இரண்டாவது முக்கியமான விஷயம், பரீட்சை முடிந்த பிறகு, அது குறித்து விவாதிப்பது. இந்த விவாதம் உங்கள் அடுத்த தேர்வைப் பாதிக்கலாம். பரீட்சை முடிந்தவுடன் நண்பர்களிடம் கைகுலுக்கிவிட்டு வீட்டுக்குக் கிளம்புங்கள். 'அவன் சொல்றதைப் பார்த்தா, 20 மார்க் கேள்விகள் என்னைவிட நல்லா எழுதி இருப்பான்போல இருக்கே. எனக்கு மார்க் குறைஞ்சிடுமோ?' என்று கணக்குப் போடாதீர்கள். அது உங்கள் அடுத்த தேர்வுக்கான தயாரிப்பைப் பாதிக்கும், பயமுறுத்தும்.
ஏற்கெனவே, இங்கு பரீட்சை என்பது தேவைக்கு அதிகமான பயமுறுத்தல்களோடுதான் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் கூடுதலாக அடுத்தவரோடு ஒப்பிட்டு உங்கள் மன அழுத்தத்தை அதிகரித்துக்கொள்ளாதீர்கள். இந்த ஒப்பீட்டு எண்ணம்தான் படிப்பைச் சுமையாக்கி, நிர்பந்தப் போட்டியாக மாற்றிவைத்து இருக்கிறது.
இங்கு ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சிறந்தவர்கள்தான். நீங்கள் உங்கள் பாணியில் திட்டமிட்டபடி படியுங்கள். ஆழமாகக் கவனித்துப் படிக்க வேண்டிய நேரத்தில், அவர் இதைப் படித்திருப்பாரா என்ற யோசனையை மனதுள் ஓடவிட்டுக்கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் படிப்பதும், நல்ல மார்க் எடுப்பதும்... உங்கள் இலக்குகளையும் ஆசைகளையும் எட்ட முனைவதும் உங்களுக்காகத்தான், உங்கள் வெற்றிக்காகத்தான். யாரையோ தோற்கடிப்பதற்காக அல்ல!
அந்த நோக்கத்தில் பரீட்சையை அணுகுகிறபோது நிர்ப்பந்திக்கப்பட்ட மனோபாவமும், பதற்றமான சூழலும் தானாக உருவாகிவிடுகிறது. போட்டி போட்டுப் படியுங்கள். ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இந்தப் போட்டி அடுத்தவரைத் தோற்கடிப்பதற்காக அல்ல, உங்கள் வெற்றிக்காக!
இரண்டு பெண் நண்டுகள். நல்ல தோழிகள். ஆனால், இரண்டு பேரில் யார் சிறந்தவர் என்ற மனோபாவம் இருவருக்குமே உண்டு. அதில் ஒரு நண்டு அழகான, பலமான, திறமையான ஒரு ஆண் நண்டைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டது. தன் தோழியைவிடச் சிறப்பான ஒருவரைத் தேர்வுசெய்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது இன்னொரு நண்டின் ஆசை.
ஒருநாள் வித்தியாசமான ஒரு ஆண் நண்டை அது பார்த்தது. எல்லா நண்டுகளும் பக்கவாட்டில் நடந்தபோது, இந்த நண்டு மட்டும் நேராக நடந்தது... பெண் நண்டுக்கு மனதுக்குள் பெரிய சந்தோஷம். என் தோழியைவிட எனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்துவிட்டார். நேராக நடக்கும் நண்டு மாப்பிள்ளை யாருக்குக் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில், நேராக ஆண் நண்டிடம் போய், 'ஐ லவ் யூ' சொன்னது. ஆண் நண்டும் ஓ.கேசொல்ல... அடுத்த நாளே கல்யாணம்.
கல்யாணம் முடிந்த மறுநாள் பெண் நண்டு சோர்வாக உட்கார்ந்திருந்த சமயம், ஆண் நண்டை அழைத்தது. இப்போது புது மாப்பிள்ளை எல்லா நண்டுகளையும் போலவே பக்கவாட்டில் நடந்து வந்தார். பெண் நண்டுக்கு அதிர்ச்சி. 'இது நேராக நடக்கும் நண்டு. என் ஃப்ரெண்டின் கணவரைவிடச் சிறந்தவர் என்றுதானே திருமணம் செய்தோம். இப்போது பக்கவாட்டில் நடக்கிறதே' என்று பதற்றம்.
'நான் உங்களை முதலில் பார்த்தபோது அழகாக, நேராக நடந்தீர்களே, இப்போது ஏன் பக்கவாட்டில் நடக்கிறீர்கள்?' என்று கோபமாகக் கேட்டது பெண் நண்டு. ஆண் நண்டு சிரித்துக்கொண்டே சொன்னதாம்... ''அடி பைத்தியக்காரி... அன்னிக்கு நான் தண்ணியடிச்சுட்டு இருந்தேன். அதனால போதையில அப்படி நடந்தேன். நீ ஆசைப்படறதுக்காக நான் தினமும் தண்ணியடிச்சுட்டு நேராக நடக்க முடியுமா?''
பெண் நண்டுக்குப் பெரிய ஏமாற்றம். தன் தோழியை விடச் சிறப்பான திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால், குடிகார நண்டோடு குடும்பம் நடத்த வேண்டியது ஆயிற்று.
|