என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் ஊர்!

சென்னை... பெண்ணை... என்னை!ரா.பார்த்திபன்

##~##
''ஒ
ரு பெண்ணை நான் பார்த்ததும்... அந்தப் பெண் என்னைப் பார்த்ததும்போலவே, சென்னை என்னைப் பார்த்ததும்... நான் சென்னையைப் பார்த்ததும்!

 எதிர் பால் ஈர்ப்பால் டீன்-ஏஜ் முதல் கால் ஏஜ் வரை (அதாவது 25. நான் 100 வரை வாழ்வேனாக்கும்!) அழகான பெண்கள் கடக்கும்போது நான் பார்த்தால், அவர்களை என்னை T-சட்டை கூட செய்ய மாட்டார்கள். 'புதிய பாதை’ வெளியான பிறகு என்னைப் பார்த்த பெண்களைக்கூட நான் வெளிப்படையாகப் பார்க்க முடிந்தது இல்லை. நம்மைக் கவனிக்கிறார்கள் என்ற தித்திப்பில் ஓரக் கண்களும், ஈர இதயமும் வழியும். அம்புடுதேன்!

என் ஊர்!

இதே அலைவரிசையில்தான் சென்னையின் தொடர்பும் எனக்கு.

ஒரு கார்ப்பரேஷன் குப்பை லாரியைப்போல சென்னையின் எல்லாப் பகுதிகளிலும் நான் குப்பை கொட்டி இருக்கிறேனே தவிர... எந்தத் தொகுதியும் என்னை வரவேற்றது இல்லை. பு.பாக்குப் பிறகு சென்(னை)ற இடமெல்லாம் எனக்குச் சிறப்பு. ஆனால், என்னால் பழையபடி கால்நடையாக புதிய சென்னையில் சுவடு பதிக்க முடிந்தது இல்லை (செம்மொழிப் பூங்காவில்கூட இன்னும் கண்ணார நடக்கவில்லை.). நான் நான்காம் வகுப்பு வரை எல்லீஸ் சாலையில் உள்ள ஒரு கார்ப்பரேஷன் பள்ளிகொண்டேன். அதே சாலையில் ஒரு மான்டிசோரி பள்ளியில் 5-ஆம் வகுப்பு சேர்ந்து A,B,C&D என்ற நான்கெழுத்தைக் கற்றுக்கொண்டேன். E,F,G,H எல்லாம் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில்தான். பெரிதாய் ஊர் சுற்றிப் புராணம் எதுவும் எனக்கு இல்லை. 'குணா’ கமல்போல அறைக்குள்ளேயே அபிராமி, அபிராமிதான். அப்படிப் பொத்தி பொத்தி வளர்த்தார்கள் என் அம்மா. மிஞ்சிப் போனால், பாலர் அரங்கம் (கலைவாணர் அரங்கம்). 12/25 பைசா டிக்கெட்டுகள்.

என் ஊர்!

ராஜாஜி ஹால் அருகில் தான்தோன்றிப் பிள்ளையார் முளைத்ததில் இருந்து அங்கு சென்று தோப்புக்கரணம் போட்டு இருக்கிறேன். இப்போதுகூட 100 அடி சாலையில் 50 அடியை அடைத்துக் கொண்டு செங்குத்தாக நிற்கும் இரும்புத் தண்டவாளங்களைப் பார்க்கும்போதெல்லாம் என் நினைவு ரயில் பின்னோக்கிச் செல்லும். பீச் ஸ்டேஷனில் உள்ள CTO-வில் (Central telegraph office) அப்பா கிளார்க்காகப் பணியாற்றியபோது, அவருடன் அந்த மின் புழுவில் ஊர்ந்து சென் றது பசுமையாய்... இன்றும் அப்படிப் பயணிக்கக் கூடுதல் விருப்பம்!

