தாவணி லாவணி!
##~## |

''எல்லாரும் இப்படியே போட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுத்துட்டு இருந்தா எப்பு டிப்பா? யாராவது ஆரம்பிச்சுத்தானே ஆகணும்?'' என்று ரிப்பன் வெட்டித் தொடங்கிவைத்தார் சித்ரா. சைக்காலஜி மூன்றாம் ஆண்டு மாணவி. ''உளவியல் படிச்சா, இப்படித்தான் எதையாவது உளறத் தோணும். நீங்க எங்க படங்களை மட்டும் பெருசாப் போடுங்க சார். ஏன்னா, நாங்க அவ்வளவு அழகு!'' என்று அபிநயத் துடன் எட்டிப் பார்க்கிறார் திவ்யா.

''இவங்க பி.ஏ.நாட்டியா. அதாவது பரதம் படிக்கிறாங்க. அதனாலதான் இந்த எக்ஸ்ட்ரா ப்ளஸ் அபிநயம். இவங்களுக்குப் பிரச்னை கிடையாது. டான்ஸர்களுக்குன்னே பட்டு சாரி ரெடிமேடா விக்கிறாங்க. அப்படியே வாங்கி ஸ்டாப்ளர் போட்டுக்கிட்டு மேடை ஏற வேண்டியதுதான். 'தாவணி கட்டிட்டு வரணும்’னு ரூல்ஸ் போட்டா மட்டும்தான் ஹாஃப் சாரியில வருவாங்க. ஆனா, தாவணி எங்களுக்கு உணர்வுபூர்வமான உடை. தாவணி போட்டுக்கிட்டு நடந்தா, உலகமே ஒரு நிமிஷம் நம்மைத் திரும்பிப் பார்க்கிற மாதிரி ஃபீலிங்ஸா இருக்கும்!'' என்ற சைக்காலஜி சித்ராவை இடைமறிக்கிறார் நாட்டியா லாவண்யா. ''ஆமாமா... ஒபாமா... ஒசாமான்னு ஒலகமே இவங்க தாவணி போட்டுட்டுப் போற அழகைப் பாக்குதாக்கும்!'' சிரித்தார் பகபகவென.
''அதுல என்ன சந்தேகம்? தாவணியில வந்தா, ஒரு குடும்பக் குத்துவிளக்கு ஃபீல் கிடைக்குதா இல்லையானு நீங்களே சொல்லுங்க?'' என்று நம்மையும் ஆட்டத்துக்குள் இழுத்தார் சைக்காலஜி அனுஷியா. ''மத்த எந்த காஸ்ட்யூமை விடவும் ஹாஃப் சாரியில வர்ற பொண் ணுங்களைப் பார்த்துதான் பசங்க உருகுவானுங்க!'' என்று பாய்ஸ் பார்வை ரகசியம் சொல்கிறார் பி.காம். லக்ஷ்மி ப்ரியா.

''தாவணி என்பது டிரெடிஷனல் என்பது உண்மைதான். ஆனா பஸ்ல, ஆட்டோவுல போகும்போது... மத்தவங்க கண்ணெல்லாம் நம்மையே ஃபாலோ பண்ற மாதிரி தோணும். 'தாவணியில்தான் வரணும்’னு காலேஜ்ல சொல்லிட்டாங்கன்னா, வீட்ல இருந்து தாவணி எடுத்துட்டு வந்து இங்கே வந்து மாத்திப்போம். வீட்லயும் தாவணி கட்டிக்கோன்னு சொல்லி ஏகப்பட்ட பட்டுத் தாவணி எடுத்துக் கொடுத்திருக்காங்க. எல்லாமே பீரோவுல தூங்குது!'' என்று திவ்யா தன் தாவணி புராணம் குறித்து தாண்டியா ஆட மற்ற மாணவிகள் அனைவரும், ''ஓஒஓஹோ..!'' என்று கோரஸ் ராகம் வாசிக்கிறார்கள். ''தாவணியைப் பத்தி கேட்ச்சிங்கா ஒரு பஞ்ச் சொல்லுங்கப்பா!'' என்று நுழைந்தார் செண்பகவள்ளி. ''இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால், 'தாவணிதான் நம் குல வழக்க காஸ்ட்யூம். அதனால், அனைத்துக் கல்லூரிகளிலும் சீருடையாக தாவணி அறிவிக்கப்படுகிறது’ என அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும். அப்படி அறிவிக்கும் கட்சியினருக்குத்தான் ஜானகி கல்லூரி ஜான்சி ராணிகளின் வாக்குகள்னு எழுதுங்க சார்!''
குல தெய்வம் கோயில் திருவிழாவுக்குச் சென்று திரும்பிய திருப்தி நமக்கு!
- ம.கா.செந்தில்குமார், படங்கள்: உசேன்