என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

அம்மாவுக்கு பிடிச்ச அம்மா!

அம்மாவுக்கு பிடிச்ச அம்மா!

##~##
''வே
ணும்கிறதைக் கேட்டு வாங்கிச் சாப்புடு கண்ணு. சாம்பார், வத்தக் கொழம்பு இருக்கு. அந்த மகராசி ஆட்சிக்கு வந்துட்டா, கோழிக் கொழம்புவெச்சி அசத்திப்புடலாம்!'' - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டை நோக்கி கையெடுத்துக் கும்பிடுகிறார் சரஸ்வதி அம்மாள். போயஸ் கார்டனில், ஜெயலலிதா வீடு இருக்கும் தெருவில் கடந்த 20 வருடங்களாக சாப்பாட்டுக் கடை வைத்திருப்பவர்.

''எனக்கு கோயம்புத்தூர் பக்கத்துல தொண்டா முத்தூர். 1970-ல கல்யாணங் கட்டுன மறுநாளே வூட்டுக்காரரோட மெட்ராஸுக்கு வந்துட்டேன். இங்கேதான் ஸ்டெல்லா மேரீஸ் பின்னால முத்தையா முதலி தெருவுல வீடு. சின்னதா ஒரு டீக்கடை வெச்சிருந்தோம். அடுத்தடுத்து பொறந்த மூணும் பொம்பளைப் புள்ளைங்க. அந்தச் சமயத்துலதான் எங்க ஜெயலலிதா அம்மா, மகராசி மொத தடவை ஆட்சிக்கு வந்தாங்க. பேருக்கு ஏத்த மாதிரியே அவங்க வீட்டுப் பக்கம் கூட்டம் 'ஜேஜே’ன்னு அம்மும். அம்மா வீட்டுக்கு முன்னால இருக்குற சின்ன சந்துல டிபன், நொறுக்குத் தீனிகளை எடுத்து வந்து விக்க ஆரம்பிச்சோம்.

அம்மாவுக்கு பிடிச்ச அம்மா!

அம்மா வீட்டைவிட்டுக் கிளம்பி வெளியே போகும்போதும், வீட்டுக்குத் திரும்பும்போதும் கையெடுத்துக் கும்பிடுவேன். அவ்வளவு அழகா, சந்தோஷமா சிரிச்சு பதிலுக்கு வணக்கம் சொல்வாங்க. எனக்கு அன்னிக்கி பூரா சந்தோஷமா இருக்கும்.

என் வீட்டுக்காரரு மாரடைப்பால தவறிப் போன பிறவு, மூணு பொண்ணுங்களை வெச்சுக்கிட்டுத் தனி மரமா நின்னேன். 'அந்த தைரிய லட்சுமியைத் தினம் தினம் பார்த்தாலே மனசுக்குள்ள அவ்வளவு தைரியம் பொங்கும்’. அம்மாவை மனசுல நினைச்சுக்கிட்டேன். மூணு புள்ளைங்களையும் பட்டப் படிப்பு படிக்க வெச்சேன். எல்லாத்துக்கும் அந்த பாக்கியவதி தான் காரணம்!'' - மீண்டும் ஜெ. வீட்டை நோக்கி வணங்கிவிட்டுத் தொடர்கிறார்.

''96 எலெக்ஷன்ல அம்மா வாபஸ் ஆகவும், 'சர்ர்... புர்ர்’னு கார்ப்பரேஷன் ஆளுங்க வருவாங்க. சாப்பாட்டுப் பாத்திரங்களை அப்படியே கொத்தாத் தூக்கிப் போட்டுக்கிட்டுப் போயிடுவாங்க. அதனால, அம்மா வீட்டுக்குப் பக்கத்துல வெச்சிருந்த கடையைத் தூரமா தெரு முனையில் வெச்சேன்.  

மறுபடியும் அம்மா எலெக்ஷன்ல ஜெயிச் சாங்க. ஆனா, ஏதேதோ கேஸ்னு சொல்லி, அம்மாவை முதலமைச்சர் ஸீட்ல உக்காரவிடாமப் பண்ணிட்டாங்க. அன்னிக்கு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. என்னை அறியாமலே அம்மா வீட்டு முன்னால தெருவுல உருண்டு புரண்டு கதறி அழுதேன்.

