என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

கை கொடுக்கும் கை!

கை கொடுக்கும் கை!

அம்பானி ரிட்டர்ன்!

##~##

''நீளத்து வாழப் பழம் நீலாவதி கொய்யாப் பழம்

கலாவதி வாழப் பழம் கலைவாணி கொய்யாப் பழம்

பாத்தாலும் ஒரு ரூபா, கேட்டாலும் ரெண்டு ரூபா,

தொட்டாலும் மூணு ரூபா!'' - என்று வார்த்தைகளால் கபடி ஆடி,  ராகம் போட்டு பாடிச் செல்லும் ராஜாராமனை, சென்னையில் வடபழனி, சாலிகிராமம், எம்.ஜி.ஆர். நகர் ஏரியாக்களில் பார்த்து இருக்கலாம்!

கை கொடுக்கும் கை!

''இங்க இருந்து செஞ்சிக்கு போற பஸ் ஏறினீங்கன்னா... அப்பம்பட்டு, பாலப்பட்டுனு நிறைய ஸ்டாப்பிங் வரும். அதுல பாலப்பட்டுதான் என் ஊரு. 16 வயசுல மெட்ராஸ் வந்தேன். இப்ப 48. வந்த புதுசுல ட்ரிப்ளிகேன்ல வாழப் பழம் வித்துக்கினு இருந்தேன். அப்பப்ப சொந்த ஊருக்குப் போவேன். சம்சாரம், ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு இருக்காங்க. கஷ்டம் தாங்காம ஊராண்ட இருந்த ரெண்டு ஏக்கர் நிலத்தை, வந்த காசுக்கு வித்துப்புட்டேன். பொண்ணை சூளைமேட்டுல இருக்குற மச்சானுக்கே கட்டிக்கொடுத்தேன்.

'ஏன் மாமா கெடந்து அல்லாடுற. கோயம்பேடு பக்கம் போ. பழம், காய்கறினு எதையாவது வாங்கி யாவாரம் பண்ணு’ன்னு அவன்தான் வழி காட்டிவிட்டான். அஞ்சு வருஷமா இதே ஏரியாவுலதான் பழ யாவாரம் பண்ணினுக்கீறேன். ஆரம்பத்துல யாவாரமே ஆவுலை. பாட்டுப் பாடி விக்க ஆரம்பிச்சதும் யாவாரம் பிச்சுக்கிச்சு. நெதமும் 500 ரூபா வரை கைல நிக்குது!

சூளைமேட்டுல சல்லிசா ஒரு எடம் வாங்கி வீட்டையும் கட்டிப்புட்டேனா பாத்துக்குங்க. சாலிகிராமம் ஏரியாவுல இருக்குற சினிமா ஆட்கள் பாட்டு பாடச் சொல்லி 100, 200-னு கைல திணிப்பாங்க. 'ஓசித் துட்டு வேணாம் சார். பழம் வாங்கினாத்தான் பணம் வாங்குவேன்’னு கறாரா நிப்பேன். ஏதோ வாழ்க்கை ஓடுது'' என்று அடுத்த பாடலுக்கு தொண்டையைச்  செருமுகிறார் ராஜாராமன்!

- ம.கா.செந்தில்குமார்
படம்: வி.செந்தில்குமார்

கை கொடுக்கும் கை!

கை கொடுக்கும் கை!

ள்ளங்கையும் விரல்களும் போனாலும் உள்ளத்தில் தில் இருப்பதால் கராத்தேயில் கலங்கடிக்கிறார் ஜெகதீசன். ''ப்ளஸ் டூ படிக்கும் போதே, கராத்தே பயிற்சியில் ஈடுபட்டேன். நாலு வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு வெடி விபத்தில் உள்ளங்கையோடு விரல்களும் பறிபோயிருச்சு. ஆனாலும், கவலைப்படலை. என் மாஸ்டர் நாகலிங்கத்தின் தூண்டுதலால், பல்வேறு பயிற்சிகளுக்குப் பிறகு கராத்தேயில் ப்ளாக் பெல்ட் வாங்கினேன். மும்பை ஆல் இந்தியா கராத்தே போட்டியில் 55-60 கிலோ பிரிவில் இரண்டாம் இடம் ஜெயிச்சேன். போன வருஷம்  அம்பத்தூர் ஆல் இந்தியா கராத்தே போட்டியில் ஸ்பேரிங் பிரிவில் முதல் இடம். நிச்சயமா இன்னும் சாதிப்பேன்!'' என்று சொல்லும் ஜெகதீசன் தற்போது ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறார். வேலை இல்லாத நேரத்தில் ஏழை மாணவர்களுக்கு கராத்தே கற்றுக்கொடுக்கிறார்.

இதுதான் பாஸு நாலு பேருக்கு கை கொடுக்கணும்கிறது!

- ந.தினேஷ்
படம்: ச.இரா.ஸ்ரீதர்

துளசியின் தும்பைப் பூ தமிழ்!

கை கொடுக்கும் கை!

''வணக்கம் தோழர்...'' - தூய தமிழில் ஆரம்பிக்கும் துளசி யின் உரையாடலில் தமிழ்ப் பண்டிதர்கள்கூட பயன்படுத்தாத பதங்களைக் கேட்கலாம். சென்னையில் சமையல் ஒப்பந்ததாரர் ஆக உள்ள துளசி, கடந்த 10 ஆண்டுகளாக இப்படித்தான் தூய தமிழில் உரையாடுகிறார்.  

''நான் படித்தது எல்லாமே ஆங்கில வழியில்தான் தோழர். ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நிறைநிலைப் (மெட்ரிக்) பள்ளிகளில் கழிந்த கல்வி, இளங்கலை வணிகவியலி லும் ஆங்கில வழியில்தான் சென்றது. ஆனாலும், எனக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் மேல் மிகுந்த ஈடுபாடு. 12-ம் வகுப்பில் என் மனமொத்த நண்பர்கள் 'தென் சென்னை செய்திகள்’ என்ற இலவச இதழைத் துவங்கினார்கள். நான் அதில் நிருபர் ஆகச் சேர்ந்தேன்.

அப்போதுதான், 'நமக்கு பிழைப்புத் தருவது தமிழாக இருக்கும்போது, நாம் ஏன் தமிழைக் கலப்புடன் பேசுகிறோம்?’ என்று யோசித்தேன். அன்று முதல்  தூய தமிழிலேயே பேசத் துவங்கினேன். ஆரம்பத்தில் மிகவும் கடினமாகத்தான் இருந்தது. நல்ல தமிழ்ப் புத்தகங்களைப் வாசிக்கத் துவங்கினேன். புதிய ஆங்கில வார்த்தைகள் பிரபலமாகும்போது, அவற்றின் தமிழாக் கத்தை உடனுக்குடன் கண்டுபிடிக்க ஆரம்பித்தேன். 'செல்போன் டவருக்கு தமிழில் என்ன?’ என்ற கேள்விக்கு, என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. பல நாள் தேடி 'கைபேசிக் கூம்பு’ என்று  கண்டுபிடித்தேன்'' எனச் சொல்லும் துளசி, குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்கொண்ட பட்டிய லைத் தொகுத்து சீக்கிரமே புத்தக வடிவில் வெளியிட இருக்கி றார்.

தூள் கிளப்புங்க துளசி!

- இரா.மன்னர் மன்னன்
படம்: ச.இரா.ஸ்ரீதர்