சென்னையில் ஏழைகளுக்கான இலவச சுற்றுலாத் தலம்... பீச்சாங்கரை மட்டுந்தான். டாக்ஸி, பஸ், கால்நடை இப்படி வசதிக்கு ஏற்ப சென்று இருக்கி றோம். அதே கடற்கரையில் பிற்காலத்தில் அந்தக் கடலைவிட பெரிய சோகத்தில் நான் மூழ்கியபடி கரை ஒதுங்கியும் இருக்கிறேன். இப்போதும் ஆயிரம் பிரச்னை இருந்தாலும் ஒவ்வொரு காலிலும் 5,000 ஷூ அணிந்து மெரினாவில் வேக நடை போடுகிறேன். (வாழ்வில் வெற்றி நடை போட ஆரோக்கியம் அவசியம்!) 4.30 to 6 AMல்! சென்னைவாசிகளே, தயவு செய்து அந்த அற்புத அனுபவத்தை மிஸ் செய்யாதீர்கள். துணை எல்லாம் தேவை இல்லை. குளிர் தென்றல் கூட வரும். யார் சொன்னாலும் எதையும் காதில் போட்டுக்கொள்ளாதீர்கள், ஒரு ஐ-பாட் தவிர. ராஜாவோ, ரஹ்மானோ, யுவனோ இதயத்துக்கு இசையளப்பார்கள்.

கேசரி பவுடரைப் போட்டு சரியாகக் கிண்டாததைப்போல வானம் நிறம் மாறும் அழகில் கண்கள் துள்ளும். சித்ரா, சாந்தி, தேவி, ராஜகுமாரி, கமலா - இவை நான் சைட் அடித்த பெண் களின் பெயர்கள் அல்ல; குறைந்த செலவில் நான் சினிமா கற்றுக்கொண்ட திரைப்பட நகரங்கள். 'கூவத்தில் படகோட்டிய தமிழனாக நான் இருந்திருக்கக் கூடாதா?’ என்ற ஆதங்கம் மதராஸ பட்டினத்தைப் புகைப்படங்களில் பார்க்கும்போதெல்லாம் ஸ்டில் எனக்கு ஏற்படுவது உண்டு.

அடக்க முடியாத அழுகையுடன் அப்பாவைச் சந்தித்த அடையாறு (செ.20) புற்றுநோய் மருத்துவமனையும், அப்பாவை மனதில் அடக்கம் செய்து விட்டு, உடலை எரியூட்டிவிட்டு வந்த அரும்பாக்கம் மயானமும் என் இதயத் தில் இரண்டு அடைப்புகள்.

இஸபெல்லா ஆஸ்பத்திரி... (செ.4) குழந்தைகள் என்ற குதூகலம் பிறந்த பால் வீதி. சர்ச் பார்க் கான்வென்ட்டில் இருந்து இன்று என் மகர் (மகன் ராக்கி வளர்ந்துவிட்டார்) படிக்கும் லேடி ஆண்டாளும், கீர்த்தனா பயிலும் லயோலா கல்லூரியும் நான் சுமந்து செல்லும் புத்தகச் சாலைகள்.

ஆழ்வார் திருநகர் (செ.87) நான் முதன்முதலில் வாங்கிய பங்களா ஒரு 12 வருட... வருட வருட இதமாய் இல்லாமல், இதயமாய் கிழிந்து ரத்தமாய் வடியும் உயர்தர வாழ்க்கையும் உயரழுத்த வேதனையும் கலந்த அனுபவம்.

என் ஊர்!

சென்னைக்குள் கே.கே.நகர் இருப்பதாக மாநகராட்சி சொல்லும். ஆனால், கே.கே.நகர் கோயில் நோக்கு குடியிருப் புக்குள்தான் சென்னை மட்டுமல்ல; என் முழு உலகமே இன்று இயங்குகிறது.

ரஹ்மானின் ஆஸ்கர் வளர்ச்சியாய், சூர்யாவின் ஹிந்திய வளர்ச்சியாய் சென்னையும் அதீத வளர்ச்சி அடைந்து உள்ளது. அதற்குப் பாலமாகவும் பக்க பலமாகவும் இருக்கும் துணை முதல் வரும், ஊர் 'மேயரா’க சுற்று சுற்றி வந்து சோறு போடும்(!) (சுத்தம்தானே சோறு போடும்) திரு.மா.சுப்ரமணியன் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

மாசு மரு இல்லாத, வன்முறை இல்லாத, சாலை விபத்துகள் இல்லாத பசுமைக்கு அர்த்தம் அளிப்பதாக சிங்காரிக்க வேண்டிய பொறுப்பு சென்னைவாசிகளுக்கு உள்ளது.

நான் சென்னை வாசி மட்டுமல்ல
சென்னை நேசி
என்னை நேசிப்பதைப்போல!'