கண்களை மூடிச் சில நிமிடங்கள் பேசாமல் இருங்கள் என்றால், தியானம் செய்ய விருப்பம் இல்லை என்றே பதில் வருகிறது. வாரத்தில் ஒருநாள் மௌன விரதம் இருப்பதற்குப் பழகினார் எனது நண்பர். சில வாரங்கள் மிகத் தடுமாற்றமாக இருந்தது. அதன் பிறகு, அதற்கு எளிமையாகப் பழகிவிட்டார். எப்படி இருக்கிறது உங்கள் வாய் மூடிய அனுபவம் என்று கேட்டதற்கு, மனதைத் துடைத்துச் சுத்தம் செய்வதுபோல் இருக்கிறது. ஒருநாள் அப்படி இருந்து பார்த்தால்தான் அதன் சுவை புரியும் என்றார்.
உணவை விலக்கி விரதம் இருப்பதுபோல, ஏன் சத்தத்தை விலக்கி ஒருநாள் மௌனமாக இருக்கக் கூடாது? நமக்கு நிசப்தம் என்பது வெறும் சொல் மட்டும்தானா? ஒரு மனிதன் ஒருநாளில் எத்தனை நிமிடங்கள் அமைதியை உணர்கிறான்.
நான் அறிந்தவரை சில நிமிடங்கள்கூட நிசப்தமாக இருப்பதற்கு மனிதர்கள் அச்சம்கொள்கிறார்கள். எங்காவது சத்தம் ஒடுங்கிப்போயிருந்தால், அங்கே போகவே பயப்படுகிறார்கள். இயற்கையான சூழலில் தங்கும்போது இரவில் காற்றின் ஓசை தவிர, வேறு சத்தம் இருப்பது இல்லை. ஆனால், அதைக் கண்டு நாம் அதிகம் பயப்படுகிறோம். பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும் என்று சத்தத்தை நாடி ஓடுகிறோம். ஏதேதோ சத்தங்களால் எப்போதுமே நம்மை நிரப்பிக்கொண்டே இருக்கிறோம். சத்தம் இல்லாமல் இருக்கப் பழகவே இல்லை.
மலைகள் நம் குரலைத்தான் எதிரொலிக்கின்றன. தனது குரலை அவை வெளிப்படுத்துவதே இல்லை. பல நூறு வருடங்கள் கண்ட மரம் தன் இருப்பைக் கத்திக் கூச்சலிட்டு வெளிக்காட்டிக்கொள்வது இல்லை. காற்றின் அசைவையே அது குரலாக்குகிறது. மிருகங்கள் உக்கிரம்கொள்ளும்போதோ, உற்சாகத்திலோதான் சத்தமிடுகின்றன. மற்ற நேரங்களில் நிசப்தமாகவே அலைகின்றன.
நமக்கு மட்டும் எதற்காக இவ்வளவு சத்தம், கூச்சல், தடித்த வார்த்தைகள், வாய்ச் சண்டைகள்? யோசித்துப்பாருங்கள்... ஒருநாள் நமது வாழ்வின் சகல காரியங்களில் இருந்தும் சத்தம் துண்டிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? வாகனங்கள் சாலையில் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால், இரைச்சல் இருக்காது. சமையல் நடக்கும். ஆனால், ஓசை இருக்காது. உதடுகள் அசையும். ஆனால், பேச்சு இருக்காது. மரங்கள் அசையும். ஆனால், சத்தமிடாது. தண்ணீர் நெருப்பு, யாவும் ஓசையின்றி இயங்கும். உலகம், மாபெரும் ஓவியம் ஒன்றைப்போலாகிவிடும். அதற்குள் நாம் பிரவேசித்து நடந்துகொண்டு இருப்போம்.
உண்மையில் நம்மைச் சத்தங்களே வழிநடத்துகின்றன. வாகனங்கள் எரிபொருளை நிரப்பிக்கொள்வதுபோன்று நாம் சத்தத்தால் நம்மை நிரப்பிக்கொள்கிறோம். செலவழிக்கிறோம்.
ஜப்பானில் ஒரு பௌத்தத் துறவி இருந்தார். அவர் ஃப்யூஜி எரிமலை அருகே உள்ள கிராமத்தில் தங்கியிருந்தார். அவரது தினசரி வேலை, நடந்து சென்று எரிமலை அருகே அமர்ந்து, அதைப் பார்த்துக்கொண்டே இருப்பது. அப்படி அதில் என்னதான் பார்க்கிறார் என்று அவரது சீடர்களுக்குப் புரியவில்லை. அவர்களும் அவரைப்போலவே அந்த மலையைச் சில நிமிடங்கள் பார்ப்பார்கள். பிறகு, கவனம் வேறெங்கோ போய்விடும்.
ஒருநாள் அவர் எதையோ மிக வியப்புடன் பார்ப்பதைக் கவனித்த சீடர்கள், 'குருவே அப்படி என்ன அதிசயம்?' என்று கேட்டனர். அதற்கு அவர், 'ஃப்யூஜி எரிமலையின் மீது ஒரு எறும்பு போய்க்கொண்டு இருக்கிறது' என்றார். 'இவருக்கு என்ன பைத்தியமா? ஏன் இதைப் பார்த்துச் சிரிக்கிறார்?' என்று ஒரு சீடன் ஆதங்கப்பட்டான். அவரிடம் துணிந்து அதைக் கேட்டும்விட்டான்.
|