து நான் ஏன் சிரிக்க வேண்டும்?'
அன்று வெளிநாட்டு விவகாரங்கள் குறித்த கூட்டம் இருந்தது, அந்த நிகழ்வுக்கு முன்னதாக இஜாஸ் என்னிடம் ஏதோ பேச வந்தார். இந்த முறை நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்... 'அப்பாடா, பழிக்குப்பழி வாங்கியாகிவிட்டது!'
கூட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் உறவுபற்றி பேசப்பட்டது. அப்போது நான் எழுந்தேன். 'நாங்களும் பாகிஸ்தானும் பங்காளிகள். காஷ்மீர் எங்கள் சொந்தப் பிரச்னை. அதில் ஏன் அன்னிய நாடுகள் தலையிட முயற்சிக்கிறீர்கள்?' என்று கேட்டேன். எனக்கு சில வரிசைகள் முன்பு அமர்ந்திருந்த இஜாஸ் உடனே எழுந்தார். சரிதான்... சண்டைக்கு வருகிறார் என்றே நினைத்தேன். அவர் மேடையில் நின்ற அதிகாரிகளிடம் (மேரே பாயி கோ ஜவாப் தோ) ''என் சகோதரனின் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்'' என்று என் சார்பாக வாதாட ஆரம்பித்தார். நான் நெகிழ்ந்துபோனேன். என்னை அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டார். அதன் பிறகு நிறையப் பேசினோம். எனக்கு இப்போது பாகிஸ்தானில் ஓர் அண்ணன் இருக்கிறார்.
நான் ஊருக்கு வருகிறபோது நிறையப் புத்தகங்கள் வாங்கிப் பரிசளித்தார். கடைசி நாள் வரை ஒருசகோதர னாகவே என்னை நடத்தினார். அடிப்படையில், இஜாஸ் அமைதியான மனிதர். பெரிய அறிவாளி.
ஆனால், அவர் பாகிஸ்தான்காரர், அதனால்தான் என்னை எதிரியாகப் பார்க்கிறார் என்ற எனது யூகமும், முன்கூட்டிய தவறான முடிவும் அவரை எதிரியாகப் பார்க்கவைத்தது. அவரிடம் நட்புகொள்ள வேண்டிய வாய்ப்பைத் தடுத்தது.
இப்படிக் கணிப்புகளின் அடிப்படையில் முடிவெடுக்கிற மனோபாவம் அதிகரித்ததன் விளைவுதான் இன்று கல்லூரிக்குள் மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்துகிடக்கிறார்கள். தனக்கு முன் அறிமுகமே இல்லாத ஒரு வாழ்க்கைமுறையை, அனுபவத்தை, பண்பாட்டை, வாழ்வியல் விழுமியங்களை வேறு ஒரு தளத்தில் இருந்து வருகிற ஒரு நண்பனே அறிமுகம் செய்துவைக்கிறான். முன்கூட்டியே நீங்கள் எடுத்த முடிவுகளின் அடிப்படையில் அவரை நீங்கள் புறக்கணித்தால், வாழ்க்கை உங்களைப் புறக்கணிக்கும்.
உயரமானவர்களே தலைவர்களாக இருக்க முடியும். ஆங்கிலம் பேசத் தெரிந்தவன் நாகரிகமானவன். சில குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுமே வர்த்தகம் கைகூடும். பெருநகரங்களுக்கு வந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். குடும்பத்தில் நிறையப் பேர்படித்து இருந்தால்தான் அடுத்தத் தலைமுறைக்கும் படிப்பு ஏறும் என்ற பல்வேறு யூகங்களும் கணிப்புகளும் எல்லா காலக்கட்டங்களிலும் தகர்க்கப்பட்டே வந்திருக்கின்றன.
அருகில் இருப்பவர் நல்லவரா, கெட்டவரா என்று ஆராயுங்கள் - இவர் இப்படித்தான் இருப்பார் என்று முன்கூட்டியே முடிவுக்கு வராதீர்கள்
கல்லூரியில் உங்கள் அருகில் அமர்ந்து இருக்கிறவனின் பின்னணி குறித்துக் கணக்கு போடுவதை, யூகிப்பதை நிறுத்திவிட்டு, பரந்த மனதோடு அவருடன் கை குலுக்குங்கள்... அது இந்தச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைக்கப்போவதற்கான ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்!
- ஒரு சிறிய இடைவேளை
|