அம்மா கேஸ்ல ஜெயிச்சு திரும்ப முதல்வரானாங்க. கோட்டைக்குப் போனதும், 'அந்த கோயம்புத்தூர் அம்மா எங்க இருந்தாலும் அழைச்சுட்டு வந்து, ஏற்கெனவே அவங்க கடை போட்டிருந்த இடத்துலயே கடை வைக்கச் சொல்லுங்க’னு அதிகாரிங்ககிட்ட சொன்னாங் களாம். அப்ப முத்துக்கருப்பன் ஐயாதான் போலீஸ் ஆபீஸரு. நாலஞ்சு போலீஸ் சாருங்களை விட்டு, என்னைத் தேடோ தேடோன்னு தேடிக் கண்டுபிடிச்சு, சாப்பாட்டுப் பாத்திரங்களை ஜீப்புல எடுத்துவெச்சு, நான் ஏற்கெனவே கடை வெச்சிருந்த இடத்துலயே மரியாதையோடு இறக்கிவிட்டாங்க. எனக்குன்னா... சந்தோஷம் தாங்கலை.

அம்மாவுக்கு பிடிச்ச அம்மா!

ஒருநாள் அம்மாவைப் பார்க்கப் போனேன். என்னைப் பார்த்ததும் என் ரெண்டு கையையும் சேர்த்து ஆறுதலாப் பிடிச்சுக்கிட்டு, 'நல்லா இருக்கீங்களா? என்ன வேணும் சொல்லுங்க’ன்னு விசாரிச்சாங்க. பாரு கண்ணு... இப்ப அதைச் சொல்றப்பவும் என் உடம்புலாம் சிலிர்க்குது. 'இல்லம்மா... எனக்கு எதுவும் வேணாம். நீங்க நல்லா இருந்தா, அதுவே போதும்’னு சொன் னேன். என் குடும்பம் பத்திலாம் விசாரிச்சாங்க. ரெண்டாவது பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சிருக்கேன்னு சொன்னதும், ஒரு பெரிய தொகையைக் கையில கொடுத்தாங்க. எனக்கு மூச்சே நின்னுடும்போல இருந்தது!

போன பிப்ரவரி மாசம் எனக்கு முதுகுல கட்டி வந்து ஆபரேஷன் நடந்துச்சு. கேள்விப்பட்டதும் அம்மா என்னைக் கூப்பிட்டு அனுப்பி, மறுபடியும் ஒரு தொகை கொடுத்தாங்க. அப்ப அம்மாகிட்ட ஒரே ஒரு விஷயம் மட்டும் சொன்னேன். 'அம்மா, இந்த சிறுக்கி இங்கதான் கிடக்குறேன். என்னை நீங்க எப்ப வேணும்னாலும் பாக்கலாம்மா. வெளியூர்ல இருந்து தொண்டர்கள் வந்தா மட்டும், கண்டிப்பா சந்திச்சுடுங்கம்மா’ன்னேன். சிரிச்சாங்க. பிறகு, அவங்க வைத்தியம் பார்த்துக்குற டாக்டர் சசிக்குமார்கிட்ட சொல்லி, எனக்கு வைத்தியம் பார்க்கவெச்சாங்க. எனக்கு இவ்வளவு செய்யணும்னு அவங்களுக்கு எதுவும் தேவையா கண்ணு? மகராசி இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு நல்லா இருக்கணும்யா!

அன்னத்தை அள்ளி அள்ளிப் போடுற இந்தக் கையால சத்தியம் பண்ணிச் சொல்றேன் கண்ணு, அடுத்தது எங்க அம்மா ஆட்சிதான். அவங்க ஏதோ எனக்கு உதவி பண்றாங்கன்னு இதை நான் சொல்லலை. ஊர் உலகமே இதைத்தான் சொல்லுது!

அவங்க மட்டும் இல்லைன்னா, இந்நேரம் நான் செத்த இடத்துல புல்லு முளைச்சிருக்கும். அந்த மகராசி நல்லா இருக்கணும். நான் அந்த ஆண்டவன்கிட்ட நெதமும் இதைத்தான் வேண்டிக்கிறேன்!'' என்கிறபோதே கோயம்புத்தூர் அம்மாவுக்கு குபுக்கெனப் பொங்குகிறது கண்ணீர்!

- ம.கா.செந்தில்குமார்
படங்கள்: வீ.நாகமணி