இப்படி ஒருநாள் முழுவதும் அவரால் வெளியே வர முடியவில்லை. பதற்றம், பயம், நெருக்கடி என்று இரவு உறங்கக்கூட முடியவில்லை. மறுநாள் காலை அவர் தன் வீட்டின் கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே பார்க்கிறார். அற்புதமான சூரிய உதயம். இத்தனை நாள் அதைக் கண்டதே இல்லையே என்று பார்த்தபடியே இருக்கிறார். அதிகாலை நேரம் பறவைகள் வானில் கிழக்கே கூட்டமாகப் பறந்து செல்கின்றன. அதை ரசிக்கிறார். மாடியில் இருந்தபடியே அலுவலகம் போகிறவர்களை, மாணவர்களை ரசித்துப் பார்க்கிறார். திடீரெனத் தான் இதுவரை பார்க்காத உலகம் ஒன்றைப் பார்ப்பதுபோல் இருக்கிறது.
தான் இத்தனை நாட்கள் எவரோடும் இணக்கமாக இல்லை. எவருடனும் நட்பாகப் பழகவில்லை என்பது புரிகிறது. அதைவிடத் தன் வீட்டை உறங்கவும், சாப்பிடவும் மட்டுமே பயன்படுத்தியது புரிகிறது. மறுநாள் அவருக்கு உதவி கிடைக்கிறது. கதவைத் திறந்து வெளியே வருகிறார். தனது அண்டை வீட்டார் துவங்கி, அத்தனை பேருக்கும் புன்னகையோடு வணக்கம் சொல்கிறார். அலுவலகத்தில் அவரது நடவடிக்கைகள் முழுமையாக மாறியிருக்கின்றன.
அவர் தன்னைச் சுற்றிய உலகம் சலிப்பாக இருந்ததற்குக் காரணம் தான்தான் என்று புரிந்துகொள்கிறார். அதன் பிறகு அவரது வாழ்வு மலர்ச்சிகொள்ளத் துவங்குகிறது. இந்தக் கதை சொல்லும் எளிய உண்மை, நாம் ஏதாவது பிரச்னை ஒன்றில் இருந்தே நம்மைப்பற்றி அறிந்துகொள்ளத் துவங்குகிறோம். மற்ற நேரங்களில் ஒருபோதும் நம்மை நாம் உணர்ந்துகொள்வதே இல்லை என்பதே!
இந்த மேலாளரை எந்த ஞானியும் வந்து அறிவுரை சொல்லி மாற்ற வில்லை. மாறாக, அவர் தன்னை அறிந்துகொள்வதற்குப் பூட்டிய கதவு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்தது. திறந்து வெளியேறுவதற்குள் அவர் தனது சிக்கல்களின் ஆணிவேரைத் தெரிந்துகொண்டுவிட்டார். நம்மில் பலரும் இதுபோன்று ஆயிரம் சிக்கல்கள் வந்தபோதும் பிரச்னை யைப் பெரிதாக்க முயல்கிறோமே அன்றி, அதைப் புரிந்துகொள்வதே இல்லை.
இத்தாலியின் மிக முக்கிய இயக்குநரான பெலினியின் 'லாஸ்ட்ரடா', ஊர் ஊராகச் சென்று வித்தை காட்டுபவர்கள் உலகைச் சித்திரிக்கும் அற்புதமான படம். ஆண்டனி குயின் படத்தின் கதாநாயகன். படத்தில் அவனது பெயர் ஜம்பானோ. அவன் இரும்புச் சங்கிலியைத் தன்மார் பில் கட்டி மூச்சு பலத்தால் உடைத்துக் காட்டுபவன். அவனது மனைவி இறந்துபோகவே, சிறிய கடற்கரை நகரம் ஒன்றில் வசிக்கும் அவளின் தங்கை ஜெல்சோமினா என்ற அப்பாவி இளம்பெண்ணைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போகிறான்.
ஜெல்சோமினா, ஓர் அப்பாவி. உலகம் அறியாப் பெண். அவளை ஜம்பானோ தனது முரட்டுத்தனத்தால் பயமுறுத்துகிறான். வன்புணர்ச்சி கொள்கிறான். அடித்து உதைத்து சர்க்கஸ் மிருகம்போலப் பழக்குகிறான். டிரம்பட் வாசிக்கப் பழகித் தருகிறான். வித்தை காட்டும் இடத்தில் சிறிய வேடிக்கை நிகழ்ச்சி செய்கிறாள் ஜெல்சோமினா. ஒருநாள் ஜம்பானோவின் அடி தாங்காமல் அவனைவிட்டுத் தப்பியோடி ஒரு நகரத்துக்கு வருகிறாள்.
அங்கே ஒரு வித்தையைக் காண்கிறாள். மிக உயரமான கட்டடம் ஒன்றில் கயிற்றில் நடக்கும் ஒருவன் வித்தை காட்டுகிறான். அவன் அந்தரத்தில் நடப்பதோடு, பாதிக் கயிற்றில் உட்கார்ந்துகொண்டு தனது இரவு உணவைச் சாப்பிடுகிறான். அதை ஊரே திரண்டு பார்த்து ஆச்சர்யம் அடைகிறது. அவனை ஜெல்சோமினாவும் வியந்து கை தட்டுகிறாள்.
அவன் தன்னோடு வந்துவிடும்படி அவளை அழைக்கிறான். அவள் தயங்குகிறாள். இதற்குள் அவளைத் தேடி வந்த ஜம்பானோ, அவளை அடித்து இழுத்துப் போகிறான்.
|